திருநெல்வேலி: கல்லூரி மாணவரால் கண்டெடுக்கப்பட்ட பழைமைவாய்ந்த புதைப்பொருள்கள்!
4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: `திராவிட மாடல் = எல்லாருக்கும் எல்லாம்' - ஸ்டாலின் நெகிழ்ச்சி!
ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறாத கோயில்களைக் கண்டறிந்து குடமுழுக்கு நடத்தும்பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 400 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலுக்கும், 300 ஆண்டுகளுக்கு பிறகு, காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி கரியமாணிக்க வரதராஜ பெருமாள் திருக்கோயில் எனப் பல்வேறு கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன.
1,000 ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில், முதல்வர் ஸ்டாலின் ரூ.425 கோடியை அரசு மானியமாக வழங்கியுள்ளார். அரசு மானியம், பொதுநல நிதி, திருக்கோயில் நிதி, உபயதாரர்கள் நிதி என மொத்தம் ரூ.560 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்!
1,000-வது குடமுழுக்கு சென்னை, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில்.
2,000-வது குடமுழுக்கு மயிலாடுதுறை - கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (2024)
3,000-வது குடமுழுக்கு நாகை - திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயில் (2025)
4,000-வது குடமுழுக்கு இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோயிலில்... இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை! மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை! திராவிடன் மாடல் = எல்லாருக்கும் எல்லாம்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.















