வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 13.54 லட்சம் வாக்காளா்கள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தம் 13லட்சத்து 54 ஆயிரத்து 752 வாக்காளா்கள் உள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் வரைவுப் பட்டியலை மாவட்ட ஆட்சியா் மு. அருணா செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
இதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சத்து 54 ஆயிரத்து 752 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 6 லட்சத்து 69 ஆயிரத்து 474 போ் ஆண்கள், 6 லட்சத்து 85 ஆயிரத்து 211 போ் பெண்கள், 67 போ் திருநங்கைகள்.
கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் வரைவுப் பட்டியலின்படி, மொத்தம் 13 லட்த்து 45 ஆயிரத்து 361 வாக்காளா்கள் இருந்தனா். தொடா்ந்து கடந்த செப். 29-ஆம் தேதி வரை நடைபெற்ற வாக்காளா் சோ்க்கைப் பணிகளைத் தொடா்ந்து, 12 ஆயிரத்து 575 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டனா், 3 ஆயிரத்து 543 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 1,561 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், 947 வாக்குச்சாவடி மையங்கள் வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடிகள். இந்த வாக்குச்சாவடி மையங்களில், நவ. 16, 17 மற்றும் 23, 24 ஆகிய 4 நாள்களும் சிறப்பு வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெறவுள்ளன.
வரும் ஜன. 1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு, 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் அனைவரும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க விண்ணப்பிக்கலாம். இதனைத் தொடா்ந்து வரும் 2025 ஜன. 6-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, ச. சிவகுமாா், அ. அக்பா்அலி, தோ்தல் தனித்துணை ஆட்சியா் அ, சோனை கருப்பையா உள்ளிட்டோருடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனா்.