`கை எப்படி குளர்ச்சியாக இருக்கு?' - ஆசிரியை சித்ரவதையால் மாணவி தற்கொலை; அடுத்தடு...
`கை எப்படி குளர்ச்சியாக இருக்கு?' - ஆசிரியை சித்ரவதையால் மாணவி தற்கொலை; அடுத்தடுத்த 4வது சம்பவம்
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 11வது வகுப்பு படித்து வரும் மாணவி ஷாக்சி(17). இம்மாணவி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இம்மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.
அக்கடிதத்தில் தனது வகுப்பு ஆசிரியை தண்டனை என்ற பெயரில் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். வகுப்பில் இரண்டு விரல்களுக்கு இடையில் பேனாவை வைத்து இரண்டு விரல்களையும் நன்றாக அழுத்துவார் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு கையை பிடித்துக்கொண்டு அடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வகுப்பில் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது, கையை பிடித்து, `எப்படி இந்த அளவுக்கு குளர்ச்சியாக இருக்கிறது?' என்று கேட்பார் என்றும் கடிதத்தில் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரி ஆர்த்தி சிங் தெரிவித்துள்ளார்.

மாணவி வீட்டில் சகஜமாகத்தான் இருந்தார் என்றும், அவரை பள்ளியில் யாரோ சித்ரவதை செய்திருக்கவேண்டும் என்று மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர். அனைத்து கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
4 மாணவர்கள் தற்கொலை
கடந்த சில நாட்களில் ஆசிரியர்களின் சித்ரவதையால் 4 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆசிரியர்களின் சித்ரவதையால் மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து இருக்கிறது. டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன்பு 3 ஆசிரியர்களின் சித்ரவதையால் 10வது வகுப்பு படிக்கும் மாணவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதே போன்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் 4வது வகுப்பு படிக்கும் மாணவியும் பள்ளி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதே போன்று ராஜஸ்தானில் உள்ள கரவுலி மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்களின் சித்ரவதையால் 9வது வகுப்பு படிக்கும் மாணவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் கடிதமும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். அதில் தனது சாவுக்கு காரணமான ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.



















