TVK : 'அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு எங்களை ஏன் அழைக்கவில்லை?' - தவெக காட்டம்!
BB Tamil 9 Day 29: `என் பர்சனல் பத்தி யாரும் பேசக்கூடாது' - திவ்யாவை வறுத்தெடுத்த பாரு
பாரதிராஜா திரைப்படத்தில் கவுண்டமணி நடித்த ஒரு நகைச்சுவைக் காட்சி. ஊரிலுள்ள பெரிய மனிதர்களின் வீட்டு வாசலில் அமர்ந்து “சாமி.. ஒரே குளிரா இருக்கு. தாங்க முடியலை. கொஞ்சம் காசு கொடுத்தீங்கன்னா.. ஊத்திக்குவேன்” என்று அனத்துவார். ‘இவன் கிளம்பினால் போதும்’ என்று அவர்கள் காசு தந்து தொலைப்பார்கள்.
குடித்து விட்டு வரும் கவுண்டமணி, காசு கொடுத்த பெரிய மனிதரின் வாசலை சரியாகத் தேடி அமர்ந்து “ஏன்யா.. நான் நல்லா இருக்கறது புடிக்கலையா.. நான் குடிச்சு சாகணும்.. அதுக்குத்தானே காசு கொடுத்தே... நீ நல்லா இருப்பியா?” என்று சாபம் விடுவது போல அனத்துவார். என்ன செய்வது என்று தெரியாமல் பெரிய மனிதர் தலையைப் பிய்த்துக் கொள்வார்.
இந்த எபிசோடில் பாருவிடம் மாட்டிக் கொண்ட திவ்யாவின் கதையும் இப்படித்தான் இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 29
‘இவன் இன்னும் திருந்தல மாமா’ என்கிற கதையாக ‘தமிழக மக்களே..’ என்று ரீல்ஸ் போட ஆரம்பித்துவிட்டார் திவாகர். கொசுக்கடியில் கார்டன் ஏரியாவில் படுக்கும் தண்டனை தரப்பட்டாலும், ‘நடிப்பு அரக்கன்’ கடியிலிருந்து தப்பிக்க மக்களுக்கு வழியில்லை.
என்னதான் விசே தொடர்ந்து அட்வைஸ் செய்தாலும் “அவர் ஒண்ணும் ரீல்ஸ் போட வேணாம்ன்னு சொல்லல’ என்கிற லாஜிக்கையே தொடர்ந்து பேசி, கர்ணன் படக்காட்சியை லட்சத்தி ஓராவது முறையாக நடித்துக் கொண்டிருந்தார். (கர்ணன் படத்தை பார்க்கும் ஆசை இனிமேல் யாருக்காவது வரும்?!)
நள்ளிரவு 2 மணியைத் தாண்டியும் பாருவும் கம்ருதீனும் தங்களின் பிரச்னையை இன்னமும் உருட்டிக் கொண்டிருந்தார்கள். கம்ருதீன் பழக்கத்தால் தனது இமேஜ் டேமேஜாகி விடுமோ என்று அஞ்சுகிற பாரு, அதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். “ஓகே.. நாம பிரெண்ட்ஸ்தான்.. ஆனா திவாகர்கிட்ட ஏன் என்னைப் பத்திச் சொன்னே?” என்று கேட்டு கம்ருதீன் தொடர்ந்து இம்சை தருகிறார்.

பாருவிடம் மாட்டிக்கொண்ட திவ்யா - ‘இனிமே அட்வைஸ் பண்ணுவீங்க?’
இந்தப் பஞ்சாயத்து குறித்து திவ்யாவிடம் பேசிக்கொண்டிருந்தார் பாரு. ‘வெளியே என்ன மாதிரியாக தெரிகிறது’ என்று போட்டு வாங்குவதுதான் பாருவின் நோக்கம். கண்ணிவெடி மீது கால் வைக்கிறோம் என்கிற ஜாக்கிரதையுணர்ச்சி இல்லாமல் திவ்யாவும் உற்சாகமாக அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார். கூடுதலாக ‘உங்க வீட்ல அம்மா பார்த்தா என்ன வருத்தப்படுவாங்க?’ என்றும் ஒரு வாக்கியம் சொல்லி விட்டார் திவ்யா.
