29: "சட்டமன்றத் தேர்தலில் ஏன் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்கவில்லை?" - தெளிவுப்படுத்த...
29: "சட்டமன்றத் தேர்தலில் ஏன் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்கவில்லை?" - தெளிவுப்படுத்திய ஆர்.ஜே.பாலாஜி
'மேயாத மான்' ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் '29' திரைப்படம் மே 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பென்ச்' நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றன.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, லோகேஷ் கனகராஜ் ஏன் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதற்கு விளக்கமளித்திருக்கிறார்.

ஆர்.ஜே. பாலாஜி, "ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
நீங்கள் எனக்கு நல்ல நண்பர், நான் சொன்னால் பல விஷயங்களை எனக்காகச் செய்திருக்கிறீர்கள். (சிரித்துக் கொண்டே...) எனவே, தயவுசெய்து ஷேவ் செய்துகொள்ளுங்கள். இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகப் பார்த்தேன்.
ஒருவேளை படத்தின் பேட்ச் வொர்க் மிச்சமிருந்தால், அவர்தான் சினிமாவில் ஜீனியஸ் ஆச்சே, நீங்கள் இல்லாமலேகூட அவற்றைச் செய்து முடிப்பார். ஆனால், நீங்கள் ஷேவ் செய்ய வேண்டும். லோகேஷ் பார்க்க மிகவும் கலையாக இருப்பார்.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக லோகேஷின் முகத்தையே நான் தேட வேண்டியிருக்கிறது. இதுவே எனது வேண்டுகோள்" என்றவர், "மற்றொரு முக்கியமான தகவலையும் இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்.
கடந்த தேர்தல் நாளன்று, 'லோகேஷ் ஏன் ஓட்டுப் போட வரவில்லை?' என்று பலரும் அவரைத் தேடி விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள்.

அதன் பின்னணியில் ஒரு சம்பவம் இருக்கிறது, அதை நானே சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், அவரே இதைச் சொன்னால் நன்றாக இருக்காது. அன்று நான் ஓட்டுப் போட்டுவிட்டு, மும்பைக்கு ஐ.பி.எல் கமென்ட்ரி செய்வதற்காகச் சென்றேன்.
அவர் சென்னையில் ஒரு வேலையை முடித்துவிட்டு, ஓட்டுப் போடுவதற்காகக் கோயம்புத்தூருக்குப் புறப்பட்டார். நாங்கள் இருவரும் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்டோம். பாசமாகப் பேசினோம்.
நான் எனது விமானத்தில் ஏறிய பிறகு கவனித்தபோது, நான்கு பேர் லோகேஷை அழைத்துச் சென்றனர். கதவு மூடப்பட்டுவிட்டதால், அவரால் அந்த விமானத்தைப் பிடிக்க முடியாமல் போனது" எனப் பேசினார்.















