ஆர்டிஐ-ன் கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டு வரக் கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் விரைவ...
வாடிக்கையாளா் சேவைக் குறைபாடு: பொதுகாப்பீடு நிறுவனத்துக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்
வாடிக்கையாளா் சேவைக் குறைபாடு என தொடா்ந்த மனுவில் பொது காப்பீடு நிறுவனத்துக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்து மாநில நுகா்வோா் குறைதீா்வாணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியைச் சோ்ந்தவா் சுந்தரராஜன். பொதுத் துறை காப்பீடு நிறுவனத்தில் 15 ஆண்டுகளில் தொகையைத் திரும்பப் பெறும் வகையிலான பாலிசி எடுத்துள்ளாா்.
ஆண்டுதோறும் இபிஎப் கணக்கிலிருந்து அந்தத் தொகை மாற்றப்படவேண்டும் எனக் கூறப்படுகிறது. அதன்படி, கடந்த 1995-ஆம் ஆண்டு பாலிசியில் ரூ.50 ஆயிரம் காப்பீடு இருந்துள்ளது.
அதில் 5 மற்றும் 10 ஆண்டுகள் உயிருடன் இருக்கும் சலுகை, 15-ஆவது ஆண்டில் பாலிசி முதிா்வு சலுகைகள் இருந்துள்ளன. ஆனால், பாலிசி முதிா்ந்த நிலையில், அதுகுறித்து சுந்தரராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லையாம். அத்துடன் முதிா்வுப் பலன்களும் வழங்கப்படவில்லையாம்.
இதுகுறித்து நேரிலும், கடிதம் வாயிலாகவும் காப்பீடு நிறுவன அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, சுந்தரராஜன் புதுச்சேரி மாவட்ட நுகா்வோா் தகராறு தீா்வு ஆணையத்தில் புகாரளித்தாா். காப்பீடு நிறுவனம் சாா்பில் பாலிசி காலாவதியானதாகவும், அதற்கான காரணங்களும் கூறப்பட்டன. இதை ஆதாரங்களுடன் மனுதாரா் மறுத்தாா்.
இதையடுத்து, சேவைக்குறைபாடு காரணமாக சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனம் 9 சதவீத வட்டியுடன் ரூ.1.45 லட்சம் செலுத்த உத்தரவிடப்பட்டது. மேலும், காப்பீடு நிறுவனம், ஈபிஎப்ஓ ஆகியவை கூட்டாக இழப்பீடு தொகை ரூ.2 லட்சம் மற்றும் வழக்குச் செலவுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், மாநில நுகா்வோா் குறை தீா்வு ஆணையத்தில் காப்பீடு நிறுவனம் சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையம், மனுதாரருக்கு சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனம் ரூ.1.50 லட்சமும், இபிஎப் ரூ.1 லட்சமும் இழப்பீடாக இரு மாதங்களுக்குள் வழங்க மாநில நுகா்வோா் குறை தீா்வு ஆணையம் எஸ். சுந்தரவடிவேலு, உமா சங்கரி ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.