சுவைக்கத் தூண்டும் சாட் : `தவா புலாவ்' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?
BB TAMIL 9 FINALE: டைட்டில் வென்ற திவ்யா; பாருவின் என்டரி - ஃபைனலிஸ்ட்டுகளின் பலமும் பலவீனமும்!
இந்த ஒன்பதாவது சீசனின் டேக்லைன் இப்படியாக இருந்தது. ‘ஒண்ணுமே புரியலையே’... திவ்யாவின் தடாலாடியான வெற்றியும் அதைத்தான் நமக்கு சொல்கிறது. ‘ஒண்ணுமே புரியலையே’!
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்கிற லேபிளில் அக்மார்க் அல்வாவை மறுபடியும் தந்திருக்கிறதா பிக் பாஸ் டீம்?

விளம்பரங்களையும் சேர்த்து, ஏறத்தாழ ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட இந்த இறுதி நாள் நிகழ்ச்சியில் நடந்த முக்கியமான மற்றும் சுவாரசியமான ஹைலைட்ஸ்களை மட்டும் பார்ப்போம்.
ரெட்கார்டு தரப்பட்டிருந்த கம்ருதீனையும் பார்வதியையும் இறுதி நிகழ்ச்சிக்கு அழைத்தால் நன்று, `மன்னிக்கறதுதானே பெரிய மனுஷத்தன்மை' என்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். பெரும்பாலான பார்வையாளர்களின் எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது என்பதை சமூகவலைத்தள உரையாடல்களின் மூலம் அறிய முடிந்தது.
அது சாத்தியமானதில் மகிழ்ச்சி.
அப்படியே நந்தினியையும் அழைத்திருக்கலாம். சில நாட்கள்தான் என்றாலும் அவரும் இந்த சீசனின் போட்டியாளர் தானே.
தாம் செய்த தவறுக்கு மன்னிப்பு அளிக்கப்படும் போது அது சார்ந்த குற்றவுணர்ச்சியும் மனமாற்றமும் ஒருவருக்கு இருக்க வேண்டும். ‘பத்தியா.. பாரு இல்லாம ஃபினாலே நிகழ்ச்சிக்கு டிஆர்பி இருக்காது’ என்று அவரது ரசிகர்கள் விடாமல் முட்டுக் கொடுப்பது முறையானதல்ல.
ஆயிரம் சாென்னாலும் பாருவும் கம்முவும் செய்தது குற்றம். இதை அவர்கள் மேடையில் பிரதிபலித்தது நன்று. சான்ட்ராவிடம் பாரு மன்னிப்பு கோரியதும் அவர் வந்து கட்டியணைத்துக் கொண்டதும் - ஒருவேளை பாவனையாக இருந்தாலும் - சிறந்த காட்சி.
வியானா அழுத்தம் திருத்தமாக சொன்னபடி, இந்த சீசனின் நகர்வுகளுக்கு பாருவின் பங்களிப்பு ஒரு முக்கியமான காரணமாக இருந்ததை மறுக்க முடியாது. ஆனால் அது நோ்மறையாக அமைந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். மாறாக நெகட்டிவிட்டி நிறைந்திருந்ததால் பாருவின் செயல்களை ரசிக்க முடியாது. “அவங்க கிட்ட நிறைய அறிவு இருக்கு. அதை சரியா பயன்படுத்தினா உயரத்துக்கு போவாங்க” என்று விஜய்சேதுபதி சொல்வதும் இதைத்தான்.
பாருவையும் கம்முவையும் இறுதி நிகழ்ச்சிக்கு அழைத்ததின் மூலம் அவர்கள் மீதுள்ள களங்கமும் கறையும் மட்டுப்பட்டிருக்கிறது. இது அவர்களின் வருங்கால பயணத்திற்கு துணை நிற்கும்.
