ட்ரம்பின் கருத்து: `மீண்டும் ஒருமுறை சரணாகதிதான்" - பிரதமர் மோடியை சாடும் ராகுல்...
Area 51: `ஏலியன்கள் உண்மையானவர்களா?' - ஏரியா 51 ரகசியங்களை உலகுக்கு திறக்கும் டொனால்ட் ட்ரம்ப்
நள்ளிரவு வானத்தில் மின்னும் ஒரு மர்ம ஒளி, மனிதக் கண்களுக்குப் புலப்படாத வேகத்தில் நகரும் விண்கலங்கள், மற்றும் பல தசாப்தங்களாக அமெரிக்க அரசாங்கம் பூட்டி வைத்திருக்கும் ரகசியக் கோப்புகள் - இவை அனைத்தும் வெறும் கற்பனைக் கதைகள் அல்ல, நிஜம் என்று நிரூபிக்கும் காலம் வந்துவிட்டதோ...
"நாம் மட்டும் தான் இந்த அண்டவெளியில் இருக்கிறோமா?" என்ற கோடிக்கணக்கான மக்களின் கேள்விக்கு விடை சொல்லும் விதமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு, ஒட்டுமொத்த உலகையும் நெவாடா பாலைவனத்தை நோக்கித் திரும்ப வைத்துள்ளது.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஏலியன்கள் மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) தொடர்பான அனைத்து ரகசிய ஆவணங்களையும் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

"அமெரிக்க மக்கள் உண்மையை அறியும் உரிமை படைத்தவர்கள், இனி எதையும் மூடி மறைக்கத் தேவையில்லை" என்று அவர் கூறியுள்ளார். இந்தச் சூழலில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மீது ட்ரம்ப் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஒபாமா சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏலியன்கள் குறித்துப் பேசியதைச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், "ஒபாமா மிகவும் பாதுகாக்கப்பட்ட ரகசியத் தகவல்களைத் தவறுதலாகப் பகிர்ந்துவிட்டார், நான் இப்போது அந்தத் தகவல்களை முறையாக வெளியிடுவதன் மூலம் அவருக்கு ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களைச் சரி செய்கிறேன்" என்று தனது பாணியில் கிண்டலாக விமர்சித்துள்ளார்.
ஏலியன்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது 'ஏரியா 51' தான். இது அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் அமைந்துள்ள ஒரு மிக ரகசியமான விமானப்படைத் தளம். பல ஆண்டுகளாக அமெரிக்க அரசாங்கம் இப்படி ஒரு இடம் இருப்பதையே இல்லை என்று மறுத்து வந்தது, 2013-ல் தான் அதிகாரப்பூர்வமாக இந்த இடத்தின் இருப்பை ஒப்புக்கொண்டது.
ராணுவ ரீதியாக இது ஒரு சோதனைத் தளம் என்று சொல்லப்பட்டாலும், உலக மக்கள் இதனை வேற்றுக்கிரகவாசிகளின் ஆய்வுக்கூடமாகவே பார்க்கின்றனர். மிகவும் பலத்த பாதுகாப்பு கொண்ட இந்த இடத்திற்கு மேல் விமானங்கள் பறக்கக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏரியா 51-ஐச் சுற்றிப் பல மர்மக் கதைகள் உலவுகின்றன. குறிப்பாக, 1947-ஆம் ஆண்டு ரோஸ்வெல் பகுதியில் விழுந்ததாகக் கருதப்படும் ஒரு வேற்றுக்கிரக விண்கலமும், அதிலிருந்த ஏலியன்களின் உடல்களும் இங்குதான் கொண்டு வரப்பட்டுப் பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அங்கு பணிபுரிந்த பாப் லாசர் போன்ற சில விஞ்ஞானிகள், "அங்கு வேற்றுக்கிரகத் தொழில்நுட்பத்தைப் பிரித்தெடுத்து (Reverse Engineering), அதன் மூலம் அமெரிக்கா அதிநெருக்கடி காலங்களில் பயன்படுத்தக்கூடிய அதிநவீன ரகசிய விமானங்களை உருவாக்குகிறது" என்று கூறி உலகையே அதிர வைத்தனர். மனிதக் கண்களுக்குத் தெரியாத விமானங்கள், ஒலியை விடப் பல மடங்கு வேகத்தில் செல்லும் விண்கலங்கள் ஆகியவை அங்கு சோதிக்கப்படுவதாக எல்லாம் நம்பப்படுகிறது.
ட்ரம்ப் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவின் மூலம், பல தசாப்தங்களாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த 'டாப் சீக்ரெட்' கோப்புகள் பொதுமக்களின் பார்வைக்கு வரவுள்ளதாக சொல்லப்படுகிறது

இது உண்மையாகவே ஏலியன்கள் பூமிக்கு வந்தார்களா? ஏரியா 51-ல் மறைத்து வைக்கப்பட்டிருப்பது என்ன? விண்வெளியில் மனிதர்களைத் தாண்டிய சக்தி வாய்ந்த உயிரினங்கள் உள்ளனவா? போன்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!



















