6 நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய அம்பர் மாகாளம்: யோக ராகு, யோக கேது அர...
6 நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய அம்பர் மாகாளம்: யோக ராகு, யோக கேது அருளும் அபூர்வ கோயில்!
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஆலஹால விஷம் வெளியானது. பிரபஞ்ச நன்மையின் பொருட்டு ஈசன் அதை ஏற்றுக்கொண்டார். அந்த கொடிய விஷத்தின் பாதிப்பால் பொன்னாற்மேனியனான பெருமானின் திருமேனியின் கண்டம் கரிய நிறம் அடைந்தது. இந்தப் புராண நிகழ்வோடு தொடர்புடைய தலங்கள் சில உண்டு. அவற்றில் ஒன்று அம்பர் மாகாளம்.

`காளம்’ என்றால் கடும் விஷம் என்றுபொருள். கொடுமையான விஷத்தினை ஏற்றமையால் உருமாறிய ஈசனின் அந்த திருவடிவத் திற்கு ‘காளன்’ என்ற பெயர் ஏற்பட்டது. காளர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமான் `மகா காளர்’ ஆகிறார். காளனுக்கு இணையான உக்கிர சக்தி மகாகாளி. இந்த இருவரும் இணைந்து விளங்கிடும் திருத்தலம்தான் மகாகாளம் எனப்படும் மாகாளம்.
நம் பாரதத்தில் மூன்று மாகாளங்கள் முக்கியமானவை. ஒன்று மத்தியப்பிரதேசம் உஜ்ஜயினியில் இருக்கும் மாகாளம், இரண்டா வது தமிழகத்தில் தொண்டை நாட்டில் அமைந்திருக்கும் இரும்பை மாகாளம் (தற் காலத்தில் விழுப்புரம் மாவட்டம்). மூன்றாவது காவிரி பாயும் புண்ணிய பூமியான திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அம்பர் மாகாளம்.
அம்பர் மாகாளத்தில் இரண்டு ஆலயங்கள். ஒன்று, ‘அம்பர் பெருங்கோயில், மற்றொன்று காளி பூசித்த கோயில் மாகாளம். இவற்றுள் இரண்டாவது ஆலயமான கோயில் மாகாளம் குறித்த தகவல்கள் சுவாரஸ்யமானவை.
பாற்கடலைக் கடைந்தபோது உண்டான ஆலஹால விஷத்தினை சிவபெருமான் தாமே உவந்தேற்று தம்மை வருத்திக் கொண்டார் அல்லவா... அதற்குக் காரணமாகி விட்டோமே என்று நாகர் தலைவனான வாசுகி மனம் வருந்தினான். அதனால் உண்டான தோஷத்தினைப் போக்கிக் கொள்வதற்காக அவன் ஈசனை வழிபட்ட தலம்தான் இந்த மாகாளம். கொடும் விஷத்தை உடையவரான மாகாளன் பூஜித்த ஈஸ்வரர் என்பதால் இவருக்கு, ‘மாகாளேஸ்வரர்’ எனும் திருநாமம் ஏற்பட்டது.

ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள ஏனைய எல்லா கிரகங்களும் ராகு-கேதுவுக்குள் அடைபட்டுவிட்டால், அதன்மூலம் உண்டாகும் கொடிய தோஷம் - காலசர்ப்ப தோஷம். எவ்வளவு செல்வச் செழிப்போடு பிறந்தாலும் இந்த தோஷம் உடையவர்கள் எவ்வித சுக சௌகர்யங்களையும் அனுபவிக்க இயலாது. வாழ்நாள் முழுவதுமே தடைகளை யும் தடங்கல்களையும் மட்டுமே சந்திக்கும் போராட்ட நிலையே எஞ்சும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
இப்படியான தோஷமுடையவர்கள் வழிபட்டு நன்மைகளை அடையச் சிறந்த பரிகாரத் தலம் இந்த அம்பர்மாகாளம் என்கிறார் கள். காலசர்ப்ப தோஷத்தினை காலசர்ப்ப யோகமாக மாற்றிட வல்ல அற்புதமான தலம் இது.
