கள்ளக்குறிச்சி: பெண் B.L.O தற்கொலை; வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிச்சுமை காரணம...
கள்ளக்குறிச்சி: பெண் B.L.O தற்கொலை; வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிச்சுமை காரணமென கணவர் புகார்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜாகிதா பேகம், சிவனார்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம உதவியாளராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தப்பணியில் இருந்தார்.
அதில் வாக்காளர்களுக்கு படிவம் வழங்குதல், பூர்த்தி செய்யப்பட படிவங்களை திரும்பப் பெறுதல் போன்ற பணிகளை செய்து வந்தார். கடந்த நவம்பர் 20-ம் தேதி வழக்கம்போல வேலைக்குச் சென்ற ஜாகிதா பேகம், மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவரது கணவர் முபாரக் சாப்பாடு வாங்கி வருவதற்காக ஹோட்டலுக்குச் சென்றார். அதையடுத்து ஜாகிதா பேகம் வீட்டுக்குச் சென்ற அவரது உறவினர் ஒருவர், ஜாகிதா பேகம் ஊஞ்சல் சங்கிலியில் தூக்கில் தொங்கியதைப் பார்த்து கூச்சலிட்டார்.

அதைக்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ஜாகிதா பேகத்தை மீட்டு திருக்கோவிலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
அதையடுத்து ஜாகிதா பேகத்தின் உடல், உடற்கூராய்வு சோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்தப்பணியால் ஏற்பட்ட அழுத்தம்தான் தன்னுடைய மனைவியின் தற்கொலைக்கு காரணம் என காவல் நிலையத்தில் புகார் எழுப்பியிருக்கிறார் முபாரக்.
அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்திருக்கும் திருக்கோவிலூர் போலீஸார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.



