‘பிக் பாஸ் உங்களுக்கு தந்த அனுபவம் என்ன?’ என்று முன்னாள் போட்டியாளர்களிடம் கேட்கப்பட்ட போது கனி மட்டுமே ஒரு மாதிரி சிறந்த பதிலைச் சொன்னார். மற்றவர்களிடம் போதுமான பதில்கள் இல்லை. பிரவீன்காந்தியும் திவாகரும் எதையோ சொல்லி சிரித்தார்கள்.

இந்த சீசனின் அடிப்படை பிழைகளுள் ஒன்று, போட்டியாளர்களின் தேர்வு. இன்ஸ்டாவில் பிரபலமாக இருக்கிறார்கள் என்கிற காரணத்திற்காகவே அவர்களை போட்டியாளர்களாக அழைத்து வந்தது, இந்த சீசனுக்கு பெரிய பின்னடைவை தந்திருக்கிறது. எந்தவொரு விசாரணையிலும் யாராலும் கோர்வையாகவோ தெளிவாகவோ நகைச்சுவையாகவோ பேச முடியவில்லை. விசே என்கிற கண்டிப்பான வாத்தியார் முன்னால் வாய் பொத்தி அமர்ந்திருக்கும் மாணவர்கள் போலவே தென்பட்டார்கள்.
முத்துக்குமரன், மஞ்சரி, விக்ரமன், அஸீம் போன்று தங்களின் தரப்பை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தும் போட்டியாளர்கள் இந்த சீசனில் இல்லாமல் போனது சோர்வை ஏற்படுத்தியது. “வேற ஏதாவது கருத்து இருக்கா.. ஏதாவது சொல்லணுமா?” என்று விசே வாய்ப்பு தந்தாலும் கூட இவர்களால் சரியாகப் பேச முடியவில்லை.
“வீட்டுக்குள்ள இருக்கற நாலு பேரையும் பார்க்கலாமா?” என்று கேட்க விசே, அதற்காக தந்த குறிப்பிலேயே ‘யார் வெற்றியாளர்?’ என்பது மறைமுகமாக அம்பலமானது. ‘வில்லனா ஆனாலும் பரவாயில்லைன்னு ஒருத்தர், மனுஷனா இருக்கறதுதான் முக்கியம்ன்னு ஒருத்தர், பாதில வந்தாலும் அடிச்சு ஆடிய ஒருத்தர், பாதில கேம் ஆரம்பிச்ச ஒருத்தர்’ என்று முறையே விக்ரம், சபரி, திவ்யா, அரோரா ஆகியோரைப் பற்றி குறிப்பிட்டார் விசே.
‘துதியைக் கவனித்தீரா?’ என்று இம்சை அரசனில் வரும் வசனத்தைப் போல, ‘பாதில வந்தாலும் அடிச்சு ஆடிய’ போட்டியாளருக்கு கடைசியில் கோப்பை அளிக்கப்பட்டு விட்டது.

“பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒருத்தரோட உண்மையான காரெக்டர் அம்பலமாகி விடும். நீண்ட நாட்களுக்கு நடிக்க முடியாது. அது தெரிஞ்சும் ஆட வந்த போட்டியாளர்கள் அனைவரையும் பாராட்டறேன்” என்று விசே பாராட்டியது சிறப்பு. போட்டியாளர்களை வெளியில் நின்று குற்றம் சொல்கிற நாம் கூட, ஒருவேளை உள்ளே சென்றால் அவற்றை விடவும் அதிகமாக அம்பலப்படக்கூடும்.
போட்டியாளர்களை மகிழ்விக்க நடந்த இசைக்கச்சோி இந்த நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க ஹைலைட்களில் ஒன்று. ராஜாவும் ரஹ்மானும் தமிழ் ரசனையில் எத்தனை ஆழமாக ஊடுருவியுள்ளார்கள் என்பதற்கான சாட்சியம். ‘சங்கத்தில் பாடாத கவிதை’ என்று முதலில் பாடப்பட்ட பாடலே அத்தனை அற்புதம். (இதன் மலையாள வொ்ஷன் இதை விடவும் அற்புதமாக இருக்கும்!) erotic வார்த்தைகளை ஹஸ்கியான குரலில் சரண்ராஜா பாட ‘என்னடா நடக்குது இங்க?’ என்கிற மாதிரி போட்டியாளர்கள் விழித்தது சுவாரசியமான காட்சி.