ராகு-கேதுக்கள் தங்களின் தோஷ நிவர்த்திக்காக இந்த மாகாளத் தில் ஈசனை வழிபட்டிருக்கிறார்கள். இதனால் இத்தலத்தில் அரிய அமைப்பாக ஒரே சந்நிதியில் யோக ராகு; யோக கேது என்கிற திருநாமங்களுடன் இவர்களின் சந்நிதி அமைந்துள்ளது. இவர்களை ஒருசேர தரிசிப்பதன் மூலம் சர்ப்ப சாபங்களிலிருந்தும்; சகல ராகு கேது தோஷங்களிலிருந்தும் விடுபடலாம் என்பது ஐதிகம்.
முன்னொரு காலத்தில் செல்வத்திற்கு அதிபதியான குபேரனும் தன்னை வருத்திய காலசர்ப்ப தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு வேண்டி, சங்க நிதி பத்ம நிதியுடன் இத்தலத்தில் பூஜித்திருக்கிறார்.
கேதுவினுடைய சாரம் உள்ள அசுவினி, மகம், மூலம் மற்றும் ராகுவினுடைய ஆதிக்கம் உள்ள திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் ராகு காலத்தில் இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்தால் மிகுந்த நற்பலன்கள் உண்டாகும் என்கிறார்கள். இதனால் இத்தலம் ‘காளஹஸ்திக்கும் வீசம் அதிகம்’ என்று சொல்லப்படுகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் நிலைத்த காளி!
அம்பாசுரர்களை அழித்த காளி அம்பாசுர மர்த்தனியாக ஆவேசித்து நின்றபோது, சம்ஹரிக்கப்பட்ட அம்பன் மற்றும் அம்பாசுரன் ஆகிய இருவரின் தலைகளும் அவளின் சிரசில் ஒட்டிக் கொண்டு விட்டன. மிகவும் உக்கிரமான கோலத்தில் திரிந்த அன்னை தனது அசுரஹத்தி தோஷத்தினைப் போக்கிக் கொள்வதற் காக சிவ பூஜை செய்த சிறப்பான தலம் இது.
காளி உருவாக்கிய தீர்த்தமானது, ‘மாகாள தீர்த்தம்‘ என்கிற பெயரில் இத்தலத் தீர்த்தமாக விளங்குகிறது. காளி சிவபூஜைக்காகத் தன் திருக்கரங்களால் மணலைப் பிடித்துவைத்த லிங்கம்தான் இத்தலத்து மூலவராக விளங்கிடும் மாகாளநாதர்.
மிகவும் சிறிய பாணம் உடைய லிங்கத் திருமேனியர் இவர். கண்டத்தில் விஷத் தினைத் தாங்கிய படியால், ‘காளகண்டேஸ் வரர்’ என்றும் இவரை அழைக்கிறார்கள்.
காளிக்குரிய சந்நிதி வெளிச்சுற்றாலையில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னைக்கு ஹத்தி நிவர்த்தி கிடைத்த இத்தலத்தில் வழிபடுவோருக்கு, சகல பாவங்கள் மற்றும் தோஷங்களும் நீங்கிடும் என்பது ஐதிகம்.
ராஜயோகம் அருளும் அம்பிகை!
இத்தலத்து அம்பிகைக்கு ‘பயக்ஷயாம்பிகை’ என்பது திருநாமம். அழகிய தமிழில், ‘அச்சம் தவிர்த்த நாயகி’ என்பது திருப்பெயர். தசமகா வித்யைக்குரிய நாயகியரில் முதன்மையான ராஜமாதங்கியின் அம்சம் இவள்.
மதங்கர், பிரம்ம நிலையை அடைய வேண்டி அம்பிகையை நோக்கிப் பலகாலம் தவமியற்றியவர். இவருடைய கடும் தவத்திற்கு மகிழ்ந்த அன்னை, அவருக்கு பிரம்ம நிலையைவிட மேலான ஞான நிலையை அளித்து, ரிஷிகளுள் ஒருவராக விளங்கும்படி அருளினாள். மேலாக அவருடைய ஒப்பீடற்ற உயர்ந்த நிலையை உலகிற்குக் காட்டும் பொருட்டு, தானே அவருடைய மகளாகவும் அவதரித்தாள்.
