தொகுதி் பங்கீடு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த அறிவாலயம்... விசிக-வின் கணக்கு என்ன?
"100 நாளும் கடன் வாங்கித்தான் சமாளிச்சாங்க; இப்பவும் கடனுக்காத்தான் ஓடுறேன்" - பிக்பாஸ் சுபிக்ஷா
'ஹாய் மக்களே, நான் உங்கள் மீனவப் பொண்ணு சுபி' என கடல் விலாக் செய்யும் தமிழகத்தின் முதல் பெண், யூடியூபராக அறிமுகம் ஆனவர் மீனவப் பொண்ணு சுபிக்ஷா. பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து ஷூட், மாடலிங் என பிஸியாகிருப்பவரிடம் பேசினோம்.

"மீனவப் பொண்ணுங்கிறது' தான் என் அடையாளம். எங்க குடும்பத்தொழில் மீன் பிடிக்குறதுதான். நான் பி. ஏ இங்கிலீஷ் படிச்சிருக்கேன். வாழ்க்கையில அடுத்தகட்டம் பத்தி யோசிச்சப்போ கடலைத் தவிர வேற எதுவுமே தோணல. அதனால நானும் மீன் பிடிக்க வர்றேன்னு அப்பாகிட்ட கேட்டேன். ஆறு மாச போராட்டத்துக்குப் பிறகு, கடலுக்குக் கூட்டிட்டுப் போக அப்பா ஓ.கே சொன்னாரு. மீனவர்களோட வாழ்க்கை முறை, கடலுக்குப்போறது, மீன் பிடிக்கிறதுன்னு எல்லாத்தையும் போன்ல வீடியோ எடுத்து நானே எடிட் பண்ணி சோஷியல் மீடியாவுல பதிவிட ஆரம்பிச்சேன். 'இப்படி வீடியோ எடுத்துப் போடுறதுனால மட்டும் நம்ம தலையெழுத்து மாறப்போகுதா'னு கேள்விகள் இருந்துச்சு. ஆனா, ஏதோ ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும்னு எனக்குத் தோணுச்சு. என் வீடியோக்கள் மூலம் என்னோட இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள்ல ஃபாலோயர்ஸ் அதிகமாக ஆரம்பிச்சாங்க. அப்புறம்தான் கருவாடு ஊறுகாய் தயாரிக்கிற பிசினஸை ஆரம்பிச்சோம்.
இப்படியான சூழல்ல தான் பிக்பாஸ் வாய்ப்பு வந்துச்சு. அந்த போன் கால் உண்மையானு உணர்வதற்கே எனக்கு சில மணி நேரம் ஆச்சு. ரொம்ப பெரிய வாய்ப்பு. அதை மிஸ் பண்ணக்கூடாதுனு நினைச்சேன். அப்பா உடனே ஓ.கே சொல்லிட்டாரு. அம்மாதான் கொஞ்சம் தயங்குனாங்க. எப்படி பேசாம இருக்குறதுனு யோசிச்சாங்க. ஒரு வழியா அம்மாவை சம்மதிக்க வெச்சுட்டேன்.

நிகழ்ச்சி ஆரம்பிக்கிறதுக்கு ரெண்டு வாரம் முன்னாடிதான் எனக்கு சொன்னாங்க. நான் கடலுக்கு போக ஆரம்பிச்சப் பிறகு, குடும்ப செலவுகளை நான் தான் பார்த்துக்கிட்டு இருந்தேன். திடீர்னு நிகழ்சிக்கு வாங்கனு சொன்னதும் என் குடும்பம் 100 நாள் செலவுக்கு என்ன பண்ணும்னுதான் முதல்ல யோசிச்சேன். என்கிட்ட நிகழ்ச்சிக்குப் போட்டுட்டு போற மாதிரியான ட்ரெஸ்கள் கூட இல்ல.
ஆன்லைன்ல சில பிராண்ட்களை தொடர்பு கொண்டு கொலாபரேஷன்ல ட்ரெஸ்கள் கேட்டேன். சிலர் என்னை நம்பக் கூட இல்ல. சில பேர்கிட்ட இருந்து பதிலே வரல. ஒரு பிராண்ட்ல இருந்து ட்ரெஸ் கொடுக்க முன் வந்தாங்க. ஒரு சில ட்ரெஸ்களோட தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள்ள போனேன்.100 நாள் குடும்பத்துக்கான செலவுகளை கடன் வாங்கிதான் சரிகட்டிருக்கோம்" என்ற சுபியிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாள்கள் பற்றிக் கேட்டோம்.