வீட்டிற்குள் அரோ அடிக்கடி பாடும் ‘எனக்கு புடிச்சவனே’ என்கிற ஒரிஜினல் பாடலும் பாடப்பட்டது. கூட்டத்தில் நின்று பாடும் போது தடுமாறிய அரோ, தனியாக பாடிய போது அசத்தினார். Who is the hero என்கிற ஆண்ட்ரியாவின் ரகளையான பாடலும் சிறந்த முறையில் பாடப்பட்டது. கோவிந்த் வசந்தாவின் ‘போறேன்…’ நெகிழ வைத்தது.

பிக் பாஸின் மந்திரக்குரலும் போட்டியாளர்களின் நெகிழ்ச்சியான வாக்குமூலமும்
இறுதிப் போட்டியாளர்கள் அனைவரும் ‘என்டர் தி டிராகன்’ கிளைமாக்ஸ் சண்டை மாதிரி, கண்ணாடிகள் சூழ்ந்திருக்கிற அறையில் நிற்கப்பட்டு மனசோடு பேச வைக்கப்பட்டார்கள். எந்த இடத்தில் தன்னுடன் பேசுகிறோம், எந்த இடத்தில் பிக் பாஸ் பேசுகிறார் என்பது தெரியாமல் குழம்பியது சுவாரசியம். ‘அது அழுகையோ, கோபமோ.. உங்களை அப்படியே ஏத்துக்கங்க.. உங்களை நீங்க முதல்ல லவ் பண்ணுங்க” என்பது பிக் பாஸ் சொன்னதின் சாரமாக இருந்தது.
பிக் பாஸ் குரலில் வழக்கம் போல் சிறந்த மாடுலேஷனும் ஆன்மாவைத் தொடும் ஈர்ப்பும் இருந்தது. ஒவ்வொருவரைப் பற்றியும் சிறந்த ரிப்போர்ட் தந்து நெகிழ வைத்தார். (நாம் பார்க்கத் தவறிய காட்சிகளையும் பிக் பாஸ் டீம் முழுமையாகப் பார்ப்பதால் ஒவ்வொருவரையும் சரியான அனலைஸ் செய்திருப்பார்கள்).
வீட்டுக்குள் சென்ற விசே, நீங்கள் வெளிப்படுத்திய மூன்று உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று போட்டியாளர்களிடம் கேட்டார். ‘கார் டாஸ்க்கில் உச்சபட்ச கோபம் வெளிப்பட்டதை பகிர்ந்து கொண்டார் திவ்யா. தன்னுள் ஒளிந்திருந்த வீரம் TTF டாஸ்க்கில் வெளிப்பட்டதை சொன்னார் அரோ. பாருவை தள்ளி விட்ட தருணத்திற்காக வருந்தினார் சபரி. House Tour-ல் ‘பிக் பாஸ் பேச்சை கேட்காம அவரை சுத்த விட்டீங்க’ என்று விசே கிண்டலடிக்க, அதை வழிமொழிந்தார் பிக் பாஸ்.
மேடையில் நடந்த கலை நிகழ்ச்சிகள் தனியாக பதிவாக்கப்பட்டு, பிறகு இணைக்கப்பட்டிருந்தது நன்றாக தெரிந்தது. இந்த சீசனை ரகளையாக கிண்டலடித்து வினோத் பாடிய பாடல் வரிகள் அருமை. ‘எல்லாமே பைத்தியம்’ மாதிரியான வரிகளை மட்டும் அடக்கி வாசித்திருக்கலாம். தொழில்நுட்ப மாயமாலங்களை பயன்படுத்தி திவாகர் டான்ஸ் ஆடுவது போல காட்டி ஆச்சரியப்படுத்தினார்கள்.

