மனைவிக்கு ஊசி மூலம் பாதரசம் செலுத்திய கணவன்; 9 மாத போராட்டத்திற்கு பிறகு பெண் உய...
ADMK: ``டிசம்பர் 15-ம் தேதி எடுக்கின்ற முடிவு"- எடப்பாடியை எச்சரித்த ஓ.பன்னீர் செல்வம்
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான, 'அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் குழுவின் பெயர் 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்' என மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களிடம் உரையாற்றினார்.
அப்போது, ``சமுதாய சீர்திருத்தத்திற்காக வாழ்ந்தவர் தந்தை பெரியார், தமிழ் சமுதாயம் தலைநிமிர்ந்து நடப்பதற்காக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா, ஏழை தாய்மார்களின் கண்ணீரைத் துடைப்பதற்காகவே வாழ்ந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
இந்த முப்பெரும் தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல், ஆகிய குணங்களை ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித் தலைவி அம்மாதான்.
இந்த இயக்கத்தை தன்னுயிர் தந்து வரலாற்றுச் சிறப்புக்க இயக்கமாக உருவாக்கித் தந்தார்கள். ஜெயலலிதா மறையும்போது `எனக்குப் பின்னாலும் இந்த இயக்கம் பல நூறாண்டுகள் ஆட்சி செய்யும் நிலை இருக்க வேண்டும்' என்ற அபிப்பிராயத்தைச் சொன்னார்கள்.
அந்த இயக்கம் இன்றைக்கு சில சுயநலவாதிகள், சர்வாதிகார போக்கோடு இந்த இயக்கத்தை வழிநடத்தத் துணிந்ததால் ஏற்பட்ட விளைவு, தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. எவ்வளவோ சொன்னோம் கேட்கவில்லை.
தான்தோன்றித்தனமாக இந்த இயக்கத்தை வழிநடத்தி தமிழக மக்களுடைய நம்பிக்கையை இழந்துவிட்டோம். எனவே, நம்முடைய கழகத்தை மீட்டெடுப்பதற்காகத்தான் 'தொண்டர் உரிமை மீட்புக் குழு' இன்றைக்கு கழகமாக மாற்றியிருக்கிறோம்.

இந்த இயக்கத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற தவறான கொள்கையின் அடிப்படையில் சிலர் எடுத்த முடிவு, கழகத்தினுடைய பொதுச்செயலாளர் பதவியால் சிதைந்தது. இன்றைக்கு நாமெல்லாம் கண்ணீர் விட்டு அழுகின்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
அதன் அடிப்படையில், எதிர்காலத் திட்டங்கள் என்ன என்பதனை நாம் வகுத்து, நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
டிசம்பர் 15-ம் தேதி மீண்டும் தலைமை கழகத்தினுடைய கூட்டமும் மாவட்ட கழகத்தினுடைய கூட்டமும் கூட்டப்பட்டு கழகம் இனிமேல் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற, தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முடிவு எடுக்கப்படும்.
கழகம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அப்படி நடைபெறவில்லை எனில், வேறு முடிவுகளுக்கு எங்களை நீங்கள் தள்ளி விடாதீர்கள், அந்தப் பாவத்தை நீங்கள் செய்யாதீர்கள் என்பதை மட்டும் எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன்.
டிசம்பர் 15-ம் தேதி நாம் எடுக்கின்ற முடிவு அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும். பல்வேறு பிரச்னைகளுக்குள் நான் உள்ளே சென்று, மீண்டும் அதை பூதாகரமாக வெளிப்படுத்த விரும்பவில்லை. எனவே, திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்" என்றார்.