அப்போதைக்கு “ஆங்.. சரிதான்’ என்று பாரு தலையாட்டினாலும் இந்த வாக்கியம் அவரை உறுத்தியிருக்கிறது. எனவே பாரு தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி “இன்ஃபர்மேஷன் கேட்டா.. அதை மட்டும் சொல்லு.. அம்மா என்னா சொல்லுவாங்க.. ஆயா என்ன சொல்லுவாங்கன்றதுல்லாம் உனக்குத் தேவையில்லாதது. அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். என் பர்சனல் விஷயம் யாரும் பேசக்கூடாது” என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திவ்யாவை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டார்.
‘எங்கியோ போற மாரியாத்தா.. என் மேல வந்து ஏறாத்தா’ கதையாக ‘இவதானே வந்து கேட்டா.. அதனாலதான நான் சொன்னேன். இப்ப இப்படி டிவிஸ்ட் பண்றாளே’ என்று ஆரம்ப நாளிலேயே திவ்யாவை புலம்ப வைத்து விட்டார் பாரு. பாருவா கொக்கா?!
“அவ எல்லா இன்ஃபர்மேஷனையும் கேட்டுட்டு போயி அதை அனலைஸ் பண்ணி மறுபடியும் வந்து தாக்கறா..இதுதான் அவ ஸ்ட்ராட்டஜி” என்று திவ்யாவிற்கு ஆறுதல் சொன்னார் சாண்ட்ரா.
ரீல்ஸ் அலப்பறையை நிறுத்தாத திவாகர் - கர்ணன் திரைப்படம் நூறாவது நாள்
“இந்த சிவப்பு சுரிதார் போட்ட திவ்யா அக்காவும் அன்பு கேங்ல சோ்ந்துடுவாங்க.. பார்த்துட்டே இரு” என்று சுபிக்ஷாவிடம் ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தார் வியன்னா. அமித்திற்கு மனவலிமை கிடையாதாம். ஆள்தான் பார்க்க உயரமாக இருக்கிறாராம். இதுவும் வியன்னா அம்மையாரின் யூகம்தான்.
திவாகர் மறுபடியும் ரீல்ஸ் அலப்பறையை ஆரம்பிக்க, அதை கிண்டல் செய்ய முடியாமல் வினோத் மற்றும் கம்ருதீனின் கைகள் கட்டப்பட்டு விட்டதால், பாட்டு பாடி ஆதரவாக இருப்பது போல் இருந்தார்கள். அதுவும் ஒருவகையான கிண்டல் போல்தான் இருந்தது. நடிப்பு அரக்கனின் இம்சையை காணப் பொறுக்காத வினோத் “இதையெல்லாம் பார்க்காம சிவாஜி போய் சேர்ந்துட்டாரு” என்று கமென்ட் அடித்துவிட்டார்.

நிகழ்ச்சியில் ஏதாவது கோக்குமாக்கான மாற்றங்களைச் செய்து கொண்டேயிருப்பது பிக் பாஸின் வழக்கம். எனவே சபையைக் கூட்டி ‘இனிமேல் சூப்பர் டீலக்ஸ் என்றொரு வீடு கிடையாது. அனைவருமே பிக் பாஸ் வீடுதான். யாருக்கும் எவ்வித ஸ்பெஷல் சலுகைகளும் கிடையாது’ என்று அறிவிக்க, பிக் பாஸ் வீடு மக்களுக்கு ஒரே குஷி. “நீங்க யாரும் அந்த பவரை சரியா பயன்படுத்திக்கலை” என்பது பிக் பாஸ் சொன்ன காரணம். “அப்படியே கனிக்கு கொடுத்த நாமினேஷன் ஃப்ரீ பாஸ் பவரையும் பிடுங்கிப் போடுங்கய்யா” என்று பொறாமையின் உச்சத்தில் சொன்னார் பாரு.
“இனிமேலாவது மக்கள் குறை சொல்லாத மாதிரி சிறப்பா விளையாடுங்க” என்று பேராசையுடன் அட்வைஸ் செய்தார் பிக் பாஸ். வீட்டில் பிரிவனை அகற்றப்பட்டு விட்டாலும்கூட ‘சூப்பர் வீட்டு வசதியில் யார் படுப்பது?’ என்பதற்கும் சண்டை வருமே?!
