சஞ்சு சாம்சன் இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்... அஸ்வின் கூறுவதென்ன?
Abisheik Sharma: யுவராஜின் பயிற்சி முகாம்; லாராவின் ஃபோன் கால்- அபிஷேக் சர்மா சாதித்தது எப்படி?
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அபிஷேக் சர்மா கலக்கியிருக்கிறார். 5 போட்டிகளிலும் சேர்த்து 279 ரன்களை எடுத்திருக்கிறார். 5 வது டி20 போட்டியில் அவர் ஆடியதெல்லாம் ருத்ரதாண்டவம். 54 பந்துகளில் 135 ரன்களை அடித்திருந்தார்.
அபிஷேக்கைக் கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் விழிபிதுங்கி நின்றனர். இந்நிலையில்தான், இந்த டி20 தொடருக்கு முன்பாக முன்னாள் இந்திய வீரர்கள் யுவராஜ் மற்றும் தவாணுடன் அபிஷேக் சர்மா பயிற்சி முகாமில் ஈடுபட்டிருந்ததும், பிரையன் லாராவுடன் போனில் பேசி நிறைய ஆலோசனைகளை வாங்கியிருந்ததையும் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அபிஷேக் சர்மாவின் ஆரம்பகால பயிற்சியாளரான ராஜ் குமார் சர்மா இதைப் பற்றி பேசுகையில், ``முதலில் ஒரு ரஞ்சி டிராபி போட்டியின் போதுதான் யுவராஜ் அபிஷேக் சர்மாவைச் சந்தித்தார். அபிஷேக்கின் திறனைப் பார்த்து வியந்தவர், நீ என்னுடன் பயிற்சி செய்ய வருகிறாயா எனக் கேட்டார். அதற்கு அபிஷேக், 'கிரிக்கெட்டைப் பொறுத்தவரைக்கும் நீங்கள்தான் என்னுடைய முன்மாதிரி. கடவுளைப் போன்றவர்.' எனக் கூறி அபிஷேக்கும் மகிழ்ச்சியோடு அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு யுவராஜ் அபிஷேக்கிற்கென்றே பிரத்யேகமாக நேரம் ஒதுக்கி பயிற்சிகளை வழங்கினார்.
இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்பாகக்கூட அபிஷேக்கை குருகிராமுக்கு வரச் சொல்லில் அங்கே 5 நாட்களுக்கு பயிற்சியளித்திருந்தார். அங்கே இருந்த தவாணும் அபிஷேக்கிற்கென நேரம் ஒதுக்கி நிறைய ஆலோசனைகளை வழங்கினார். நீண்ட நேரம் நின்று இன்னிங்ஸை கட்டமைத்து பெரிய இன்னிங்ஸ்களை ஆடும் நுட்பங்களை யுவராஜ் கற்றுக்கொடுத்தார். அதேமாதிரி, பிரையன் லாராவும் அபிஷேக்கை எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்புகொள் எனக் கூறியிருக்கிறார். இந்தத் தொடருக்கு முன்பாக அவரும் பல ஆலோசனைகளை அபிஷேக்கிற்கு வழங்கியிருந்தார்." எனக் கூறியிருக்கிறார்.
இளம் வயதிலேயே பெரிய ஜாம்பவான்களில் வழிகாட்டுதல் அத்தனை வீரர்களுக்கும் கிடைத்துவிடாது. அது அபிஷேக்கிற்கு கிடைத்திருக்கிறது. அவரும் அதன் மதிப்பை உணர்ந்து வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.