ஊட்டி: 7 லட்சம் பூக்களில் சென்னை சென்ட்ரல், மகாபலிபுரம்! - 10 நாள்கள் நடைபெற இரு...
`60 ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையில் முழுமையான அமைச்சரவை.!' - வி.டி.சதீசன் பெருமிதம்
கேரள முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேந்த வி.டி.சதீசன் இன்று (மே 18) காலை 10 மணிக்கு பதவி ஏற்கிறார். வி.டி.சதீசன் தலைமையில் 21 அமைச்சர்களும் இன்று பதவி ஏற்கிறார்கள்.
திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் அருகே உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் பதவி ஏற்புவிழா நடைபெறுகிறது. அதில், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள வி.டி.சதீசன், லோக்பவனில் ஆளுநரை சந்தித்து அமைச்சர்களின் பட்டியலை நேற்று வழங்கினார்.
பின்னர் கண்டோன்மென்ட் ஹவுஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வி.டி. சதீசன் அமைச்சர்களிம் பட்டியலை வெளியிட்டார். அமைச்சர்களின் இலாகாக்கள் தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார். முதல்வராக வி.டி.சதீசன் அமைச்சர்களாக ரமேஷ் சென்னிதலா, பி.கே. குஞ்சாலிக்குட்டி, சன்னி ஜோசப், கே.முரளீதரன், மோன்ஸ் ஜோசப், ஷிபு பேபி ஜான், அனூப் ஜேக்கப், சி.பி.ஜான், ஏ.பி.அனில்குமார், என்.ஷம்சுதீன், பி.சி. விஷ்ணுநாத், ரோஜி எம்.ஜான், பிந்து கிருஷ்ணா, எம்.லிஜு, டி.சித்திக், கே.எம். ஷாஜி, பி.கே. பஷீர், வி.இ.அப்துல் கபூர், கே.ஏ. துளசி, மற்றும் ஓ.ஜே.ஜெனீஷ் ஆகியோர் பதவி ஏற்கின்றனர். பதவியேற்பு விழாவிற்காக சென்ட்ரல் ஸ்டேடியத்தில் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் லோக் பவனில் நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்துகொள்கின்றனர். பின்னர், தலைமைச் செயலகத்தில் அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறும்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எம்.பி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்பாரா என்பது நேற்று இரவு வரை உறுதிச் செய்யப்படவில்லை.

வி.டி.சதீசன் கூறுகையில், "60 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் முதலமைச்சருடன் ஒரு முழுமையான அமைச்சரவை பதவியேற்கிறது.
தகுதியான பலரை அமைச்சரவையில் சேர்க்க முடியவில்லை. சமூக மற்றும் இடங்கள் உள்ளிட்டவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியிருந்தது. இருப்பினும், இது தொடர்பாக கட்சியிலோ அல்லது கூட்டணியிலோ எந்த சர்ச்சைகளிம் இல்லை. தலைமை கொறடா பதவி கேரள காங்கிரஸ் ஜோசப் அணிக்கு வழங்கப்படும்" என்றார்.
முதல்வரைத் தவிர காங்கிரஸைச் சேர்ந்த 11 பேர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர். முஸ்லிம் லீக்கிலிருந்து 5 பேர் அமைச்சர்கள் ஆக உள்ளனர். இவர்களில், வி.இ.அப்துல் கஃபூர் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தனது பதவியை விட்டு விலக வாய்ப்பு உள்ளது. திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் சபாநாயகராகவும், ஷானிமோல் உஸ்மான் துணை சபாநாயகராகவும் நியமிக்கப்பட உள்ளனர்.
