ஃபினாலே நிகழ்ச்சியில் முதல் எவிக்ஷன். கிஃப்ட் பாக்ஸில் வெளியே செல்பவரின் பெயர் ஒளிந்திருக்கும். சில பெட்டிகளில் இருந்த லாலிபப்களை ஆசையாக எடுத்துக் கொண்டார் சபரி. பாவம் அவருக்கு கடைசியில் அதுதான் மிஞ்சியது. ‘சபரி குழந்தை மாதிரி’ என்று விசே இறுதியில் சொன்னதும் இதைத்தான் போல.
பரிசுப் பெட்டியில் அரோவின் பெயர் இருந்தது. ‘அய்யோ’ என்று சிணுங்கிய அரோ, பிறகு ‘சரி.. எப்பவோ போயிருக்க வேண்டியது’ என்று ஏற்றுக் கொண்டார். ‘என் படிப்பைத் தொடரணும்.’ என்று மேடையில் அவர் அறிவித்தது சிறப்பு.
மீதமிருந்த மூன்று போட்டியாளர்களிடம் கோப்பையை அறிமுகப்படுத்திய பிக் பாஸ், “யார் கப் கிட்ட சிறப்பா பேசறாங்களோ, அவங்களுக்குத்தான் கிடைக்கும்’ என்று ஆசை காட்டினார். ‘இதுவரைக்கும் நான் அவார்டே வாங்கியதில்லை’ என்கிற அதே பல்லவியை பாடினார் திவ்யா. (மேடையிலும் இதே பாட்டுதான்!) ‘நீ கிடைக்கணும்ன்னு நான் ஆசைப்படல. அதுக்காக நான் வரலை. ஆனா அதெல்லாம் நடந்துடுமோன்னு ஆசையா இருக்கு’ என்று வழக்கம் போல் தலையைச் சுற்ற வைத்தார் விக்ரம்.

“வாரா வாரம் நான் உங்களை கேள்வி கேட்டேன். நீங்க ஏதாவது கேக்க விரும்பறீங்களா?” என்று முன்னாள் போட்டியாளர்களிடம் கேட்டார் விசே. “நீங்க பாரபட்சம் இல்லாமத்தான் நடக்கறீங்க. ஆனாலும் எதிர்மறையான விமர்சனங்கள் வருதே” என்று திவாகர் கேட்க, “அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும். என் வேலையை நான் பார்க்கறேன்” என்று விசே சொன்னது சரியானதுதான்.
நாம் செய்யும் ஒரு சாதாரண வேலையிலேயே குற்றம் சொல்ல நான்கு பேர் இருப்பார்கள். பிக் பாஸ் போன்ற புகழ் பெற்ற நிகழ்ச்சியின் முடிவுகளில் பல்வேறு விமர்சனங்கள் எழுவதில் ஆச்சரியமில்லை. பெரும்பாலான சோஷியல் மீடியாவுமே நெகட்டிவிட்டியைத்தான் தீனியாக வைக்கின்றன. அதுதான் நல்ல வியாபாரமும் ஆகிறது.
இந்த நோக்கில் விசே சொன்னது சரிதான் என்றாலும், தன் மீதும் ஷோவின் மீதும் வைக்கப்படுகின்ற நியாயமான விமர்சனங்களையும் உண்மை இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக அலட்சியப்படுத்தக்கூடாது.
பாரு பத்தி ஏதாவது சொல்லுங்க என்று கம்மு கேட்டதற்கு ‘அறிவை சரியா முதலீடு பண்ணணும்’ என்று விசே சொன்னது சிறப்பு. “இந்த நிகழ்ச்சியை எந்தவகையிலும் பர்சனலா எடுத்துச் செல்ல மாட்டேன், அப்படிப் பார்த்தால் அது ஷோவை பாதிக்கும் என்று விசே சொல்வதை நம்புவோம்.

