தூத்துக்குடி: திருமணமான இரண்டே நாளில் நகை, பணத்துடன் மாயமான இளம்பெண்; பதறிய இளைஞ...
வெற்றிப் பயணத்தில் பங்கு கொண்டுள்ள அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
வாசகர்களாகிய உங்களின் பேராதரவோடு, 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, பசுமை விகடன். இந்த வெற்றிப் பயணத்தில் பங்கு கொண்டுள்ள அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றி சொல்ல வேண்டிய நெகிழ்வான தருணம் இது.
மாற்றம் ஒன்றே மாறாதது. பசுமை விகடனின் வருகைக்குப் பிறகு, கடந்த 19 ஆண்டுகளில் தமிழக வேளாண்மையிலும் மக்களின் உணவுப் பழக்கத்திலும் ஏற்படத் தொடங்கியுள்ள மாற்றங்கள் ஆத்ம திருப்தியும் நம்பிக்கையும் அளிக்கின்றன. ‘ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் வெற்றிகரமாக விளைச்சல் எடுக்க வாய்ப்பே இல்லை’ எனச் சத்தியம் செய்தவர்களும்கூட, இன்று இயற்கை விவசாயத்தில் லாபம் பார்த்து, இயற்கை விவசாயத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறார்கள்.
இயற்கை வேளாண் விளைபொருள்களின் அவசியம் குறித்து மக்களிடம் பேரலை வீசுகிறது. பாரம்பர்ய அரிசி வகைகள், சிறுதானியங்கள், நாட்டுக் காய்கறிகள், மரச்செக்கு எண்ணெய், நாட்டு மாட்டுப்பால் ஆகியவற்றுக்கு மக்களிடம் அமோக ஆதரவு உருவாகியுள்ளது. இத்தனை மாற்றங்களுக்கும் பசுமை விகடன் அச்சாணியாகவும் சாரதியாகவும் இருந்து வருகிறது எனக் கூறும் பலரும், இன்னும் பயணிக்க ஊக்கம் கொடுக்கிறார்கள்.
தமிழக வேளாண்மையும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரமும் மேம்பட, பசுமை விகடன் எழுத்துப்பணியோடு மட்டும் நின்றுவிடவில்லை. இயற்கை வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, பண்ணைத் தொழில்கள், நீர் மேலாண்மை, மதிப்புக்கூட்டல், மாடித்தோட்டம் என அனைத்து தளங்களிலும் கொடுத்த பயிற்சிகள் ஏராளம். மேலும்,விவசாயிகளுக்கு எதிரான அநீதிகளைக் கண்டித்து ஓங்கிக் குரல் கொடுப்பதிலும் பசுமை விகடன் முன்களப் போராளியாக நிற்கிறது.
தற்போது 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பசுமை விகடன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் விவசாயிகள், வாசகர்கள், இயற்கை வேளாண் செயற்பாட்டாளர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் மற்றும் கால்நடை கல்வி நிறுவனத்தினர், அரசாங்கத்தின் பல்வேறு துறையினர், விளம்பரதாரர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
என்றென்றும் இணைந்திருப்போம்... ஒரு பசுமை இயக்கமாக!



















