`அதே அரவணைப்பு, எளிமை...' - முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சிம்ர...
வீட்டுக்குள் மாந்திரீகம்; ரத்தக் காயங்களுடன் சிறுவன் பிணம்; விசாரணை வளையத்துக்குள் பாட்டி - கொலையா?
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள மேல்பட்டி கிராமம் ஆச்சாரி தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரின் மனைவி ஆஷா. இருவருக்கும் திருமணமாகி ஏழாண்டுகள் ஆகிறது. 6 வயதில் முகிலன் என்ற ஒரேயொரு மகன் மட்டும் இருந்தான்.
இந்த நிலையில், ராஜேஷ்குமாரும், ஆஷாவும் கருத்து வேறுபாடு காரணமாக 5 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்துவந்தனர். 2 மாதங்களுக்கு முன்புதான் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கினர். ராஜேஷ்குமார் திருப்பூரில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்துவந்ததால், மனைவி ஆஷாவையும் தன்னுடனேயே அழைத்து சென்றுவிட்டார். மகன் முகிலனையும் தங்களுடனேயே தங்க வைத்துக்கொண்டனர்.

சிறுவன் முகிலனுக்கு இருதய பாதிப்பு பிரச்னையும் இருந்ததால், அதற்கான மருத்துவ பரிசோதனையும் எடுத்துவந்திருக்கின்றனர். இதனிடையே, கடந்த மே மாதம் 5-ம் தேதி, ராஜேஷ்குமாரின் தாயார் விஜயா திருப்பூருக்குச் சென்று தனது பேரப்பிள்ளையை வற்புறுத்தி தன்னுடன் மேல்பட்டி கிராமத்திலுள்ள தனது வீட்டுக்கு அழைத்துவந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் நேற்று மாலை சிறுவன் முகிலன் மர்மமான முறையில் அவனது பாட்டி வீட்டில் இறந்துகிடந்தான். கண்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது. வலது கண்ணின் கீழ்ப் பகுதியிலும், தாடையிலும் ரத்த காயம் இருக்கிறது. பேரன் இறந்துகிடந்தபோதும், எந்தவிதமான அதிர்ச்சியும் இல்லாமல் பாட்டி விஜயா சாதாரணமாக காணப்பட்டிருக்கிறார்.
``காம்பவுண்ட் சுவர் மீது ஏறி கீழே விழுந்துவிட்டான். அப்போது, நான் வீட்டின் வராண்டாவில் படுத்திருந்தேன். சத்தம்கேட்டு எழுந்து பார்த்தபோது, பேச்சு மூச்சு இல்லாமல் கீழே விழுந்து கிடந்தான். அதன்பிறகு, பேரனின் மாமன் மகாலிங்கம் என்பவருக்குத் தகவல் தெரிவித்தேன். அவர் வந்து குழந்தையைப் பார்த்துவிட்டு `இறந்துவிட்டான்’ என்றதால், மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லவில்லை’’ என்று பாட்டி விஜயா கூறியிருக்கிறார். பாட்டி விஜயாவின் நடவடிக்கைகள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அக்கம் பக்கத்தினர் மேல்பட்டி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரியப்படுத்தினர்.

போலீஸார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் சிறுவனின் உடலை பார்வையிட்டனர். கண் பகுதியில் வீக்கம் எப்படி ஏற்பட்டது? உதடு, தாடை ஆகிய இடங்களில் ரத்தக் காயம் எதனால், எந்த வகையான ஆயுதத்தால் ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது? சிறுவனின் முதுகு மற்றும் உடலின் பல பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சிராய்ப்பு கன்றிய காயங்கள் மற்றும் பழைய காயங்கள் எதனால் எப்படி ஏற்பட்டது? என்று பல்வேறு கேள்விகளை அடுக்கி, பாட்டி விஜயாவிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். அவரிடம் எந்த பதிலும் இல்லை. இதையடுத்து, சிறுவனின் உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீடு முழுவதும் மாந்திரீக பூஜை பொருள்களும் இருந்தன. விஜயாவும் மாந்திரீக காரியங்களில் அதீத நம்பிக்கையுடையவராம். நேற்றைய தினம் `அமாவாசை’ என்பதால், விஜயாவின் நடவடிக்கைகளுமே சந்தேகமாகத்தான் இருந்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். இதனால், பாட்டி விஜயாவின் மீது போலீஸாரின் பிடி இறுகியிருக்கிறது. கொலையா? என்ற கோணத்திலும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதால், இந்தச் சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



