வீட்டு ‘தல’ ஆகி வீட்டாரிடம் மாட்டிக் கொண்ட திவ்யா
“ஏம்ப்பா சண்டை போட்டுக்கறீங்க?’ என்று கண்டிக்கும் பிக் பாஸ் டீம்தான் சண்டை ஏற்படுவதற்கும் மூலகாரணம். அந்த நோக்கில் ஒரு விஷயத்தை ஆரம்பித்தார். “வைல்ட் கார்ட் என்ட்ரியில் வந்தவர்களில் ஒருவர்தான் இந்த வாரம் வீட்டு தலயாம்”.. சண்டை வருவதற்கு காரணம் போதாது?!
இதற்காக நடந்த போட்டியில் வென்று ‘தல’ ஆனது திவ்யா. (பாவம்!). “இனிமேல் வீட்டில் நடக்கும் விஷயங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு’ என்று எல்லாவற்றையும் தூக்கி திவ்யா தலையில் போட்டார் பிக் பாஸ். உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்ட திவ்யா, பாரு என்கிற அணு ஆயுதம் இருப்பதை மறந்துவிட்டார்போல.
சபையைக் கூட்டிய திவ்யா. ‘இதோ பாருங்க.. இதுதான் என் ரூல்ஸ். யாரும் யாரையும் பாடி ஷேமிங் பண்ணக்கூடாது’ என்று அஞ்சாம் கிளாஸ் மிஸ் மாதிரி ஸ்டிரிக்ட்டான குரலில் ஆரம்பித்தார். “பேச்சு.. பேச்சா இருக்கணும். சண்டை கூடாது” என்பது அடுத்த விதி.

அணிகளைப் பிரிக்க ஆரம்பிக்கும்போதே அலப்பறையும் ஆரம்பித்தது. “நீங்களாத்தான் முடிவு எடுக்கணும். யாரையும் கேட்கக்கூடாது” என்று மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க “ஸ்கூல்ல உக்கார்ற மாதிரி வாயை முடி உக்காரச் சொல்லாதீங்க” என்று ஆட்சேபித்தார் வியன்னா.
“என்னை கொஞ்சமாச்சும் பேச விடறீங்களா..” என்று கத்துவதின் மூலம் திவ்யாவும் தன்னிச்சையாக ஜோதியில் ஐக்கியமாக “நீங்கதானே ஹெல்த்தி கான்வர்சேஷன் வெச்சுக்கலாம்ன்னு சொன்னீங்க” என்று குண்டூசியால் குத்தினார் பாரு. “என் பர்சனல் விஷயங்களை யாரும் பேசக்கூடாது” என்று பொதுவாக சொன்னாலும் திவ்யாதான் பாருவின் மெயின் டார்கெட் என்பது நன்றாகத் தெரிந்தது. “நீங்க கேட்டதாலதானே சொன்னோம்” என்று சாண்ட்ராவும் சப்போர்ட்டிற்கு வந்தாலும் பாருவின் அடாவடிக்கு முன்னால் எடுபடவில்லை.
இந்த சீசனின் முதல் ஓப்பன் நாமினேஷன்
நாமினேஷன் பிராசஸ் ஆரம்பித்தது. திவ்யா, கனி, பிரஜின், சாண்ட்ரா, அமித் ஆகியோரை நாமினேட் செய்ய முடியாது. ‘ஒரு ஆள் மேலயா இவ்ளோ ஓட்டு குத்துவீங்க?” என்று கடந்த வாரத்தில் விசே கேள்வி கேட்டிருந்தாலும், பாரு மற்றும் திவாகர் மீதிருந்த கொலைவெறி காரணமாக மக்கள் வளைத்து வளைத்து குத்தினார்கள்.
“கோடிக்கணக்கான மக்கள் வெளியே ரீல்ஸ் பண்றாங்க. அவங்களுக்கு எல்லாம் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சிருக்கு. ஆனா இங்க வந்தும் ரீல்ஸ்தான் பண்றீங்க” என்று திவாகருக்கு காரணம் சொன்னார் பிரஜின்.

இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள், வினோத், பிரவீன், கம்ருதீன், ரம்யா, எஃப்ஜே, சபரி, வியன்னா, கெமி, விக்ரம், பாரு, துஷார் மற்றும் திவாகர். “ஒரே ஆளை டார்கெட் பண்றாங்க” என்று கத்திக் கொண்டிருந்தார் திவாகர்.
