3 லட்சத்தை நெருங்கும் அண்ணாமலையின் 'We The Leaders' : இந்த அமைப்பின் ரூட் என்ன? ...
‘2006-ல் காங்கிரஸ் தயவுடன் பதவி சுகத்தை அனுபவித்தது யார்?’ – உதயநிதிக்கு காங்கிரஸ் பதிலடி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் , “காங்கிரஸ் பேரியக்கத்தை துரோகிகள் என்று உதயநிதி சொல்லி இருப்பது தந்தையும், தனையனும் முதல்வர் ஆசை கைகூடவில்லை என்ற ஏக்கத்தின் உச்சிக்கே சென்று பேசி வருவதையே காட்டுகிறது. காங்கிரஸ் தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்த ஒரே காரணத்தினாலேயே ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. நீங்கள் செய்த பல தவறுகளுக்கு நாங்கள் பழியை சுமந்து கொண்டு இருந்தோம். இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மட்டும் விடுதலை பெறவில்லை, காங்கிரஸ் கட்சிக்கும் சேர்த்தே விடுதலை கிடைத்துள்ளது.
தி.மு.க-வின் ஊழல் ஆட்சிக்கு எதிராக மக்களின் வெறுப்பிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பலிகடா ஆக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. தி.மு.க ஆட்சியில் செய்த தவறுகளை காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டியபோது, தி.மு.க அதை திருத்தி கொள்ள தயாராக இல்லை. அதற்கு மாறாக காங்கிரஸ் கட்சியின் மீது விஷத்தை கக்க ஆரம்பித்து. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியை உடைக்க தி.மு.க தயாராகிவிட்டது.

தேர்தலுக்கு முன்பே ஊடகங்களின் கருத்துக்கணிப்பை நம்பி மீண்டும் தி.மு.க ஆட்சி அமைக்கும் என்ற நப்பாசையில் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக போன்ற கூட்டணி கட்சிகளை பெரியண்ணன் மனப்பான்மையில் சொற்ப இடங்களை ஒதுக்கி கூட்டணி தர்மத்தை தொலைத்தது யார்? த.வெ.க ஆட்சி அமைக்க விடாமல், அதிமுகவோடு கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க திரை மறைவு வேலைகளை செய்தது யார்? அந்த திரை மறைவு வேலைகளுக்கு உடன்படாமல் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து த.வெ.க-விற்கு காங்கிரஸ் பேரியக்கம் ஆதரவு அளித்ததால் தானே காங்கிரஸ் மீது இவ்வளவு காழ்புணர்ச்சி.
கூட்டணி தர்மத்தை மதித்து கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் 96 இடங்களையே தி.மு.க வென்ற போதும், கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் ஐந்தாண்டுகள் காங்கிரஸ் தயவுடன் பதவி சுகத்தை அனுபவித்தது யார்? தி.மு.கவுடன் கூட்டணியில் இருந்தவரை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க செய்த துரோகங்களை பட்டியலிட்டால் புத்தகம்தான் எழுத வேண்டும். யாருக்கு யார் துரோகம் இழைத்தது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

19 சட்டமன்றத் தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தி.மு.க வெற்றி பெற்றது, காங்கிரஸ் கட்சியின் தயவால்தான் என்பதை உதயநிதி ஸ்டாலின் மறந்துவிட கூடாது. இந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் தி.மு.க-வை மூன்றாவது இடத்திற்கு மக்கள் விரட்டியடித்து இருப்பார்கள். கூட்டணி கட்சிகளால் தான் கௌரவமான இடங்களை தக்கவைத்து தி.மு.க எதிர்க்கட்சி அந்தஸ்த்தில் உள்ளது. இல்லையென்றால் 20 தொகுதிகள் மட்டுமே வென்றிருக்கும். இதையெல்லாம் மறந்து தான்தோன்றித்தனமாக பேசுவதை இனிமேலாவது உதயநிதி நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் கடுமையான பதிலடி கொடுப்பதற்கு தயங்க மாட்டோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.













