விசிக, கம்யூனிஸ்டுகளைத் தொடர்ந்து காங்கிரஸ்... மதுரையில் கலெக்டருக்கு எதிராக குற...
`ஸ்டேன் சுவாமிக்கு நினைவுத் தூண் அமைக்க தடையில்லை' - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றம் மறைந்த மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சுவாமிக்கு நினைவுத்தூண் அமைப்பதற்கு சட்ட அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தனியார் நிலத்தில் ஒருவரின் சிலை வைப்பது அவரவர் விருப்பம் என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்றும் தன் தீர்ப்பில் கூறியுள்ளது.
சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ், நெக்குண்டி கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் மறைந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி படம் பொறித்த நினைவுத்தூண் ஒன்றை நிறுவ திட்டமிட்டார்
2021ல் தர்மபுரி மாவட்டத்துக்குட்பட்ட நல்லம்பள்ளி தாசில்தார், ஸ்டேன் சாமிக்கு நினைவுத்தூண் அமைத்தது சட்டப்படி தவறு என்றும் இதற்கு முறையாக அனுமதி வாங்கவில்லை என்றும் பியூஷ் மனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சென்றது. ஸ்டேன் சாமி நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் போன்ற ஆயுத குழுக்களோடு தொடர்பில் இருந்தவர் என்றும் அவருக்கு சிலை அமைப்பதால் அந்த பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் வரும் என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இது சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் கருத்தை பரப்பும் நோக்கம் எனவும் வாதிடப்பட்டது.
அரசின் வாதத்தை மறுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம் தண்டபாணி, ஸ்டேன் சாமி மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அந்த குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றது எனவும் கூறினார். ஸ்டேன் சுவாமி பழங்குடியினரின் நலனுக்காக போராடியவர். அவருக்கு நினைவுத்தூண் வைப்பதில் எந்த தவறும் இல்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் சட்டத்தில் தனியார் நிலத்தில் சிலை அமைப்பதற்கு இடம் உள்ளது என குறிப்பிட்டார். பியூஷ் மனுஷ் தன் இடத்தில் ஸ்டேன் சுவாமிக்கு நினைவுத்தூண் நிறுவ அனுமதி அளித்து தீர்ப்பளித்து இந்த வழக்கை முடித்துவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
யார் இந்த ஸ்டேன் சுவாமி?
ஸ்டேன் சுவாமி பழங்குடியின மக்களின் நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடி உயிர் நீத்த பாதிரியார் ஆவார். 1937ல் திருச்சியில் பிறந்த ஸ்டேன் சுவாமி, ஏசுசபை நடத்தும் இந்திய சமூக நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றினார். அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும் பழங்குடியினருக்கு ஆதரவாகவும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார். 1996ல் பழங்குடியினர் கிராமப் பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டம் வேண்டி குரல் எழுப்பினார்.
2018ல் பீமா கோரேகான் வன்முறையில் தொடர்பு இருப்பதாகவும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறி இவர் மேல் ஊபா சட்டம் பாய்ந்தது. பின்னர் என்ஐஏ இவரை கைது செய்தது.
சிறையில் அடைக்கப்பட்ட ஸ்டேன் சுவாமி, நரம்புத்தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டார். சிறுநீர் கழிக்க கூட அனுமதிக்காத கொடுமை அவருக்கு நடந்ததாகவும் கூறப்படுகிறது. சிறையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என பல தரப்பினர் குற்றஞ்சாட்டினர். பின்னர் 2021ல் கடுமையான உடல்நலக்கோளாரால் உயிரிழந்தார் ஸ்டேன் சுவாமி.