"நான் ஒரு எளிய குடும்பத்துல இருந்து வந்தப் பொண்ணு. ஆரம்பத்தில் எல்லார் கூடவும் பழக கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்துச்சு. ஆனா, அந்த வீட்டில் இருக்கணும்னா எல்லார் கூடவும் பழகிதான் ஆகணுங்கிற சூழல். பழக ஆரம்பிச்சேன். இந்த சீசனோட முதல் பிரச்னையே எனக்கும் பார்வதிக்கும்தான் வந்துச்சு. அதுல ரொம்பவே டவுன் ஆனேன். அதுக்கு அப்புறம் நார்மல் ஆக ஆரம்பிச்சேன். 50 நாள் வரைக்கும் நார்மலாகத்தான் போச்சு. அதுக்கு அப்புறம் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக ஆரம்பிச்சுது. போட்டிகள், சண்டைகள், வீக் எண்ட் பரபரப்புகள்னு எப்போதுமே ஒரு பரபரப்பும், அழுத்தமும் இருந்துட்டேதான் இருக்கும். கார் டாஸ்க் நடக்கும்போது மனஅழுதத்தோட உச்சதுக்கே போயிட்டேன்.
போட்டிக்காக இப்படியெல்லாம் பண்ணுவாங்களானு தோணுச்சு. அங்க இருக்கும் போது நம்மைச் சுத்தி என்ன நடக்குது, யார் என்ன சொன்னாங்க இப்படி எதுவுமே தெரியாது. நிகழ்ச்சி முடிஞ்சு வெளிய வந்த பிறகு ஆரோரா, திவ்யா, விக்ரம் அண்ணா, வினோத் அண்ணானு சிலர் கூட நட்பு தொடருது...
" என்றவரிடம் பிக்பாஸ்க்கு முன், பிக்பாஸ்க்குப் பின் உங்க வாழ்க்கையில நடந்த மாற்றங்கள் பற்றிச் சொல்லுங்க என்ற கேள்வியை முன் வைத்தோம்.

"போற இடத்துல எல்லாம் மக்களோட அன்பு கிடைக்குது. எங்க அப்பா ரொம்ப பெருமையா ஃ பீல் பன்றாங்க. எனக்காக அப்பா கொடுத்த சப்போர்ட்க்கு நான் நியாயம் சேர்த்துருக்கேன்னு நினைக்கிறேன். சில இடங்கள்ல விமர்சனங்களும் இருக்கு. ' நீ மீனவப் பொண்ணுதான. பிக்பாஸ் போயிட்டு வந்து சீன் போடுற', 'ஆளே மாறிட்ட'னு எல்லாம் கமென்ட் பண்றாங்க. பொதுவா மீனவப் பெண்கள்னா சேலைகட்டி, கொண்டை போட்டுட்டு இருப்பாங்க. ஆனா, நான் வித்தியாசமா பேன்ட் - ஷர்ட் போட்டுதான் விலாக் பண்ண ஆரம்பிச்சேன். ஆனா, வாழ்க்கை முழுக்க நான் அப்படியே இருக்கணும்னு அவசியம் இல்லயே. கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறேன். எனக்கு பிடிச்ச மாதிரியான ட்ரெஸ்களை வாங்கிப் போடுறேன். சேலை கட்டுனா கூட கமென்ட் பண்றவங்களை என்ன பண்றது? என்னோட வாழ்க்கையை எனக்கு பிடிச்ச மாதிரி வாழ உரிமை இருக்குதானே" என்றவரிடம் நிகழ்ச்சியில் உங்களுக்கு லட்சங்களில் சம்பளம் என்று சொல்லப்பட்டதே? என்ற கேள்வியை முன்வைத்தோம்.
- சிரித்துக்கொண்டே தொடர்கிறார்.
"நிகழ்ச்சிக்காக நான் உள்ள இருந்த நாள்களில் என் குடும்பம் வாங்குன கடனை அடைக்கத் தான் இப்போ வரைக்கும் ஷூட், புரோமோஷன்னு ஓடிக்கிட்டு இருக்கேன். இப்போ ஒரு படத்துல கமிட் ஆயிருக்கேன். கூடிய சீக்கிரம் வெள்ளித் திரையில சுபியை பார்க்கலாம்" என்று விடை பெறுகிறார் சுபிக்ஷா.




















