புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைந...
BB TAMIL 9 DAY 102: தனிப்பட்ட தாக்குதலில் இறங்கிய திவாகர்; என்டர்டெயினர் வினோத்! பிக் பாஸ் ஹைலைட்ஸ்
இந்த எபிசோடில் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
வினோத்தும், பிரவீன்ராஜூம் இணைந்து திவாகரை வம்பிழுத்ததும், அவர் மிகையாக அவதூறுகளை வாரி இறைத்ததும், கொண்டாட்டத்தின் கரும்புள்ளிகள்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 102
‘சாப்பாடு தருவதில் ரம்யா பாரபட்சமாக நடந்து கொண்டார்’ என்கிற புகாரை வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் பதிவு செய்து கொண்டிருந்தார் திவாகர். (‘இவருக்கு இதுதான் வேலை!) அதைக் கேட்டு ஓடி வந்த ரம்யா, “நான் அப்படிச் செய்யலை. நீ எப்படி வேணா வெச்சிக்கோ. வாய் இருக்குன்னு இஷ்டத்திற்கு பேசாத” என்று சீறினார்.
ஒருவரிடம் இணக்கமாக பேசி விட்டு அடுத்த கணமே எப்படி உக்கிரமாக சண்டை போட திவாகரால் முடிகிறது என்பது தெரியவில்லை. பாருவின் வெற்றிடத்தை பூர்த்தி செய்து அவ்வப்போது சண்டைகளை உற்பத்தி செய்து காமிராக்களுக்கு தீனி போடுகிறார்.
பண்டிகைக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தந்த பி்க் பாஸ், பிறகு கேட்ட கேள்விதான் காமெடியானது. ‘பொங்கல் வைக்கத் தெரியும்ல?’ - “கிச்சடி செஞ்சு வெச்சிடாதீங்க” என்று கிண்டலடித்தார் வினோத். ஒருவழியாக விளம்பரப்படம் மாதிரி பொங்கல் பொங்கி வந்தது.
அடுத்த நடந்த கோலப் போட்டியின் போது ‘ஓரே கண்டிஷன், அதுல மாடு இருக்கணும்’ என்று காமெடி செய்தார் பிக் பாஸ். “ஒண்ணும் பிரச்சினையில்ல. வாட்டர் மெலன் படத்தை வரைஞ்சுட்டா போதும்” என்று வினோத் கிண்டல் செய்ய ‘காக்கா வினோத்’ என்று இறங்கினார் திவாகர்.

தனிப்பட்ட தாக்குதலில் இறங்கிய திவாகர்
இவர்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்து நடந்த சண்டையும் தரக்குறைவான வார்த்தைகளும் உருவக்கேலிகளும் முகம் சுளிப்பதாக இருந்தது. தன்னை யாராவது ஒரண்டை இழுத்தால் திவாகர் அதற்கு பதிலடி தருவதில் தவறில்லை. ஆனால் மிகவும் தரம் இறங்கி தனிப்பட்ட தாக்குதலில் பேசுகிறார். அதற்கு வருந்துவதாக தெரியவில்லை.
சேது சார் அனுப்பிய பொங்கல் உணவு வந்தவுடன் மக்கள் உற்சாகமடைந்தார்கள். ‘இன்னிக்கு பண்டிகைல்ல. கவுச்சி இருக்காது’ என்றார் வினோத். உண்ட மயக்கத்தில் திவாகர் அசந்து விட “சாப்பிடற மிஷினை ஆன் பண்றான். அது ஓடிட்டே இருக்கு. அப்புறமா தூங்கப் போயிடறான்’ என்று வினோத் கிண்டலடிக்க, திவாகரிடமிருந்து பீப் செய்யப்பட்ட வார்த்தைகள் கிளம்பின.
“என்னோட கவுண்ட்டருக்கு அவங்க பயப்படறாங்க”என்று பெருமையடித்துக் கொண்டார் திவாகர். வினோத்துடன் இணைந்து கொண்டு பிரவீன்ராஜூம் திவாகரை கிண்டலடிக்க ஆரம்பித்தார்.
“குரங்கு வேணும் மாமா.. அதை பிடிச்சு தாங்க ஆமா” என்று திவாகரை ஜாடையாக அவர் கிண்டலடிக்க, தனிப்பட்ட தாக்குதலில் இறங்கினார் திவாகர். “உன் மனைவி மேல சந்தேகப்பட்ட. உன் மூஞ்சியைப் பாரு. யாரு உன் கூட இருப்பா” என்பது மாதிரியெல்லாம் திவாகர் இறங்கியது அநாகரிகம்.
திவாகர் மீது உருவக்கேலி செய்யப்படுவது உண்மைதான். அவர் அதை புகாராக எடுத்துச் செல்லலாம். அல்லது பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால் அதையே பதிலடியாக தரலாம். ஆனால் ஒரு டாஸ்க்கில் நெகிழ்வாக சொல்லப்பட்ட தனிப்பட்ட தகவல்களையெல்லாம், சண்டை சமயத்தில் ஆயுதமாக பயன்படுத்துவது தரக்குறைவான செயல். இதை மிகவும் சாதாரணமாகச் செய்கிறார் திவாகர்.

