தங்கம், வெள்ளி விலை இனி சரிவுக்கு வருகிறதா? முதலீட்டில் கவனம் தேவையா? - நிபுணர் ...
BB Tamil 9 Day 104: ``பாரு, கம்ருதீன், நந்தினி மிஸ் யூ"- போட்டியாளர்களின் செய்தி; நெகிழ்ந்த பிக்பாஸ்
இந்த எபிசோடில் விவரிக்கும்படியாக அதிக சம்பவங்கள் நிகழவில்லை. வீடியோ தொகுப்புகள்தான் நிறைய. ஒரு farewell party.
விக்ரமின் வீடியோவைத் தொடர்ந்து திவ்யா, சபரி, அரோரா ஆகியோரின் பயண வீடியோக்கள் ஒளிபரப்பாகின. ஒவ்வொருவரின் ஆளுமையையும் வைத்து வழக்கம் போல் உத்வேகமான மற்றும் ஊக்க வார்த்தைகளைக் கூறினார் பிக் பாஸ்.
போட்டியாளர்கள் பிக் பாஸிடம் அந்தரங்கமான தோழமையையும் பிரியத்தையும், உரிமையுடன் கேட்டுப் பெறுகிற தனிப்பட்ட அன்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. அடைக்கப்பட்ட சூழலில் சக போட்டியாளர்களுடன் பேச முடியாத விஷயங்களை, தவிப்புகளை பிக் பாஸிடம் மட்டுமே பகிர முடியும்.

தனது வசீகரமான குரலாலும் அர்த்தம் மற்றும் ஆறுதல் பொதிந்த சொற்களாலும் ஒரு மருத்துவர் போல் அவர்களை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார் பிக் பாஸ். எனவே அவரது ஒரு பாராட்டுக்கு கூட போட்டியாளர்கள் உடைந்து போய் நெகிழ்ந்து அழுது விடுகிறார்கள். அன்றாட வாழ்விலும் நாம் இப்படியொரு காட்ஃபாதரை சம்பாதித்து வைத்திருப்பது அவசியம்.
பிக் பாஸின் குரலுக்கும் சொற்களுக்கும் நெகிழ்ந்த போட்டியாளர்கள்
நாள் 104. மக்களைக் கூட்டி அமர்த்திய பிக் பாஸ், இறுதிப் போட்டியாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு இதுதான் கடைசித் தருணம் என்பதை தனது பிரத்யேக சொற்களால் உணர்த்தினார். ‘உளுந்து வெதைக்கலையிலே’ பாடலின் மெட்டில் தனது வார்த்தைகளைப் போட்டு பிக் பாஸை பாராட்டி மகிழ்ந்தார் வினோத்.
‘உணர்வுகளின் பரிமாணங்கள்’ என்கிற தலைப்பில் பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்த சென்டிமென்ட் தருணங்கள் கொண்ட வீடியோ ஒளிபரப்பானது. பிரவீன்ராஜ், கனி உள்ளிட்டவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் குழந்தை போல தேம்பித் தேம்பி அழுதார்கள். அனைவருக்கும் சுண்டல் போல டிஷ்யூ பேப்பரை விநியோகித்தார் அமித்.