விவாத மேடையில் சிறப்பாகப் பேசிய முத்துவும் மஞ்சரியும்
“இந்த சீசனின் மீதான விமர்சனங்கள் பற்றி ஒரு விவாத மேடை நடைபெறவிருக்கிறது’ என்று விசே அறிவித்தது நன்று. இதைப் பற்றிய நிபுணர்கள் வருவார்கள் என்று பார்த்தால் மா.கா.ப நடுவராக இருந்து ஜனரஞ்சகமாக போனது. ராஜூ நகைச்சுவையாக பேசினார். தீபக் சுமார். முத்துக்குமரனும் மஞ்சரியும் எதிரெதிர் தலைப்பில் சுவாரசியமாக பேசினார்கள்.
பிக் பாஸ் போட்டியில் ஒருவர் நல்லவராக இருக்க வேண்டுமா, அல்லது நல்ல ஆட்டக்காரராக இருக்க வேண்டுமா என்கிற தலைப்பு. இன்னமும் ஆழமாக பேசப்பட்டிருக்க வேண்டும் என்றாலும் முத்துவும் மஞ்சரியும் பேசியதில் இருந்தே நல்ல பாயிண்ட்கள் கிடைத்தன.
(பட்டிமன்ற பேச்சாளர்களிடம் என்ன பிரச்சினை என்றால், தான் சார்ந்திருக்கும் அணிக்காக, அந்தக் கருத்துக்களின் மீது நம்பிக்கையில்லா விட்டாலும் மல்லுக்கட்டுவார்கள். இருக்கையை மாற்றி அமர வைத்தால் பிளேட்டை அப்படியே திருப்பிப் போடுவார்கள்).
ஒருவர் சிறந்த பிக் பாஸ் ஆட்டக்காரராக திகழ்வதற்கு நல்லவராக இருந்தால் மட்டுமே போதாது. ‘நல்லவர்’ என்கிற பெயரில் ஒருவர் சும்மா அமர்ந்திருந்தால் அதில் என்ன சுவாரசியம்? நல்லவராக இருப்பதோடு வல்லவராக இருப்பதும் அவசியம்.
நெருக்கடியான சமயங்களில் சமநிலை இழக்காமல் இருத்தல், சகிப்புத்தன்மையோடு பிரச்னைகளை எதிர்கொள்ளுதல், டாஸ்க்குகளில் சிறப்பாக பங்கேற்றல், அவற்றின் மூளையாக இருந்து திட்டமிடல், பார்வையாளர்களின் சக போட்டியாளர்களின் மதிப்பை சம்பாதித்தல் போன்றவை அவசியம். (கடந்த சீசனில் முத்துக்குமரனிடம் இந்தத் திறமைகள் இருந்தன).

போட்டியாளர்கள் மூவரையும் வீட்டிலிருந்து வழியனுப்பி வைத்த பிக் பாஸ், “இந்த வெளிச்சத்தை சரியான முறையில் முதலீடு செய்யுங்கள்’ என்று அறிவுரை தந்தது நன்று.
“பாரு வரலை.. ஏதோ பிசியா இருக்காங்க’ என்று முதலில் அறிவித்தாலும் ‘ஒரு சர்ப்ரஸ்’ என்று விசே அறிவிக்க பாரு என்ட்ரி. முகம் பூசினாற் போல் இருந்த பாரு, “இந்த வீட்டில் நிறைய எமோஷன்ஸ் இருந்தது. கதவுக்கு பக்கத்துல நின்னது யாராவது வருவாங்கன்னு இல்ல. வீட்டை கொஞ்ச நேரம் பார்த்தேன்’ என்று ‘கெத்து’ விடாமல் பேசினார். சான்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டது சிறப்பு.
