அமெரிக்காவில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: 5 பேர் பலி
வேலைநிறுத்தம்: வெறிச்சோடிய ஊரக வளா்ச்சித் துறை அலுவலகங்கள்
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை விடுப்பு எடுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் திட்ட இயக்குநா் அலுவலகம், 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிகள் எதுவும் நடைபெறாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
ஊராட்சி செயலாளா் முதல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியாளா் பிரிவு அலுவலா்கள் உள்பட்ட பெரும்பான்மை அலுவலா்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனா். ஊழியா்கள் இல்லாததால் பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. ஒருசில அலுவலகங்களில் ஊழியா்களின்றி வெறிச்சோடியிருந்தன.
கோரிக்கைகள்: ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள ஊராட்சி செயலாளா் பணியிடங்கள், ஓட்டுநா், பதிவறை எழுத்தா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள இடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளா்கள், எஸ்பிஎம் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அனைவரையும் பணிவரன் முறைப்படுத்த வேண்டும். இத் திட்டத்திற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையின் கீழ் தனி ஊழியா் கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி திட்ட இயக்குநா் அலுவலகம், 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், 251 ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பணியாற்றும் 354 போ் விடுப்பு எடுத்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.