`இன்றைக்கும் அவர் என்னை ஜெயித்துவிட்டார்..!'- ஒளிப்பதிவாளர் செழியன் குறித்து வி...
Idhayam Murali Review: நம் இதயத்துக்கு நெருக்கமாகின்றனவா இந்த இதயாவின் ஒரு தலை ராகங்கள்?!
பெற்றோர் அரவணைப்பின்றி வளரும் இதயாவுக்கு (அதர்வா), அவனுடைய மாமாவும் நண்பர்களும்தான் எல்லாம்! பள்ளிப் பருவத்தில் இதயா, டியூஷன், டென்னிஸ் பயிற்சி எனச் சுற்றி, சமந்தாவை (ப்ரீத்தி முகுந்தன்) ஒருதலையாகக் காதலிக்கிறார். இதயா தன் காதலை வெளிப்படுத்த நினைக்கும் வேளையில் திடுக்கிடும் டிவிஸ்ட் ஒன்று தெரியவருகிறது. அதனால் சமந்தாவிடம் தன் காதலைத் தெரிவிக்காமலே, அந்த சேப்டரை மூடிவைக்கிறார். பிறகு, கல்லூரிப் பருவத்தில் சந்திக்கும் அமுதாவிடமும் (கயாடு லோஹர்) தன் காதலை வெளிப்படுத்தாமலேயே கடந்துபோகிறார் இதயா. இந்த ஒரு தலைக் காதல்களின் முடிவு என்ன, தன் காதல்களை இதயா வெளிப்படுத்தினாரா, காதலைச் சொல்வதில் அவருக்குள் இருக்கும் தயக்கத்திற்குக் காரணம் என்ன என்பதைச் சொல்கிறது அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனின் இந்த 'இதயம் முரளி'.
பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், வேலைக்குச் செல்லும் இளமைப் பருவம் எனத் கதை பயணிக்கும் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் உடல்மொழியிலும் நடிப்பிலும் வேறுபாட்டினைக் கொண்டுவந்திருக்கிறார் நாயகன் அதர்வா. காதலினால் ஏற்படும் ஏக்கம், நடுக்கம், கொண்டாட்டம் என உணர்வுகளைப் புகுத்தி நிறைவான நடிப்பையும் தந்திருக்கிறார் இந்த 'ஜூனியர் இதயம் முரளி'! கேமியோ கதாபாத்திரத்தில் வரும் பகத் பாசில் படத்தை நகர்த்திக் கூட்டிச்செல்வதோடு, அவர் வரும் இடங்களில் கலகலப்பு மீட்டர் குறையாமலும் கவனித்துக்கொள்கிறார். நாயகிகளாக வரும் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் இருவருமே நடிப்பில் குறையில்லாத பங்களிப்பை இந்தக் காதல் படத்திற்குக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக இரண்டாம் பாதியில் ப்ரீத்தியின் எமோஷனல் பக்கங்கள் ஸ்வீட்!
தனது அப்பாவி முகபாவனையை வைத்துக்கொண்டு 'பரிதாபங்கள்' சுதாகர் அடிக்கும் ஒன்லைனர்கள் நம்மைச் சத்தத்துடன் 'ஹாஹா' போட வைக்கின்றன. இது நல்லா இருக்கு சுதாகர்! இவர்களைத் தாண்டி தமன், நிஹாரிகா, 'பரிதாபங்கள்' டிராவிட், ரக்ஷன், ஏஞ்சலின், நட்டி எனப் பெரும் பட்டாளம் இதயாவின் காதலைக் கரை சேர்க்க உதவியிருக்கிறது. இவர்களுடன், ஒரு டஜன் கேமியோக்கள் படம் நெடுக வருகின்றன. ஆனால், இத்தனை சிறப்புத் தோற்றங்கள் இந்தக் கதைக்கு அவசியமா இயக்குநரே?!

