சேலம்: `பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு அன்புமணியால் அச்சுறுத்தல்!' - ர...
6000 டன் எடை கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்; 3,500 கி.மீ. பாயும் K-4 ஏவுகணை|சோதனை நடத்திய இந்தியா
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தாக்கும் வகையில் k - 4 எனும் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை வடிவமைத்திருக்கிறது.
அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான 'ஐ.என்.எஸ். அரிகாட்'டில் (INS Arighat) இருந்து இந்தியா, இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருக்கிறது.
இந்தச் சோதனை விசாகப்பட்டினம் கடற்கரையில் நேற்று (டிச. 25) நடைபெற்றது.

நீருக்கடியில் இருந்து அணு ஆயுத தாக்குதல்களை நடத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை இந்திய கடற்படைகளுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
'K-4' ஏவுகணை
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த 'K-4' ஏவுகணை 12 மீட்டர் நீளமும், 17 டன் எடையும் கொண்டது.
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. திட எரிபொருளால் இந்த 'கே - 4' ஏவுகணை இயங்கும் என்று கூறப்படுகிறது.
3,500 கி.மீ., துாரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை மூலம் எதிரியின் எல்லையை நெருங்காமலேயே கடலின் ஆழமான பகுதியில் இருந்தபடி அணு ஆயுததத்தாக்குதலை நடத்த முடியும்.
ஐ.என்.எஸ். அரிகாட் (INS Arighat)
இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பலையடுத்து, கடற்படையில் இணைந்த இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தான் ஐ.என்.எஸ் அரிகாட்.
இது 6000 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ் அரிகாட் அணுசக்தியால் இயங்குகிறது. அரிகாட்(Arighat) என்பது எதிரிகளை அழிப்பவன் என்ற அர்த்தத்தை கொண்டது.
ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் பல மாதங்கள் நீருக்கடியில் இருந்து செயல்படும் திறன் கொண்டது.
இந்திய கடற்படை மட்டுமின்றி DRDO, BHEL ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இந்த ஐ.என்.எஸ். அரிகாட் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஐ.என்.எஸ். அரிகாட் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட 'K-4' ஏவுகணை சோதனையின் வெற்றி, இந்திய கடற்படையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், நிலம், வான் மற்றும் நீருக்கடியில் தளங்களில் இருந்து அணு ஆயுதத்தை ஏவும் திறன் கொண்ட உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றிருக்கிறது.
