‘பாரு, கம்ருதீன், நந்தினி’ ஆகிய மூவரையும் குறிப்பிட்டு ‘மிஸ் யூ’ என்று போட்டியாளர்கள் சொன்னது சிறப்பு. ‘உங்களின் நேரம் முடிவடைகிறது’ என்று ஒவ்வொரு போட்டியாளரின் பெயரையும் சொன்ன பிக் பாஸ், பாரு மற்றும் கம்ருதீன் பெயரையும் சேர்த்து சொன்னது நன்று. (நந்தினியை விட்டு விட்டது ஏன்?!)
“எந்த சீசன்லயும் நான் அதிகமா சென்டியாக மாட்டேன். ஆனா இந்த சீசன்ல உங்க கூடவே இருந்த மாதிரி ஒரு ஃபீலிங்” என்று பிக் பாஸ் சொன்னதும் போட்டியாளர்கள் மகிழ்ந்து போனார்கள். (அப்படியா சொல்றீங்க?!)
தகுதியானவருக்கு வெற்றிக் கோப்பை கிடைத்ததா?
அனைவரையும் கார்டன் ஏரியாவிற்கு வரவழைத்தார் பிக் பாஸ். ‘பேட்ட’ படத்திலிருந்து ‘உல்லாலா’ என்கிற ரகளையான பாடலை முழுதாக ஒலிக்க விட்டார். அனிருத் இசையமைக்கும் பாடல்களில் ஒரே மாதிரியான மிக்சி சத்தம் வருவதாக புகார் சொல்லப்பட்டாலும், இந்தப் பாடல் சிறப்பானது. ‘சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு’ என்று கவலையை உதறித் தள்ளும் பாடல் வரிகளை எழுதியிருப்பார் விவேகா.
பாடலுக்கு நடனமாடி முடிந்ததும், இந்த சீசனின் சிக்னேச்சர் டியூனின் படி தங்களின் கைத்தட்டல்களை அனைவரும் வழங்கினார்கள். ஃபைனலிஸ்ட்டுகள் தவிர மற்ற அனைவரும் வெளியேறியதால் வீடு வெறிச்சென்றாகியது. ஆட்கள் நிறைய இருக்கும் போது ஏற்படும் சண்டைகள் இனி நிகழாது. திவ்யாவும் அரோவும் சமைப்பதில் பிஸியாக இருக்க, கார்டன் ஏரியாவில் படுத்திருந்த விக்ரமும் சபரியும் ‘பயமாயிருக்கு.. யாராவது இருக்கீங்களா?’ என்று புதுப்பேட்டை தனுஷ் மோடில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது வெளியாகி விட்டது. என்றாலும் நிகழ்ச்சியின் வழியாகவே தெரிந்து கொள்வோம். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற சொல்லாடலை பிக் பாஸ் உண்மையாக்கி விட்டது போல. அதைப் பற்றி நாளைய (இறுதி) கட்டுரையில் பார்க்கலாம். மற்றபடி சில பொதுவான விஷயங்கள்.
பிக் பாஸ் ஷோவில் இருந்து நாம் கற்க வேண்டியதும் பெற வேண்டியதும்
பிக் பாஸ் வெற்றியாளருக்கு அடிப்படை தகுதி என்ன? கவனக்கலைப்புகள் மிகுதியாக இல்லாத சூழலில் அந்நிய மனிதர்களுடன் அடைக்கப்பட்ட போட்டியாளர், சக மனிதர்களோடு இணக்கமோடும் சகிப்புத்தன்மையோடும் நூறு நாட்கள் இருக்க வேண்டும். இதுதான் இந்த ஆட்டத்தின் அடிப்படையான சவால். ஒரு மனிதரின் சகிப்புத்தன்மையை சோதிப்பதுதான் இந்த ஆட்டத்தின் ஆதாரமான விதி.

ரயில் அல்லது பேருந்தில் நிகழும் ஒரு சிறிய பிரயாணத்திலேயே பாருங்கள். நம்மால் சக மனிதர்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை. எரிச்சல் கொள்கிறோம். பரம்பரை விரோதிகள் போல வெறுக்கிறோம். அவ்வளவு ஏன், நம் உயிருக்கு உயிராக நினைக்கும் குடும்ப உறுப்பினர்களிடையே அனுதினமும் சண்டைகள் நிகழ்கின்றன. எத்தனையோ வருடங்கள் கடந்தாலும் தம்பதிகளுக்குள் சண்டை. குழந்தைகளுக்குள் சண்டை. உறவினர்களுக்குள் சண்டை. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை.
மனதில் தோன்றுவதையெல்லாம் உடனே செயல்படுத்தி விடாமல், எதிர் தரப்பின் பக்கம் நின்று சற்று நிதானித்து யோசித்துப் பார்த்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே தீர்ந்து விடும். ஆனால் அவ்வாறான நிதானமும் பொறுமையும் பொதுநலமும் நம்மிடம் இல்லை. சுயநலம்தான் ஆட்டிப் படைக்கிறது.
பிக் பாஸ் போட்டியாளர்களும் நாமும் வேறு வேறு நபர்கள் அல்ல. நாம்தான் அவர்கள். அவர்கள்தான் நாம். எனவே அவர்களை அயல் கிரக மனிதர்களாக கருதிக் கொண்டு ‘எத்தனை மோசமா நடக்கறான் பாரேன்’ என்று திட்டித் தீர்ப்பதில் பலனில்லை. அப்படி பேசும் நாமே ஒரு போட்டியாளராக உள்ளே சென்றால் அதை விடவும் மோசமாக எதிர்வினையாற்றி அம்பலமாகக்கூடும்.

வாசிப்பவருக்கு சலித்தாலும் இதையே நான் தொடர்ந்து செல்வேன். பிக் பாஸ் என்பதை சண்டைகளை வேடிக்கை பார்த்து வம்பு பேசி மகிழும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளாமல், இப்படியொரு நிலையில் இருந்தால் நாம் என்ன செய்திருப்போம், அன்றாட வாழ்க்கையில் என்னவெல்லாம் கீழ்மைகளை இதுவரை செய்தோம் என்று சுயபரிசீலனையுடன் மனதிற்குள் ஓட்டிப் பார்ப்பதே. நடந்தவற்றை மாற்ற முடியாது. இனியாவது அந்தக் கீழ்மைகளின் சாயல் நமக்குள் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் இந்த நிகழ்ச்சியினால் கிடைக்கும் ஒரே நேர்மறை பலன்.
அது நிகழ்ந்தால் நாம் ஒவ்வொருவருமே பிக் பாஸ் கோப்பையை ஏந்தி நிற்கும் வெற்றியாளர்தான்.

