பிக் பாஸ் வீட்டில் அதிகமாக காமெடி செய்தவர் வினோத்
“நீங்க ரெண்டு பேரும் பண்றது நல்லாவேயில்ல. எங்களுக்கெல்லாம் அசௌகரியமா இருக்கு. உடனே நிறுத்துவங்க” என்று விக்ரம் கண்டித்தது சிறப்பு. கெமி உட்பட மற்றவர்களும் இதை கண்டித்தார்கள். கயிறு இழுக்கும் போட்டி அடுத்தபடியாக நடந்து ‘ஜல்லிக்கட்டு’ அணி வெற்றி பெற்றது.
பிக் பாஸ் ஒளிபரப்பிய வீடியோ. வீட்டில் நிகழ்ந்த ‘fun moments’. இதில் வினோத் அடித்த டைமிங் கமெண்ட்டுகள் ரகளையாக இருந்தன. இந்த நோக்கில் பார்வையாளர்களை அதிகம் சிரிக்க வைத்தவராக வினோத் இருப்பார். இதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போதே சரியாக அடுத்த டாஸ்க்கை வைத்தார் பிக் பாஸ்.
‘இந்த வீட்டில் உங்களை அதிகம் சிரிக்க வைத்த நபர் யார் என்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும்.
இதில் வினோத்திற்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்ததில் ஆச்சாியமில்லை. சபரிக்கும் சில வாக்குகள் கிடைத்தன. அரோவின் பெயரையும் சொன்னார்கள். விக்ரமின் பெயரைச் சொன்னார் சுபிக்ஷா.
கடைசியில் எழுந்த வந்த வினோத் “வாட்டர் மெலன் இல்லாட்டி இந்த காமெடி நிகழ்ந்திருக்காது. அவர்தான் என்னை அதிகம் சிரிக்க வைத்தவர்’ என்று சொன்னது நன்று. ஆனால் திவாகரோ “நான் ஹீரோ மெட்டீரியல்ப்பா.. காமெடியன்ல சேர்க்காதீங்க” என்று வழக்கம் போல் அலப்பறை செய்தார். ‘ஒண்ணுமில்லை. இதுவே காமெடிதான்” என்று வீட்டை கலகலக்க வைத்தார் வினோத்.
‘நான்தான் வீட்டின் முதல் போட்டியாளர்’ என்று திவாகர் அடிக்கடி தம்பட்டம் அடித்துக் கொள்வது வழக்கம். இதைப் பற்றி அரோ அடித்த கமெண்ட் “ஆமாம்.. புது வீடு கட்டும் போது முதல்ல மாட்டைத்தான் உள்ளே விடுவாங்க”.. (செமல்ல?!) பிக் பாஸ் தரும் கவுண்ட்டர்களும் நகைச்சுவை நிரம்பியவை என்று நினைவுகூர்ந்தார் பிரவீன்ராஜ்.
“ஒன்பது வருஷமா நடக்கற சீசன்ல நான் முதன்முறையா சிரிச்சது வினோத் அடிச்ச கமெண்ட்டிற்குத்தான்” என்று பிக் பாஸ் சொன்னது சிறப்பு. (தாய்லாந்து).

இரட்டையர் காமெடியர்களில் ஒருவர் கீழிறிங்குவது அவசியம்
“காமெடிக்கு acceptance முக்கியம்” என்று திவாகருக்கு சபரி சொன்னது சிறப்பு. திவாகரையும் வினோத்தையும் கவுண்டமணி- செந்தில் காமெடி ஜோடிக்கு இணையாக சொல்கிறார்கள். ஒருவகையில்தான் அது சரியாக வரும்.
எந்தவொரு இரட்டையர் காமெடியாக இருந்தாலும் ஒருவர் மேலே நிற்க, இன்னொருவர் அதற்கு அடிபணிந்தால்தான் அந்த நகைச்சுவை பலனளிக்கும். கவுண்டமணியிடம் செந்தில் அடிவாங்கியதால்தான் அந்த நகைச்சுவை புகழ்பெற்றது. (எட்டி உதைப்பதெல்லாம் நகைச்சுவையா என்கிற கேள்வி வேறு டிபார்ட்மெண்ட்!).
ஒரு காலத்தில் இளையராஜாவின் பாடல்களும், கவுண்டமணி - செந்தில் காமெடியும் இல்லாத படமே கிடையாது. இவை இரண்டும் இருந்தால் அந்தப் படத்தின் குறைந்தபட்ச வெற்றிக்கு உத்தரவாதம் கிடைத்து விடும்.
ஆனால் ஒரு முறை செந்திலை சிலர் ஏற்றி விட்டதாகச் சொல்கிறார்கள். “நீங்கள் இருப்பதால்தான் கவுண்டமணிக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. தனியாக வந்து விடுங்கள்” என்று. செந்திலும் அது போல் வெளியே வந்தார். ஆனால் வாய்ப்புகளே கிடைக்கவில்லை. கவுண்டமணியோ தனி ஆவர்த்தனத்திலும் ஜொலித்தார். பிறகு செந்தில் மன்னிப்பு கேட்டு மீண்டும் இணைந்தார் என்று ஒரு தகவல் இருக்கிறது.

ஆக, இரட்டையர் காமெடியில் ஒருவர் கேலியை ஏற்றுக் கொள்வது அவசியம். சோஷியல் மீடியா புகழ் கோபி சுதாகர் வீடியோக்களையும் பாருங்கள். ஒருவர் தவறு செய்து விட்டு விழிக்க, இன்னொருவர் கிண்டலடித்து அடிப்பார். அப்போதுதான் சிரிக்க முடியும்.
ஆனால் இந்த acceptance திவாகரிடம் இல்லை. அவர் தன்னை சூப்பர் ஸ்டாராக கற்பனை செய்து கொண்டு அந்த உலகில் வாழ்கிறார். எனவே செந்திலாக மாறுவதற்கு அவருக்கு வாய்ப்பேயில்லை.!





