திருச்சியின் பானி பூரி கடை தொடங்கி நியூயார்க்கின் புரூக்ளின் பாலம் வரை பயணித்துப் படம்பிடித்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் சி.எச். சாய். அவர்களின் வண்ணமயமான மார்டன் 'டச்'சும் படத்தின் மேக்கிங்கிற்குப் பலம் சேர்க்கிறது. ஆனால், ஒரு சில இடங்களில் வரும் 'அவுட் ஆஃப் ஃபோகஸ்' ஷாட்கள் மட்டும் லேசான துருத்தல்! முதல் 30 நிமிடத்திற்குப் பிறகு காட்சிகள் பயணிக்கும் விதம் பற்றிக் கண்டும் காணாமல் விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ். அதன் பிறகு இரண்டாம் பாதியில்தான் கடிவாளத்தை மீண்டும் கையில் பிடித்திருக்கிறார்.
பாடல்களில் 'கட்டழகி', 'வாமா வாமா', 'தங்கமே தங்கமே', 'இதயா' என தமனின் பீட்களும், மெலடியும் தியேட்டர்களில் அதிரடி கொண்டாட்டம்! ஆனால், இதில் சில பாடல்கள், காட்சிகளைக் குறுக்கிடும் வேகத்தடைகளே! எமோஷன், கொண்டாட்டம், காதல் என அனைத்தும் பொங்கி வரும் பின்னணி இசையும் நச்! 'இதயமே' என்ற 'பாதி' ரீமிக்ஸும், 'பொட்டு வைத்த' பாடலின் அசல் வெர்ஷனும் பயன்படுத்தப்பட்ட விதம் நன்று!
ஒருவருடைய வாழ்க்கையின் வெவ்வேறு பருவங்களில் பூக்கும் ஒருதலை ராகங்களைப் பாடுகிறது இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனின் இந்த 'இதயம் முரளி'. பள்ளிப் பருவ வாழ்க்கையிலிருந்து டேக் ஆஃப் ஆகும் கதை, கச்சிதமான தொடக்கத்தைத் தந்து ஆரம்பத்திலேயே நம்மை ஆர்வத்துடன் நிமிர வைக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சேர்ந்தே வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்த கதாபாத்திரங்கள், அவர்கள் முதிர்ச்சியற்ற வயதிலிருக்கும்போது நிகழ்த்தும் விஷயங்கள் என 'ஸ்வீட்' நாஸ்டால்ஜியா நினைவுகளைத் தொட்டுச் செல்கிறது படம். அதன் பிறகு வரும் நல்ல ட்விஸ்டோடு முதல் அரை மணி நேரத்தை முடித்துக்கொள்கிறது. இதன் பிறகான திரைக்கதையில் காமெடி மட்டும் உயிர்ப்போடு பயணிக்கிறதே தவிர, காதல் கண்ணைக் கட்டிக்கொண்டு காட்டிற்குள் திசை தெரியாமல் ஓடத் தொடங்குகிறது.
இதயாவின் இரண்டாவது ஒருதலைக் காதல் கதையில் நம்பகத்தன்மையான காட்சியமைப்புகள் இல்லாமல் போவதோடு, சுவாரஸ்யமும் இல்லாததால் நம்மைச் சோர்வடையச் செய்கிறது திரைக்கதை. இந்தக் காதல் கதையின் முடிவில் எழும் நிறைய லாஜிக் கேள்விகளுக்கும் பதில் தராமல் ரயில் ஏறித் தப்புகிறது திரைக்கதை. இதற்குப் பிறகு பழைய காதலைத் தேடிச் செல்லும் இரண்டாம் பாதி கதையில், சுவாரஸ்யம் 'ஆன் & ஆஃப்' மோடிலேயே வந்துபோகிறது. இப்படி ஒருவழியாக கிளைமாக்ஸை எட்டும் படம், லாஜிக்கை மறந்து நம்மை 'இதயம்' குலுங்கிச் சிரிக்க வைக்கிறது. ஆனாலும், 'இதயா'வுக்கு ஜஸ்ட் லைக் தட் 'ஒரு தலை ராகங்கள்' பூப்பதும், அந்தக் காதலை வெளிப்படுத்த அவர் 'இதயம்' தயங்குவதும், அதற்காக அவரை குற்றஞ்சாட்டாமல், உடன் இருப்பவர்களை வஞ்சிப்பதும் நியாயமே இல்லைங்கண்ணா!
இடையிடையே திரைக்கதையில் எழும் சிக்கல்களால் இந்த இதயாவின் வாழ்க்கையில் ஒரு சில பகுதிகள் மட்டுமே நம் இதயத்திற்கு நெருக்கமாகின்றன.













