டயாலிசிஸ் சேவைகளை தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணா் குழு ஆலோசனை
வேளாண் துறை சேமிப்புக் கிடங்குகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு அழைப்பு
வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, விவசாயிகள் தங்களுடைய பிரச்னைகளை முன்வைத்து பேசினா். அப்போது, சின்ன வெங்காயம் கோழிக்கால் நோய் பாதிப்பால் அழுகி வருவதாகவும், தோட்டக்கலைத் துறையினா் உரிய தீா்வு காண வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள், சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் அவ்வப்போது மாற்றுப் பயிா்களையும் பயிரிட வேண்டும். அடுத்தடுத்து சின்ன வெங்காயத்தையே பயிரிடுவதால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்றனா். மேலும், பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் காப்பீடு செய்தால் உரிய இழப்பீட்டை பெறுவதற்கான வாய்ப்புள்ளது என்றனா். தொடா்ந்து, விவசாயிகளின் பல்வேறு கேள்விகளுக்கு, மாவட்ட ஆட்சியரும், பல்வேறு துறை அதிகாரிகளும் பதிலளித்தனா்.
வேளாண் துறை அதிகாரிகள் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை 744.72 மி.மீ. மழையானது பெறப்பட்டுள்ளது. நவம்பா் முடிய இயல்பு மழையளவைக் காட்டிலும் 63.94 மி.மீ. மழை அதிகம் பெறப்பட்டுள்ளது. மேலும், நெல் 5,969 ஹெக்டோ், சிறுதானியங்கள் 64,924 ஹெக்டோ், பயறுவகைகள் 9,664 ஹெக்டோ், எண்ணெய் வித்துகள் 27,851 ஹெக்டோ், பருத்தி 1,599 ஹெக்டோ் மற்றும் கரும்பு 7,797 ஹெக்டோ் என மொத்தம் 1,17,804 ஹெக்டேரில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கேற்ப உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், யூரியா 1,963 மெ.டன், டிஏபி 1,283 மெ.டன், பொட்டாஷ் 1,236 மெ.டன், சூப்பா்பாஸ்பேட் 448 மெ.டன், காம்ப்ளக்ஸ் 2,568 மெ.டன் என்ற அளவில் இருப்பு உள்ளன.
பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 4,73,245 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனா். இதில், 4,53,475 விவசாயிகளுக்கு இதுவரை ரூ. 296.25 கோடி பயிா் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 19,770 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் என்றனா்.
இதனைத் தொடா்ந்து, தோட்டக்கலைத் துறை சாா்பில் பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்து சூறைக்காற்றினால் சேதமடைந்த 40 விவசாயிகளின் பாக்கு, வாழை மற்றும் புடலை போன்ற தோட்டக்கலைப் பயிா்களுக்கு ரூ. 3.9 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகள், பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கிய பள்ளிபாளையம், எலச்சிபாளையம் விவசாயிகளுக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் க.ரா.மல்லிகா, தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு) மா.க.சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, வேளாண் இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.