கோவை: சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - கிராம மக்கள் அதிர்ச்சி!
``ரூ. 104 கோடி மதிப்பிலான 1.27 கோடி படுக்கை விரிப்புகள் திருட்டு" - இந்திய ரயில்வே தகவல்
இந்திய ரயில்வேயின் ஏசி வகுப்புகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் பெட்ஷீட்கள், துண்டுகள், தலையணை உறைகள் மற்றும் போர்வைகள் போன்ற படுக்கை விரிப்பு பொருட்கள் பெருமளவில் திருடப்பட்டு வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிவந்துள்ளது.
2022 ஜனவரி முதல் 2026 மே வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 1.27 கோடிக்கும் அதிகமான படுக்கை விரிப்பு பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இரயில்வேயின் மொத்தம் உள்ள 69 கோட்டங்களில் 54 கோட்டங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
திருடப்பட்ட இந்தப் பொருட்களின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ.104 கோடிக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2022 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்தத் திருட்டுகள் 56 சதவீதம் அதிகரித்துள்ளன. குறிப்பாக டெல்லி, மும்பை, அகமதாபாத், ராஞ்சி, பிகானெர், ஜெய்ப்பூர், பிலாஸ்பூர் உள்ளிட்ட 10 முக்கிய ரயில்வே கோட்டங்களிலேயே ஒட்டுமொத்த திருட்டுச் சம்பவங்களில் 67 சதவீத வழக்குகள் பதிவாகியுள்ளன.
இது ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் உரியது அல்லாமல், நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் பரவலாக நடக்கும் ஒரு தேசிய அளவிலான சவாலாக உருவெடுத்துள்ளது எனக் கூறப்படுகிறது.
ரயில் பெட்டிகளில் இருந்து ஊழியர்களால் சேகரிக்கப்படும் இந்தத் துணிகள், டிப்போக்கள் மற்றும் சலவையகங்களுக்கு இடையே கொண்டு செல்லப்படும் இடைப்பட்ட நேரமே திருட்டுகளுக்கு மிகவும் சாதகமான பகுதியாக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
மேலும், இந்தத் துணிகள் பொதுப் பயன்பாட்டிற்காகத் தயாரிக்கப்படுவதால் மிகவும் உறுதியாகவும், நீடித்து உழைக்கக்கூடியதாகவும் இருக்கும். இதனால் பலர் இவற்றை வீட்டு உபயோகத்திற்காகவும், 'இலவச நினைவுப் பரிசாகவும்' எடுத்துச் செல்கின்றனர். சில பயணிகள் தங்களது பயணச்சீட்டுக் கட்டணத்திலேயே இந்தப் படுக்கை விரிப்புகளின் விலையும் அடங்கும் என்று தவறாக நினைத்து எடுத்துச் செல்கின்றனர்.

இவ்வாறு திருடுபோகும் பொருட்களுக்கான இழப்பை ரயில்வே நிர்வாகம் ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்கிறது. இதனால், ரயில்களில் மிகக் குறைந்த ஊதியத்திற்குப் பணிபுரியும் ஏழை ஊழியர்களின் (Coach Attendants) சம்பளத்தில் இருந்து இந்த இழப்புத் தொகை பிடிக்கப்படுவதாக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் தீவிரப் சோதனைகள் மூலம் ரயில்வே நிர்வாகம் இதைத் தடுக்க முயன்றாலும், பொதுச் சொத்துக்களைப் பொறுப்புடன் பயன்படுத்தும் விழிப்புணர்வு பயணிகளிடம் ஏற்படும் போது மட்டுமே இதற்கு முழுமையான தீர்வு காண முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


















