`இன்றைக்கும் அவர் என்னை ஜெயித்துவிட்டார்..!'- ஒளிப்பதிவாளர் செழியன் குறித்து வி...
'15 மணி நேர ஷிஃப்ட்; நோ லீவ்; கைக்கு வராத படி காசு!' - குமுறும் தீயணைப்பு காவலர்கள்!
தங்களுக்குப் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், முறையாக ஷிஃப்ட்கள் ஒதுக்கப்படுவதில்லை என்றும் தீயணைப்பு காவல்துறையினர் புகார் கூறிவருகின்றனர்

தங்களுக்குரிய பிரச்னைகள் குறித்து சில தீயணைப்புத்துறை காவலர்கள் நம்மை தொடர்புகொண்டு பேசினர். ``தீயணைப்புத்துறையின் சேவை இன்றியமையாதது. தீ விபத்துகளின் போதெல்லாம் எங்களின் உயிரைக் கொடுத்து வேலை செய்கிறோம். அதுவும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் மாவட்டங்களில் நடக்கும் தீ விபத்துகளின் எண்ணிக்கை ரொம்பவே அதிகம். அதனால் எங்கள் வேலையில் ரிஸ்க்கும் அதிகம். ஆனால், இப்படி வேலை பார்க்கும் கடைமட்ட காவலர்களுக்கும் ஏட்டுகளுக்கும் அதற்குரிய உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.
தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகள்கூட எங்களுக்கு முறையாக கிடைப்பதில்லை. இரவு நேர ஷிஃப்ட் என்றால் நாங்கள் மாலை 4:50 மணிக்கே ரிப்போர்ட் செய்ய வேண்டும். மறுநாள் காலை 8:20க்குதான் பணியிலிருந்து வெளியே வர முடியும். கிட்டத்தட்ட 14 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அதேமாதிரி, பகல் ஷிஃப்ட் என்றால் காலை 7:50 மணிக்கே ரிப்போர்ட் செய்ய வேண்டும். மாலை 5:20 க்குதான் பணியிலிருந்து வர முடியும். இதில் சிக்கல் என்னவெனில், சென்னையில் சைதாப்பேட்டை, மயிலாப்பூர், தாம்பரம், பெரும்பாக்கம் பகுதிகளில் மட்டும்தான் தீயணைப்பு காவலர்களுக்கான குடியிருப்பு வீடுகள் இருக்கின்றன. குடியிருப்புகளிலிருந்து ஸ்டேஷனுக்கு வந்து செல்லவே ஒன்றிரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது. அப்படியெனில் எப்படி குடும்பத்தோடு நேரம் செலவிட முடியும்? வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை என்கிறார்கள்.

அதுவும் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டுமெனில் தொடர்ந்து 24 மணி நேரத்துக்கும் சேர்த்து ஷிஃப்ட் பார்க்கச் சொல்கிறார்கள். யாருடைய ஷிஃப்டையாவது நாம் சேர்த்து பார்க்கும்போது அவருக்கு ஒரு 12 மணி நேர விடுப்பு கிடைக்கும். அவர் வந்தவுடன் அவர் நம்முடைய ஷிஃப்டை சேர்த்து பார்ப்பார். அப்போது நமக்கு 12 மணி நேர விடுப்பு கிடைக்கும். இதை எப்படி வார விடுமுறையாக எடுத்துக் கொள்ள முடியும்? வேலை செய்த களைப்பை கலைவதற்குள்ளேயே அடுத்த ஷிஃப்ட் வர வேண்டும். அதேமாதிரி, தீயணைப்பு காவலர்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை அழைப்புகள் வந்தாலும் ஒரு நாள் படியாக 300 ரூபாய்தான் கொடுக்கிறார்கள். அதையும் மாத மாதம் கொடுப்பதில்லை.
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இப்போது வரைக்கும் அந்த தினசரிப்படி கொடுக்கப்படவில்லை. மொத்தமாக சேர்த்து எப்போது கொடுப்பார்கள் என்றே தெரியவில்லை. அதேமாதிரி, சாதாரண காவலர்களும் தீயணைப்பு காவலர்களும் ஒரே தேர்வை எழுதித்தான் பணிக்கு வருகிறோம். இருவருக்குமே ஒரே தகுதிதான். ஆனால், 10 வருடங்களுக்கு பிறகு அவர்களின் பதவி உயர்வு மற்றும் சம்பளத்துக்கும் எங்களுடைய பதவி உயர்வு மற்றும் சம்பளத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். இந்தப் பிரச்னைகள் குறித்தெல்லாம் உயர் அதிகாரிகளிடம் எவ்வளவோ எடுத்துக் கூறிவிட்டோம். ஆனால், யாரும் கண்டுகொள்வதில்லை. இப்போதைய முதல்வர் விஜய் காவலர்களுக்காக நிறைய நலத்திட்டங்களை அறிவித்தார். அதையெல்லாம் தாமதப்படுத்தாமல் உடனே செய்து கொடுக்க வேண்டும்" என்கின்றனர்.

24 மணி நேரம் தொடர்ந்து வேலை பார்த்தால்தான் 12 மணி நேர விடுப்பு கிடைக்குமென்பது தொழிலாளர் உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது. அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியே ஆக வேண்டும்!











