”கோவை, மதுரை மெட்ரோ திட்ட விவகாரம்; யார் சொல்வதை நம்புவது என்றே தெரியவில்லை!”- அ...
”கோவை, மதுரை மெட்ரோ திட்ட விவகாரம்; யார் சொல்வதை நம்புவது என்றே தெரியவில்லை!”- அப்பாவு
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு. அப்போது பேசிய அவர், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா குறித்து எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க முடியுமோ ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்து வந்துள்ளார். கிடப்பில் போடப்படும் மசோதாவை நிறைவேற்ற காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், ஆளுநர் விருப்பு, வெறுப்பு இல்லாமல் செயல்பட வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசு தொடர்ந்த இவ்வழக்கில் காலக்கெடு கொடுப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதைத்தான் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வழக்கிற்கான தீர்ப்பு இன்னும் கொடுக்கப்படவில்லை. கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மத்திய அமைச்சர் அதனை நிராகரித்ததாகச் சொல்கிறார். ஆனால், தமிழக பா.ஜ.கவினர் அதனை நிராகரிக்கவில்லை, திருப்பித்தான் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறி வருகின்றனர்.
யார் சொல்வதை நம்புவது என்றே தெரியவில்லை. தமிழக அரசால் கொடுக்கப்பட்டுள்ள மெட்ரோ திட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி பல இடங்கள் பாதிக்கப்படும் எனவும், அளவீடுகள் குறைவாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டித்தான் திருப்பி அனுப்பியுள்ளதாக பா.ஜ.கவினர் கூறி வருகின்றனர். மெட்ரோ திட்டத்திற்கு என்று இலவசமாக நிதி கேட்கவில்லை. 50 சதவீத பங்குத்தொகையை மட்டுமே கேட்கிறோம்.

சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 6 ஆண்டுகள் எதனையும் செய்யாமல் இருந்த சூழலில்தான் தமிழக அரசு ஆறில் ஐந்து பங்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தற்போது நடைபெற்று பெறுகிறது. மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த வங்கியில் கடன்தான் வாங்கியுள்ளோம். அதனையும் மத்திய அரசு சொல்லித்தான் வாங்கியுள்ளோம் எனச் சொன்னால் அதில் என்ன நியாயம் உள்ளது. ஒரு பங்குத்தொகையை மட்டும் கொடுத்துவிட்டு அனைத்தையும் தாங்கள்கொடுத்ததாக சொல்லி வருகிறார்கள். அதற்கு வட்டித்தொகைகட்ட மத்திய அரசு முன் வருமா?” என்றார்.














