மேற்கு வங்கம்: தனித்து போட்டியிடும் காங்கிரஸ்; உருவாகும் நான்கு முனைப்போட்டி - ப...
விழாக்கோலம் பூண்ட ரயில்: மும்பை ரயிலில் கர்ப்பிணி பயணிக்கு வளைகாப்பு நடத்திய சக பெண் பயணிகள்!
மும்பையில் புறநகர் ரயில் மக்களின் உயிர் நாடியாக இருக்கிறது. அந்த ரயிலில் ஆண்களுக்கு நிகராக தினமும் ஆயிரக்கணக்கான பெண்களும் பயணம் செய்கின்றனர். அவர்கள் மும்பை புறநகர் பகுதியில் இருந்து தினமும் மும்பைக்கு வேலைக்கு வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் ரயிலில் ஏறுவதற்கு தினமும் பெரிய போராட்டமே நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
கர்ப்பிணி பெண்கள் கூட அவர்களோடு போராடித்தான் அன்றாடம் வேலைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. புறநகர் ரயிலில் பெண்களுக்கு தனியாக பெட்டிகள் இருந்தாலும், அதிலும் காலை மற்றும் மாலை நேரத்தில் கூட்டம் நிரம்பி வழியும்.
பொதுவாக இது போன்று புறநகர் ரயிலில் தினமும் செல்பவர்கள் நண்பர்களாகி விடுவார்கள். ரயிலில் அவர்கள் ஒவ்வொரு விழாவையும் கொண்டாடுவதுண்டு. மும்பை புறநகர் ரயிலில் நடந்த அது போன்ற ஒரு விழா சமூக வலைத்தில் வைரலாகி இருக்கிறது.

கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அவருடன் அன்றாடம் புறநகர் ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் ஒன்று சேர்ந்து வளைகாப்பு விழா நடத்தி இருக்கின்றனர்.
இதற்காக அப்பெண் பயணிகள் தாங்கள் பயணம் செய்த ரயில் பெட்டியை பலூன் மூலம் அலங்கரித்தனர். அவர்கள் ரயில் பெட்டியை பிங்க் கலரில் பேனரால் அழகுபடுத்தி இருந்தனர், அம்மாவாக போகும் பெண் அழகாக சேலை உடுத்தி விழா நாயகியாக அமர்ந்திருந்தார். அவர் அம்மாவாக போகிறவர் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெரிய ரிப்பன் ஒன்றை அப்பெண் அணிந்திருந்தார். வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட பயணிகள் கர்ப்பிணி பெண்ணிற்கு நெற்றியில் குங்குமம் வைத்து பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
அதோடு அவர்கள் கொண்டு வந்திருந்த இனிப்பை அவர்கள் கர்ப்பிணி பெண்ணிற்கு கொடுத்து பகிர்ந்து சாப்பிட்டனர். இந்த நிகழ்வால் அந்த ரயில் பெட்டியே விழாக்கோலம் பூண்டது. அவர்கள் வளைகாப்பு நடத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதனை பார்த்த சிலர் இனி சிலர் புறநகர் ரயிலில் திருமணமும் செய்து கொள்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த வீடியோவை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
அன்றாடம் பயணம் செய்யும் பயணிகளுக்கு மும்பை புறநகர் ரயில் குடும்பத்தில் ஒன்றாகவே மாறிவிட்டதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். மகிழ்ச்சியை கொண்டாட தனி ஹால் தேவையில்லை என்றும், எங்கேயும் கொண்டாட முடியும் என்பதை மும்பை புறநகர் ரயில் பயணிகள் நிரூபித்துள்ளனர்.




















