கௌரி கிஷன் விவகாரம்: பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட `அதர்ஸ்' பட நடிகர் ஆதித்யா மாத...
1 லட்சம் சிலந்திகளுடன் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலை கண்டுபிடிப்பு - எங்கே தெரியுமா?
ருமேனிய விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலையைக் கண்டுபிடித்துள்ளனர். கிரீஸ்-அல்பேனியா எல்லையில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்ட குகைக்குள், சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் சிலந்திகள் ஒன்றாக வசிக்கும் இந்த ராட்சத வலையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குகையின் இருள் சூழ்ந்த பகுதியில், ஆயிரக்கணக்கான புனல் வடிவ வலைகள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு ஒரு பட்டு கூடாரம் போல பரந்து விரிந்திருக்கும் சிலந்தி வலையை கண்டு விஞ்ஞானிகள் மெய்சிலிர்த்துள்ளனர். இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட சிலந்தி வலைகளிலேயே இதுதான் மிகப்பெரியது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பில் விஞ்ஞானிகளை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம், இந்த வலையில் வசிக்கும் சிலந்திகளின் வகைகள்தான். பொதுவாக தனித்து வாழும் குணம் கொண்ட, ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு சிலந்தி இனங்கள் (பார்ன் ஃபனல் வீவர் மற்றும் ஷீட் வீவர்) இங்கு ஒரே வலையில் சமாதானமாக வாழ்ந்து வந்தது விஞ்ஞானிகளை மேலும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

கிரீஸ் மற்றும் அல்பேனியா நாடுகளின் எல்லையில், 1,140 அடி உயரத்தில் இருக்கும் அந்த குகையை ஆய்வு செய்தபோது இந்த அதிசயத்தைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் இஸ்த்வான் உராக் இது குறித்து கூறுகையில், "அந்த வலையைக் கண்டபோது எனக்குள் ஏற்பட்ட பிரமிப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது, நேரில் அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்" என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்த சிலந்தி வலையின் பிரமாண்டத்தைக் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.















