Jana Nayagan release ஆவதில் சிக்கல், நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | ...
`2029-ல் அமித் ஷா காலியாகிவிடுவார்' - சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி
திண்டுக்கல் மாவட்டத்துக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 7-ம் தேதி வருகை தர உள்ளார். இதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் மேடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை பார்வையிடுவதற்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வருகை தந்தார்.
பின் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, " திண்டுக்கல்லுக்கு வருகை தரும் முதலமைச்சர் ரூ.1,500 கோடிக்கு அதிகமான மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

எந்த மாநிலத்திலும் 50% ஓய்வூதியம் என்பது கொடுக்கப்படவில்லை. தற்போது முதலமைச்சர் அறிவித்துள்ள இந்த அறிவிப்பால் அனைத்து அரசு ஊழியர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். யாரும் குறை சொல்லவில்லை. நாங்கள் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம்.
இடைநிலை ஆசிரியர்கள் போராடுவது அவர்களின் உரிமை. முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கைகளைக் கேட்டு நிதி நிலைமைக்கு ஏற்ப அதனை செய்வார். அனைவருக்கும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைப்போல எந்த ஒரு அறிவிப்பு செய்தாலும் அதனை நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் உள்ளார்.

ஆசிரியர்களை ஏமாற்ற மாட்டோம். அரசு ஊழியர்களை ஏமாற்ற மாட்டோம், அனைத்து அரசு ஊழியர்களும் திமுக பக்கம் உள்ளனர்.
2026ல் திரும்பவும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலினே வருவார். தமிழ்நாடு மக்கள் தெளிவாக கூறியுள்ளனர். அதிகமாக முன்னிலையில் இருப்பது திமுக தான்.

அமித் ஷா 2029 பற்றி கவலைப்பட வேண்டும். அப்போதும் தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது திமுக-தான் ஆட்சிக்கும் வரும். அமித் ஷா 2029இல் காலியாகி விடுவார்" என்றார்.


