மாலை ஆக்டிவிட்டி. பிக் பாஸின் திருவிளையாடல். ‘அவங்களை நல்லா வறுத்தெடுங்க’ என்று வைல்ட் கார்ட் என்ட்ரிகளை உள்ளே அனுப்பிய பிக் பாஸ், இப்போது வீட்டில் உள்ளே இருப்பவர்களுக்கு பழிவாங்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.
“என் பர்சனல் பத்தி யாரும் பேசக்கூடாது” - எரிச்சலான பார்வதி
‘எனக்கு வந்தா ரத்தம், உனக்கு வந்தா தக்காளி சட்னியா?’ என்கிற தலைப்பில் வைல்ட் கார்ட் என்ட்ரிகள் மீது first impression பற்றிச் சொல்லலாமாம்.
“ஒரே ஆள் மீதா குத்துவீங்க.. ன்னு விஜய் சேதுபதி சார் சொன்னாலும், புதுசா வந்தவங்களும் அதையேதான் பண்ணாங்க. அந்த அக்காவும் அதேதான்” என்று சொல்ல “அந்த அக்காவிற்கு பெயர் இல்லையா?” என்று பிக் பாஸ் குறுக்கிட “சாண்டிரியா அக்கா” என்று சொதப்பினார் திவாகர்.

“இங்க ஒரே சத்தம் மட்டும்தான் கேக்குதுன்னு புகார்சொன்ன திவ்யா, அவங்களும் இப்போ அதையேதான் பண்றாங்க” என்று கிடுக்கிப்பிடியாக மடக்கினார் வியன்னா. “கத்தணும்னு எங்களுக்கு வேண்டுதலாங்க.. இந்த வீடு அப்படி மாத்திடுது” என்று காமெடியாக யதார்த்தம் சொன்னார் விக்ரம்.
“எல்லா பஞ்சாயத்துலயும் தலையிடறீங்க. அவங்களை பேச விடுங்கன்னு சொன்னார் அமித். ஆனா அவரே இன்னிக்கு ‘கூல்.. கூல்’ ன்னு பஞ்சாயத்து பண்ணிட்டுத்தான் இருக்காரு” என்றார் சபரி. “திவ்யா bossy attitude-ல இருக்காங்க” என்று ஆரம்பித்த பாரு “என் பர்சனல் மேட்டர்ல தலையிட வேண்டாம்” என்று மறுபடியும் ஆரம்பித்துவிட்டார். “ஊர்ல நாலு பேர் நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்கள்ல. அந்த நாலு பேர் இவங்கதான்” என்று பாருவிற்குள் இருந்த வசனத்திறமையும் வெளியே வந்தது.
திவ்யாவை டார்கெட் செய்த திவாகர்
“சொல்ல மறந்துட்டேன்” என்று எழுந்து வந்த திவாகர், “பிரஜின்.. சாண்ட்ரா.. ஜாடிக்கேத்த மூடியா இருக்காங்க. எல்லாத்தையும் வினயமா எடுக்கறாங்க.. வாட்டர்மெலன் ஸ்டார்ன்றது என்னோட பட்டம். என் மைக் பெல்ட்ல அதைத்தான் பிக் பாஸ் போட்டிருக்கிறாரு. என்னை வெளியே போக சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. திவ்யா ஒண்ணும் பிக் பாஸ் கிடையாது. அவங்களுக்கு தல பதவி ஈஸியா கிடைச்சுது” என்று பொங்கித் தள்ளி விட்டார்.
“இவங்களுக்கு கேம் என்னன்னு புரியவேயில்ல” என்று பிறகு சாண்ட்ராவிடம் அனத்திக் கொண்டிருந்தார் திவ்யா. “பாரு எப்படி டிவிஸ்ட் பண்ணா பாத்தியா” என்று தலையாட்டினார் சாண்ட்ரா.
ஆக.. வைல்ட் கார்ட் என்ட்ரிகளும் பிக் பாஸ் வீட்டின் ஜோதியில் ஐக்கியமாவது பிரகாசமாகத் தெரிகிறது. ‘எல்லாத்தையும் மாத்துவேன்’ என்று சொன்னதெல்லாம் வழக்கம் போல் வெற்று சவடால்தான்.




















