Japan: "வேலையை முடிக்காமல் வீட்டுக்குப் போக முடியாது" - ஜப்பானிலுள்ள இந்த வினோத ...
`வேட்புமனு வாபஸ் அச்சம்’ - கூட்டணியில் இருந்தும் வேட்பாளர்களை ஹோட்டலில் தங்கவைத்த பாஜக, சிவசேனா
மகாராஷ்டிராவில் வரும் டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிந்து, மனுவை வாபஸ் பெறும் நாள் நேற்றோடு முடிந்தது. வேட்பு மனுவை திரும்ப பெறும் கடைசி நாளில் அரசியல் கட்சிகள் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட்டன. ஒரு கட்சி வேட்பாளரை மற்றொரு கட்சி விலைக்கு வாங்கிவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தன. அதுவும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், பா.ஜ.கவும் தங்களது வேட்பாளர்களை பாதுகாப்பதில் தீவிரம் காட்டி வந்தன.
ஆட்சியில் கூட்டணியில் இருக்கும் இக்கட்சிகள் மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதையடுத்து வேட்புமனுவை வாபஸ் பெறும் கடைசி நாளில் பா.ஜ.க தங்களது வேட்பாளர்களை விலைக்கு வாங்கிவிடக்கூடாது என்பதற்காக ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி வேட்பாளர்களை தனது சொந்த ஊரான தானேவிற்கு கொண்டு சென்று ஹோட்டல்களில் தங்க வைத்திருந்தார்.

இதே போன்று பா.ஜ.கவும் கடைசி நேரத்தில் சிவசேனா(ஷிண்டே)வுக்கு ஆதரவாக வேட்பு மனுவை வாபஸ் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக தங்களது வேட்பாளர்களை மும்பை மற்றும் டோம்பிவலிக்கு கொண்டு வந்து ஹோட்டல்களில் தங்க வைத்திருந்தனர். வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான காலக்கெடு முடிந்த பிறகுதான் வேட்பாளர்கள் அவரவர் வார்டுக்கு செல்ல சிவசேனாவும், பா.ஜ.கவும் அனுமதித்தன. அம்பர்நாத் நகராட்சி வரலாற்றில் முதல் முறையாக வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்ப பெற்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில் ஹோட்டல்களில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர்.
அம்பர்நாத்தில் ஏற்கனவே பா.ஜ.கவை சேர்ந்த 5 வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனையின் போது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதோடு சிவசேனாவும், பா.ஜ.கவும் மாறி மாறி கட்சியில் இருந்து நிர்வாகிகளை இழுக்கும் வேலையில் ஈடுபட்டன. இது குறித்து ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவிடமும் புகார் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
















