அரியலூர்: `டாஸ்மாக் கடை மீது காட்டிய அக்கறையை மாணவர்கள் மீது காட்டவில்லை'- போலீஸ...
3 வயது சிறுமி வன்கொடுமை: அபராத பணத்தில் மது விருந்து வைத்த கிராம பஞ்சாயத்து - அதிர்ச்சி சம்பவம்!
நவீன இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைத்தாலும், சில கிராமங்களில் இன்னும் காட்டுமிராண்டித்தனமான செயல்களும், பஞ்சாயத்து என்ற பெயரில் நடைபெறும் அநீதிகளும் தொடர்கின்றன என்பதற்கு ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். மூன்று வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதையும், அதற்கான தண்டனையாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு அதை மது விருந்துக்கு ஒரு சமூகம் பயன்படுத்தியதையும் நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது.

ஜார்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்தில் உள்ள பால்மா என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சுனில் லோஹ்ரா என்ற நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு சிறுமியின் தாய் வேலையாக இருந்ததால், தான் குழந்தையைப் பார்த்துக் கொள்வதாகக் கூறி, குழந்தையை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்று கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வந்த தாய், குழந்தை ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது ஒரு கொடூரமான குற்றம் என்றாலும் இதன் பிறகு நடந்ததுதான் கொடூரத்தின் உச்சம்.
குற்றவாளியை உடனடியாகக் காவல்நிலையத்தில் ஒப்படைப்பதற்குப் பதிலாக, கிராம மக்கள் சிலர் இதை போலீசுக்குத் தெரியாமல் மறைக்க முடிவு செய்தனர். கிராம பஞ்சாயத்து கூடி, குற்றவாளி சுனில் லோஹ்ராவிற்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து, இந்தப் பிரச்னையை கிராமத்திற்குள்ளேயே முடித்துக் கொள்ள முடிவெடுத்தது.

குற்றவாளி உடனடியாக ரூ. 20,000-ஐ செலுத்தியுள்ளார் (மீதமுள்ள தொகையை ஒரு வாரத்தில் தர வேண்டும் என நிபந்தனை). இந்தக் கொடூரக் குற்றத்திற்காகப் பெறப்பட்ட அந்த 20,000 ரூபாயைக் கொண்டு, அங்கு கூடியிருந்த பஞ்சாயத்து உறுப்பினர்களும் அங்கிருந்த சிலரும் இறைச்சி, மது விருந்து வைத்து கொண்டாடியுள்ளனர். ஒரு பச்சிளம் குழந்தையின் உடல், மன ரீதியான வலியைக் கூடப் பொருட்படுத்தாமல், அதைப் பயன்படுத்தி விருந்து உண்ட இவர்களின் செயல் மனிதநேயமற்றது, அறமற்றது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ரகசியமாக இந்தக் கொடூரத்தைப் பற்றி போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக காக்ரா காவல்நிலைய போலீஸார் கிராமத்திற்கு விரைந்தனர். போலீஸார் அங்கு செல்லும்போது, மது விருந்து நடந்து கொண்டிருந்தது. விருந்தில் கலந்துகொண்டிருந்த குற்றவாளியை உடனடியாக போலீஸார் கைது செய்தனர். சிறுமியின் தாயிடம் வாக்குமூலம் பெற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
பஞ்சாயத்து என்ற பெயரில் நடைபெறும் இத்தகைய கட்டப்பஞ்சாயத்துகள், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு குற்றவாளிகளைக் காப்பாற்றும் கேவலமான நடைமுறைகள் இன்றும் நம் சமூகத்தில் இருப்பது வெட்கக்கேடானது.

மூன்று வயது குழந்தை ஒன்றுக்கு நேர்ந்த இந்த கொடூரத்தை, வெறும் பணத்துக்காகச் சமரசம் செய்ய நினைத்தது மிகப்பெரிய குற்றம். குற்றவாளியிடம் பணம் பெற்று, அதை வைத்து மது அருந்தி கொண்டாடியது நம் சமூகத்தின் ஒட்டுமொத்த வீழ்ச்சியையே காட்டுகிறது.
காவல்துறை சரியான நேரத்தில் தலையிட்டு குற்றவாளியைக் கைது செய்திருப்பது மட்டுமே இதில் ஆறுதலான விஷயம். ஆனால், இதுபோன்ற பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீதும், குற்றத்தை மறைக்க உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இத்தகைய கட்டப்பஞ்சாயத்துகள் நடைபெறுவது தடுக்கப்படும்.
