மதங்க முனிவரின் திருமகளாக அவதரித்த படியால் தேவிக்கு, ‘மாதங்கி’ என்பது திருநாமம் உண்டானது. மதங்கம் என்றால் யானை. யானைக் கூட்டத்தால் வளர்க்கப் பட்ட அன்னை இந்த மாதங்கி. தன்னைப் போற்றும் பக்தர்களுக்கு உயர்ந்த ராஜ வசீகரத்தி னையும்; ராஜாங்கப் பதவியையும் அளிக்க வல்ல தெய்வம் என்பதால் ராஜ மாதங்கி, சாம்ராஜ்யகௌரீ, ராஜ சியாமளை என்று போற்றப்படுபவள். அம்பிகையின் இந்தத் திருக்கோலத்தினை வழிபட்டால் ராஜ்யமேன்மை உண்டாகும் என்பது ஐதிகம்.
மாதங்கி என்கிற திருவடிவத்திற்கான பிரத்தியேக வழிபாட்டு முறைகளை முறைப்படுத்திய பெருமையும் மதங்கருக்கு உண்டு. எனவே இத்தலத்தில் ராஜமாதங்கியாக திகழும் பயக்ஷயாம்பிகையை வழிபட, தந்தை - மகள் உறவு சிறக்கும். மன வருத்தங்கள் மறையும். அரசியல், அதிகாரப்பதிவிகளில் இருப்பவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும். கல்வியில் மேன்மை அடைய விரும்புபவர் களும் சகல கலைகளிலும் தேர்ச்சி உண்டாகும்.
தேசத்தை ஆள்பவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் இவள். இவளை வழிபட்டால் ராஜபரிபாலனம் சிறக்கும். மேலும் இத்தலத்தில் தேவியே மதங்க முனிவருக்கு குருவாகத் திகழ்வதால் குருகடாட்சமும் கைகூடும்
மனதில் உண்டாகும் தேவையற்ற பயம், மனநடுக்கம், மேடைக்கூச்சம், சபைபயம் ஆகியவற்றைப் போக்கிட வல்ல அதியுன்னதமான தெய்வம் இவள். மேலாக மதங்கரின் கோரிக்கையை ஏற்று நித்ய கல்யாண திருக்கோலத்தில் தம்பதி சகிதராக பக்தர்களுக்கு இத்தலத்தில் திருக்காட்சி அருள்கிறாள்

கல்யாண கோல அம்மையப்பர்
தனித்த சபையில், ‘காட்சி கொடுத்தநாதராக’ அருளும் கல்யாணக்கோல அம்மையப்பரை, மாலை சாற்றி வெள்ளிக் கிழமைகளில் அர்ச்சிப்பது, இத்தலத்திற்குரிய சிறப்பான வழிபாடு. தொடர்ந்து ஐந்து வெள்ளிக் கிழமைகள் இந்தப் பிரார்த்தனையைச் செய்பவர்களுக்குத் திருமணத் தடைகள், தோஷங்கள் விலகி இல்லறம் கைகூடும். நல்ல வாழ்க்கைத்துணை அமைவார்.
கூடுதலாக காளியின் சாநித்தியம் உள்ள விருட்சமான கருங்காலி இத்தல விருட்சமாக இருப்பதும் விசேஷம். மிருகசீரிஷ நட்சத்திரத் திற்கு உரிய விருட்சம் கருங்காலி. செவ்வாயின் ஆதிபத்தியம் நிறைந்தது.
எனவே செவ்வாயினால் தோஷம் ஏற்பட்டு வருந்து கிறவர்கள் இத்தலத்தில் தீர்த்தம் மற்றும் விருட்சத்துடன் இறைவி யரையும் வழிபடும்போது நற்பலன்கள் பெறுவது உறுதி. சோமாசி மாற நாயனார் வாழ்ந்து அருள்பெற்ற புண்ணிய பூமி என்பது கூடுதல் சிறப்பு.
எப்படிச் செல்வது?: திருவாரூர் - மயிலாடு துறை சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டத் திலிருந்து காரைக்கால் செல்லும் வழித் தடத்தில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம்.



















