முலாயம் சிங் யாதவ் மகன் பிரதீக் யாதவ் 38 வயதில் மர்ம மரணம்! - போலீஸ் விசாரணை
வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தடை! – காரணம் என்ன?
தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை, கோவை அருகேயுள்ள பூண்டி பகுதியில் அமைந்துள்ளது. பூண்டி அடிவாரத்தில் இருந்து, மலை மீது அமைந்துள்ள சுயம்புலிங்கத்தை தரிசிக்க 5.5 கி.மீ தூரம் மலைப்பாதையில் வனப்பகுதிகள் வழியாக மலையேற்றம் செய்ய வேண்டும். இந்த மலையில் ஏழு ஏற்ற இறக்கங்கள் இருப்பதால், மலையேற்றம் செய்பவர்களுக்கு ஏழு மலைகள் ஏறியதைப் போன்ற அனுபவம் ஏற்படுவதால், இதனை ஏழுமலை எனவும் அழைக்கின்றனர். வெள்ளியங்கிரி மலையேற ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர். குறிப்பாக மகா சிவராத்திரி முதல் சித்ரா பெளர்ணமி வரை அதிக அளவிலான பக்தர்கள் மலையேறுவது வழக்கம். இதன்படி இந்தாண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி வந்தனர்.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இனி வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை அதிகளவு இருக்கும் என்பதால், பக்தர்கள் நலன் கருதி வெள்ளியங்கிரி மலையேற தடை விதிக்க அறிவுறுத்தப்பட்டது. இதன்படி இன்று முதல் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு தற்காலிகமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வெள்ளியங்கிரி மலையேற மே மாதம் இறுதிவரை அனுமதி வழங்கப்படும் நிலையில், 2 வாரங்களுக்கு முன்னதாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.


