திவ்யாவின் அப்பா, மூச்சு விடாமல் பேசினார். (குடும்ப பழக்கம் போல!). ‘என் பொண்ணு அமைதியானவ’ என்று அவர் சொல்ல “ஓ..இதுதான் அமைதியா?’ என்று கிண்டலடித்தார் விசே.
விக்ரமின் எவிக்ஷன் ஓவியத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. விக்ரமின் முகத்தில் சிறிது ஏமாற்றம் தெரிந்தாலும் ஏற்றுக் கொண்டு வெளியேறினார். சபரியும் திவ்யாவும் எஞ்சினார்கள். சபரிக்கு கிடைக்கக்கூடும் என்று கூட பலர் நம்பியிருக்கலாம்.
சில பல பில்டப்பிற்குப் பிறகு டைட்டில் வின்னர் திவ்யா என்று உரத்த குரலில் அறிவித்தார் விசே. திவ்யாவினால் அதை நம்ப முடியவில்லை. ஆச்சரியத்தில் வாய் பொத்திக் கொண்டார். ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு உற்சாகமாக விசிலடித்தார் சபரி.
அர்ச்சனாவைத் தொடர்ந்து, வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்தாலும் கோப்பையை வெல்ல முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் திவ்யா.

இறுதிப் போட்டியாளர்களின் பலமும் பலவீனமும்!
இந்த வெற்றிக்கு திவ்யா தகுதியானவரா, PR டீமிற்கு கிடைத்த வெற்றியா என்று பல விமர்சனங்கள் சொல்லப்பட்டாலும் இதுதான் முடிவு. இது மக்கள் அளித்த வாக்குகளின் படி நிகழ்ந்ததா அல்லது பிக் பாஸ் ஸ்ட்ராட்டஜியா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
என்னுடைய தனிப்பட்ட நோக்கில், விக்ரம் அல்லது சபரிக்கு கோப்பை அளிக்கப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்பேன்.
ரொமான்ஸிலும் சண்டைகளிலும் வீழ்ந்திருந்த அரோ, ஒரு கட்டத்தில்தான் விழித்துக் கொண்டார். தான் வெல்வோம் என்கிற நம்பிக்கை அவருக்கே இல்லை.
முதல் வாரத்தில் பிரகாசித்த சபரி, பின்பு செட் பிராப்பர்ட்டி போல ஆகிப் போனார். பாருவுடன் மோதி குறும்படம் மூலம் அச்சப்பட்டு அப்படியே பின்தங்கிப் போனார். ‘கார் டாஸ்க் தியாகத்தின்’ மூலம் மீண்டெழுந்தாலும் கோப்பை கிடைக்கவில்லை. ஆனால் சபரியிடம் ஒரு consistency இருந்தது. யாரிடமும் அநாவசியமான சண்டைக்குச் செல்லவில்லை. ஏற்படுகிற சண்டைகளையும் தீர்ப்பவராக இருந்தார். (ஆனால் நல்லதுக்குத்தான் காலமே இல்லையே!)
விக்ரம் இந்த சீசனின் சிறந்த ஆட்டக்காரர். பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவற்றோடு பல டாஸ்க்குகளின் மூளையாக இருந்து செயல்பட்டவர். சான்ட்ராவும் திவ்யாவும் இவருக்கு தந்த அட்ராசிட்டிகளை பொறுத்துக் கொண்டவர்.
கனி, சுபிக்ஷா என்று ஒரு வட்டத்தில் சிக்கியது இவருக்கு பின்னடைவைத் தந்திருக்கலாம். திவ்யாவுடன் சண்டை, வியானாவின் அவதூறு போன்றவற்றால் உடைந்து போனார். “எனக்கு கோப்பை மீது ஆசையே கிடையாது” என்று இவரே அடிக்கடி சொன்னதும் பலவீனம்.
