`40 வருஷமா இந்த மூங்கில்தான் எனக்கு சோறு போடுது' - கைவினைத் தொழிலைக் கை விடாத மத...
`40 வருஷமா இந்த மூங்கில்தான் எனக்கு சோறு போடுது' - கைவினைத் தொழிலைக் கை விடாத மதுரை வீரன்!
கைவினை கலைக்கு பேர்போன மதுரையில், பெரியார் பேருந்து நிலையம் அருகில் திருப்பரங்குன்றம் சாலையோரத்தில் கட்டையை ஊன்றி அழகாக பூவைத் தொடுப்பதுபோல மூங்கிலில் வேலை செய்துகொண்டிருந்த சுவாரஸ்யமான ஒருவர் தென்பட்டார். அவரிடம் உடனே பேசினோம், அவர் 'மூங்கிலில் திரை' செய்து வாழ்க்கை நடத்தும் மதுரை வீரன்.
அதனை அவர் பின்னிக்கொண்டே எங்களிடம் பேச தொடங்கினார்,
``என் பெயர் மதுரை வீரன். 40 வருடங்களாக இதை செய்கிறேன்.
இந்த தொழிலை தலைமுறை தலைமுறையாக பார்த்து வருகிறோம். நான் மூன்றாவது தலைமுறை, இது அழிந்து வரும் கைவினை தொழில் தான். எங்க குடும்பத்திற்கு பல வருடங்களாக சோறு போட்டது இந்த தொழில்தான். சிறுவயதில் இருந்து அம்மா அப்பாகூட இருந்து இதை பழகிக் கொண்டு இப்போ நானும் செய்து வருகிறேன். இப்போ எனக்கு சோறு போடுது.

காலை எழுந்தவுடன் மூங்கிலை கோரிப்பாளையத்தில் இருந்து வாங்கிட்டு வந்துருவேன், வேலைக்கு தகுந்தாற் போல வாங்குவேன். மொத்தமாக எடுத்தால் மூங்கில் காய்ந்து விடும், காய்ந்தால் கிழிக்க வராது. பச்சை மூங்கில்தான் கிழிக்க வரும். மூங்கில் கிழிப்பதற்கு ஒருவர் வருவாரு... கிழித்து நீளமாக சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொடுப்பாரு, நான் பின்னுவேன். இந்த கட்டையில் வைத்து நூலை கல்லில் கட்டி பின்னுவோம். வேலையை பொறுத்து நேரம் எடுக்கும்.
பொதுவா சாயங்காலம் வரைக்கும் பின்னுவேன், ஆர்டர் அதிகமாக இருந்தால் நைட்டு ஏழு மணி, எட்டு மணி வரைக்கும் ஆகும்.
இதற்கு டிமாண்ட் அதிகமாக நம்ம ஊரில் இல்லை என்பதால் 'மெசின்' வைத்து யாரும் இதை தொழிலாக செய்வதில்லை, மதுரையில் மிகவும் அரிதாகவே இந்த தொழில் உள்ளது. எனக்கு தெரிந்தவர்கள் எல்லாம் வேறு வேலைக்கு போய்ட்டாங்க. நான் மட்டும்தான் இப்ப இத செய்திட்டு வரேன்.

என்னென்ன வகைகள்?
மூங்கிலை முழு பாயாக பின்னி, அதற்கு மேல் துணி வைத்துத் தருவோம், அதிலேயே ஏற்றி இறக்கி சுருட்டி கொள்ளும் முறையோடு 'சுருக்கு' வைத்து தருவோம். மற்றொன்று துணி பயன்படுத்தாமல் சுற்றி டேப் அடித்து சுருக்கு வைத்து தருவோம். இதில் என்ன கலர் கேட்கிறார்களோ சாயம் பூசி அதற்கு ஏற்ற மாதிரி செய்து தருவோம், பிறகு நாங்களே கையோடு போய் மாட்டி கொடுத்து விடுவோம்.
நம்ம கையாலேயே பின்னுவதால் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும். இது பயன்படுத்துவதால் வீடு, ரூம் குளுகுளுனு இருக்கும், பார்வைக்கு ஒரு பாரம்பர்ய அடையாளம் போலும் தெரியும். வீடுகள், நூலகங்கள், பூங்காக்கள், சிலர் தங்கள் ஆபீஸுகு என்றெல்லாம் கேட்டு வாங்கிட்டு போவாங்க.
அடுத்த தலைமுறைக்குக் கடத்த முடியலைங்கிற வருத்தம்!
என் பசங்க ஆர்வம் காட்ட மாட்டேங்கிறாங்க, நானும் கேட்டு பார்த்துட்டுதான் இருக்கேன். தொழில விட்டுறாதீங்கன்னு, இது அழிந்து வரும் தொழிலாகத்தான் இப்போ இருக்கு.

வருமானம் எப்படி?
இதன் விலை துணி வைத்து செய்தால் சதுர அடி 100 ரூபாய், இல்லையெனில் சதுர அடி 70 ரூபாய். முதலீடு என்றால் மூங்கில் தான், ஒரு மூங்கில் வண்டி வாடகையோடு சேர்ந்து 500 ரூபாய் ஆகும், எனக்கு வருமானம் என்பது நிலையாகச்சொல்ல முடியாது. எங்களை தேடி வருபவர்களை வைத்துதான் எங்களுக்கு இந்த பிழைப்பு, ஆர்டரை பொறுத்துதான் வருமானம்" என்றார் மதுரை வீரன்.
அவர் பேசிய இவ்வளவு நேரமும் பின்னுவதை நிறுத்தவில்லை, மதுரை வீரனின் மூங்கில் பின்னல்களில் வெறும் நூல்கள் மட்டும் இல்லை — ஒரு குடும்பத்தின் வாழ்வாதார நம்பிக்கையும்,
ஓர் அழகியல் பாரம்பர்யத்தின் உயிரும் சேர்ந்தே பின்னப்பட்டிருக்கிறது.


















