செய்திகள் :

வருங்காலப் பத்திரிகையாளர்களை வரவேற்கிறோம்... ஊடக உலகில் ஓர் இயக்கம்...!

post image

ஆன்லைனில் விண்ணப்பிக்க: student.vikatan.com

மொபைலில் விண்ணப்பிக்க உங்கள்ஸ்மார்ட்போனில் இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்யவும்.

இளமையின் விசையை, திறமையின் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தங்கமான தருணம்... இதோ!

சமூக மாற்றத்துக்கு விதையாக, சமூக வளர்ச்சிக்குப் பாதையாக இருக்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்குக் களம் அமைக்கிறது விகடன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பயிற்சிபெற வாய்ப்பளித்து, பட்டைதீட்டும் விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பம்.

கையிலிருக்கும் செல்போனே தலைசிறந்த தகவல் தொடர்பு ஊடகமாக மாறியிருக்கும் இந்த நவீன காலத்தில் யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எனப் பல வழிகளில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான செய்திகள் வந்து சேர்கின்றன. அந்தச் செய்திகளைப் படிக்கும் ‘வாசகர்’ நிலையிலிருந்து, செய்தியை உருவாக்கி உலகத்துக்கு வழங்கும் ‘செய்தியாளர்’ நிலைக்கு உங்களை உயர்த்த, களம் அமைத்துத் தருகிறது இந்தத் திட்டம். கூடவே, இந்த ஆண்டு முதல் மார்க்கெட்டிங் துறையிலும் மாணவர்களுக்கான வாசலைத் திறந்திருக்கிறது. விகடன் பத்திரிகையாளர் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள், பல துறைகளில் தங்களுக்கெனத் தனி முத்திரை பதித்து, வெற்றிப்பாதைகளில் பயணிக்கிறார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, சட்டம், இலக்கியம், தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் எனத் தாங்கள் தடம் பதிக்கும் அனைத்துத் துறைகளிலும் வெற்றியாளர்களாக வலம்வருகிறார்கள்.

இதோ, இது உங்களுக்கான நேரம். இளமைக்கு ‘ஆ.வி.’, உண்மைக்கு ‘ஜூ.வி.’, பெண்மைக்கு ‘அவள்’, ஆன்மிகத்துக்கு ‘சக்தி’, பொருளுக்கு ‘நாணயம்’, பயணத்துக்கு ‘மோட்டார்’, வளமைக்கு ‘பசுமை’, இணையத்தில் ‘விகடன் டாட் காம்’, வைரல் களமான யூடியூபில் ஏராளமான சேனல்கள், சமூக ஊடகங்களில் நிமிடத்தில் அப்டேட் என உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கின்றன விகடனின் கரங்கள். அவற்றைப் பற்றிக்கொண்டு இணைந்து பயணிக்க, இது ஓர் அற்புத வாய்ப்பு.

1.7.2008-க்கு முன்பு பிறந்த அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியரும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவியர், தற்போது (2025 - 2026) கல்லூரியில் படிப்பவராகவும், அடுத்த ஆண்டு

(2026 - 2027) கல்லூரிப் படிப்பைத் தொடர்பவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2025 - 2026-ம் ஆண்டில் பள்ளி இறுதி ஆண்டு படிப்பவர்களோ அல்லது கல்லூரியில் எந்தப் பிரிவிலும் இறுதி ஆண்டு படிப்பவர்களோ விண்ணப்பிக்க இயலாது. அஞ்சல் வழி மற்றும் ஆன்லைன் கல்வி பயில்பவர்கள் இந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள இயலாது.

இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தாளைத் தமிழில் பூர்த்திசெய்து, கோரப்பட்டிருக்கும் இணைப்புகளோடு 31.03.2026-க்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் (விண்ணப்பத்தைப் பிரதி எடுத்தும் பயன்படுத்தலாம்). தகவல் தொடர்புக்காக உங்களுடைய அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அவசியம் தேவை. விண்ணப்பம் குறித்த முழு விவரங்களை, அடுத்து வரும் பக்கங்களில் காணலாம். விண்ணப்பத்தை முழுமையாகப் படித்துவிட்டு நிரப்புங்கள்.

ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் புகுந்து விளையாடும் த்ரில்லான களம் இது. உற்சாகமாகக் களமிறங்க உங்களையும் அழைக்கிறோம். வாழ்த்துகள்!

- ஆசிரியர்

விண்ணப்பத்துடன் தவறாமல் அனுப்பவேண்டியவை:

(அ) நிருபர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழ்க்காணும் 7 தலைப்புகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து, சொந்தக் கையெழுத்தில், தெளிவாகத் தமிழில் 4 பக்கங்களுக்குள் கட்டுரை எழுதி, அதை விண்ணபத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். இணைய தளம் அல்லது பிற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதக் கூடாது.

1. பழைய படங்கள் தியேட்டரில் ரீ-ரிலீஸ் ஆவதுதான் தற்போதைய டிரெண்ட். இது ஆரோக்கியமானதா அல்லது புதிய படங்களுக்கு ஆபத்தா? இது பற்றி உங்கள் கருத்து என்ன...

2. வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில், பிரதான அரசியல் கட்சிகளுக்கு காணப்படும் ப்ளஸ், மைனஸ் அம்சங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதவும்.

