'ஒரு முறை உங்களை தொட்டுக் கொள்ளட்டுமா'; அரவணைத்த மோகன்லால் - மூதாட்டி செய்த நெக...
Aval Awards: "நான் 15 ஆண்டுகளாக காட்டில் இருக்கிறேன்" - விஷா கிஷோர் ஷேரிங்ஸ்!
விகடனின் அவள் விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பசுமைப்பெண் விருது பெற்றார் நடிகர் கிஷோரின் மனைவி விஷாலா கிஷோர்.
பசுமைப் பெண் - விஷாலா கிஷோர்
விஷாலா, ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டன்ட். நாமறிந்த நல்லதொரு நடிகர் கிஷோரின் மனைவி. கிஷோர், சினிமாவில் பிஸியாக, விஷாலா கழனி நோக்கி நடந்தார். பெங்களூருவை அடுத்த கரியப்பன தொட்டி கிராமத்தில் புதர்மண்டிக் கிடந்தது அவர்களது ஏழு ஏக்கர் நிலம். விஷாலாவின் கடும் முயற்சியால் தற்போது சிறுதானியங்கள், பழங்கள், காய்கறிகள், மரங்கள் என அவ்விடத்தில் பசுமை பூத்துக் குலுங்குகிறது. வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் விலங்குகள் தொல்லை, சுரங்கத்தொழில் என பாதிக்கப்பட்டனர், அப்பகுதி பழங்குடி விவசாயிகள்.

அதனால் மாற்றுத்தொழிலுக்குச் சென்ற நூற்றுக் கணக்கான பெண்களை ஒருங்கிணைத்தார் விஷாலா. `பஃபல்லோ பேக் கன்ஸ்யூமர்ஸ்' எனும் இயக்கத்தைத் தொடங்கி, அவர்களுக்கு இயற்கை விவசாயம் கற்றுக்கொடுத்தார். இவரது வழிகாட்டலில், நிலமில்லாத ஏழைப் பெண் விவசாயிகளும், கூட்டுப் பண்ணை முறையில் குத்தகை நிலத்தில் வேளாண்மை செய்யத் தொடங்கினர். அவர்களது விளைபொருள்களுக்கு, பெங்களூருவிலுள்ள விஷாலாவின் வீடுதான் அங்காடி.
"அவங்க என்னை ஏற்றுக்கொண்டது, எனக்கு மிகப் பெரிய பாக்கியம்"
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மருத்துவர் கு.சிவராமன் கைகளால் விருதுபெற்ற விஷாலா, "இங்கே வந்த கலைஞர்கள், இலக்கியவாதிகள், இசைக்கலைஞர்கள் எல்லோரும் தான் இந்த உலகத்தை அழகாக்குகிறார்கள். ஆனால் நான் மற்றொரு வித்தியாசமான உலகுடன் தொடர்பில் உள்ளேன். நான் காட்டில் வசிக்கிறேன். இன்று காலை கூட ஒரு யானை வந்ததால் 5 நிமிடம் நின்றுதான் நாங்கள் வரவேண்டியிருந்தது.
செடி, கொடிகளோடு மக்கள் இணையும் இடத்தில்தான் என் இதயம் இருக்கிறது. நான் 15, 20 வருடமா காட்டில் வாழ்கிறேன். என்னைக் கண்டுபிடித்து அங்கீகரித்த விகடனுக்கு நன்றி.
பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் விகடனுக்கு ஒரு கலாச்சார முக்கியத்துவம் இருக்கிறது.
என்னுடன் கீதா, லதா என்ற இரண்டு உழவர்கள் வந்திருக்கின்றனர் (அவர்களை மேடைக்கு அழைத்தார்). நாங்கள் வசிக்கும் இடம் பெங்களூரில் இருந்து 30 கிலோமீட்டர்தான். ஆனால் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் என்பதனால் சாதாரண கிராமங்களில் நடக்கும் உட்கட்டமைப்பு முன்னேற்றம் எதுவும் இங்கே இருக்காது. ரோடு கிடையாது, ட்ரான்ஸ்போர்ட் கிடையாது. ஆனாலும் வெளியில் இருந்து பிடிவாதமாக கடினமா உழைச்சு அவங்க குடும்பத்துக்கு, கிராமத்துக்கு நல்ல உணவு கிடைக்கத் தேவையான பல பொருட்களை மேல கொண்டு சேர்த்திருக்காங்க. இப்ப அவங்க என்னை ஏற்றுக்கொண்டது, நான் நல்ல விஷயம் செய்றேன்னு நம்புவது எனக்கு மிகப் பெரிய பாக்கியம். அவங்ககிட்ட இருந்துதான் நான் கத்துகிட்டேன். இந்த அங்கீகாரத்துக்கு நன்றி விகடன்" எனப் பேசினார்.