3. பேருந்தில் தன்னைப் பாலியல் சீண்டல் செய்ததாக ஒரு பெண் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவால் பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வியூஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக, சமூக வலைதளங்களில் எந்த எல்லைக்கும் போவது சரியா? இதனால் ஏற்படும் தாக்கம் பற்றி எழுதுங்கள்.

4. இயற்கை எழில், வரலாற்றுத்தலம், திருவிழா, பாரம்பர்ய பழக்கம் என உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள ஏதேனும் ஒரு ‘அட!’ போடவைக்கும் விஷயத்தைப் பற்றி எழுதவும்.

5. உங்கள் மாவட்டத்திலுள்ள ஒரு வணிக வெற்றியாளர் பற்றியும், அவர் தொழிலில் வெற்றியடைந்த கதையையும் எழுதவும். டிப்பார்ட்மென்ட்டல் ஸ்டோர் முதல் டெக் சொல்யூஷன்ஸ் வரை எந்தத் துறையைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்.

6. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பைக்கை ஆன்ரோடு விலை 65,000 ரூபாய்க்கு வாங்க முடிந்தது. இப்போது எந்த பைக்கையும் 1 லட்சத்துக்குக் குறைந்து வாங்க முடிவதில்லை. ஏன் இந்த விலையேற்றம்... இது குறித்து எழுதவும்.

7. உங்கள் சுற்றுப்புறத்தில் விவசாயம், ஆடு கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மண்புழு உரம் என்று வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுவரும் ஒருவரைச் சந்தித்து, மூலப்பொருள்கள், செய்முறை, பராமரிப்பு, வருமானம், லாபம் என முழு விவரங்களுடன் ஒரு கட்டுரை எழுதவும்.

(ஆ) புகைப்படக்காரராக மட்டும் பயிற்சிபெற விரும்பும் மாணவர் கட்டுரை அனுப்பத் தேவையில்லை. ஆனால், சொந்தமாக டிஜிட்டல் கேமரா வைத்திருக்க வேண்டும். எதிர்வரும் நாள்களில், உங்கள் பகுதியில் நடக்கும் ஏதாவது ஒரு சம்பவத்தைப் படங்களாக அல்லது வீடியோவாக எடுத்து, அவற்றுக்கான குறிப்புகளோடு ஆன்லைன் விண்ணப்பத்தில் டிஜிட்டல் வடிவில் அப்லோடு செய்ய வேண்டும்.

(இ) ‘நிருபர் + புகைப்படக்காரர்’ பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மேற்கூறிய (அ, ஆ) இரண்டையும் செய்ய வேண்டும்.

(ஈ) வீடியோ எடிட்டர் பிரிவுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே நீங்கள் எடிட் செய்த வீடியோக்கள் சிலவற்றின் லிங்க்குகளை (Link) ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

(உ) நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரிவுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்போர் 90 விநாடிகளுக்கு ஒரு ரீல் செய்ய வேண்டும். உங்களுக்குப் பிடித்த பிரபலம், உங்கள் ஊரிலுள்ள சுற்றுலாத்தலங்கள், இப்படி ஏதாவது ஒரு டாபிக்கை எடுத்து, அதை ரீலாகச் செய்ய வேண்டும். ரீல் விறுவிறுப்பாகவும் சுவராசியமாகவும் இருத்தல் அவசியம். ரீலை ஆன்லைன் விண்ணப்பத்தில் அப்லோடு செய்ய வேண்டும்.

(ஊ) மார்க்கெட்டிங் ட்ரெய்னி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழ்க்காணும் கேள்விக்கான பதிலை 4 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி அனுப்ப வேண்டும்.

தற்போது விகடன் நடத்திவரும் சினிமா விருதுகள், நம்பிக்கை விருதுகள், அவள் விகடன் விருதுகள், சின்னத்திரை விருதுகள், டிஜிட்டல் விருதுகள்போல, அடுத்து என்ன நிகழ்ச்சி நடத்தலாம்... மேலும், அந்த நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்ய நீங்கள் அணுக விரும்பும் ஒரு பிராண்ட் எது... அந்த பிராண்டை சம்மதிக்கவைக்க நீங்கள் சொல்லும் ஸ்மார்ட்டான மூன்று காரணங்களைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.

விண்ணப்பத்தாளை உண்மையாகவும் முழுமையாகவும் பூர்த்திசெய்து, 31.03.2026-க்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்தத் திட்டம் சம்பந்தமாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது. அடுத்தகட்டமாக சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, திருவாரூர், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஒன்பது ஊர்களில் எழுத்துத் தேர்வு நடக்கும். முதற்கட்டத்தில் தேர்வுபெறும் மாணவர்கள், மேற்கண்ட ஊர்களில் ஏதாவது ஒன்றில் தேர்வு எழுத அழைக்கப்படுவார்கள். எங்களிடமிருந்து அழைப்பு கிடைக்கப் பெறாதவர்கள்,

முதற்கட்டப் பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி: மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

விகடன் சம்பவம்!

ஐந்து தலைமுறையா நம்ம வீட்டுப் பிள்ளையா, முறுக்குக் காட்டும் மாப்பிள்ளையா, பல நேரம் நண்பனா இருந்த விகடன் இப்போ ‘செஞ்சுரி’ அடிக்கிறான்! இந்த 100 வருஷத்துல எத்தனையோ முறை எங்களை நீங்க கொண்டாடுனீங்க... இப்... மேலும் பார்க்க