வைல்ட் கார்ட் என்ட்ரியில் வந்த திவ்யா, ஆரம்பத்தில் சான்ட்ராவோடு இணைந்து பல அட்ராசிட்டிகளைச் செய்து வெறுப்பை சம்பாதித்தார். பிறகு அங்கிருந்து விலகியது இவருக்கு தனியான கவனத்தைத் தந்தது. பிக் பாஸ் வீட்டில் யார் அவமதிக்கப்பட்டாலும், குறிப்பாக பெண்களுக்கு அவமரியாதை ஏற்படும் போது துணிச்சலாக குரல் தந்தது சிறப்பு.
ஆனால் திவ்யாவின் பலவீனம் என்னவென்றால் எளிதில் கோபப்படுவது, எதிர் தரப்பை பேச அனுமதிக்காமல் இருப்பது, தன் தரப்பையே மூச்சு விடாமல் தொடர்ந்து முன் வைப்பது, “வாங்க பேசித் தீர்க்கலாம்’ என்ற விக்ரமை மூர்க்கத்தனமாக மறுத்தது போன்றவை.
மற்றவர்களோடு ஒப்பிடும் போது சகிப்புத்தன்மை குறைவாக இருந்த திவ்யா, வெற்றியாளராக ஆனதின் சூட்சுமம் என்னவென்று தெரியவில்லை. மற்றவர்களின் பலவீனமே இவரது பலமாக மாறியதோ என்னமோ.

பார்வையாளர்கள் பெறப் போகிற வெற்றி என்ன?
போட்டியாளர்களின் பலம், பலவீனம் ஒரு பக்கம் இருக்கட்டும். பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டியதைப் பற்றி பல முறை எழுதியிருக்கிறேன். சுயபரிசீலனைதான் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படை பாடம். வம்பு பேசி மகிழ்வதல்ல.
வீட்டிற்குள் போட்டியாளர்கள் இருந்த நேரத்தைப் பற்றி சொல்லும் போது மணி, நிமிடம், நொடி என்று கால்குலேட்டரில் கணக்குப் போட்டு சொன்னார் பிக் பாஸ். அதையே பார்வையாளர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியைப் பார்க்க செலவழித்த நேரத்தினால் நமக்கு கிடைத்த பலன் என்ன?
போட்டியாளர்களிடம் வெளிப்பட்ட குணக்கேடுகள் நம்மிடமும் நிச்சயம் வெளிப்பட்டிருக்கும். நல்ல விஷயங்கள் நம்மை பாதித்திருக்கும். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வாழ்க்கையில் பின்பற்றுவது முக்கியம். சற்று யோசித்துப் பாருங்கள். கோபம், வன்மம், பழிவாங்கல் என்கிற மிருகங்களிடம் கார் டாஸ்க்கில் தங்களை ஒப்படைக்காவிடில் பாருவும் கம்முவும் அடுத்தடுத்த படிகளில் முன்னேறி இருக்கக்கூடும். ஒரு நொடி கோபம் கூட ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடக்கூடியது.
‘விமர்சனம் சொல்பவர்கள் அவர்களின் வேலையைப் பார்க்கட்டும். நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ என்றார் விசே. இந்தக் கட்டுரைத் தொகுதியை எழுதும் என்னுடைய நிலைப்பாடும் அதுவேதான்.

பிக் பாஸ் போன்று பரவலாக கவனிக்கப்படுகிற, மனிதர்களின் உணர்ச்சிகளை முதலீடாக வைத்து ஆடப்படும் சூதாட்டமான பிக் பாஸ் போன்ற சென்சிட்டிவ்வான நிகழ்ச்சியில் பல்வேறு அபிப்பராயங்கள் நிச்சயம் வெளிப்படும். தனக்குப் பிடித்த போட்டியாளருக்கு ஆதரவு தருவதற்காக கண்மூடித்தனமான ரசிகர்கள் உருவாகியே தீர்வார்கள்.
வழக்கம் போல் இந்தக் கட்டுரைத் தொடரை எவ்வித மனச்சாய்வும் எந்தப் போட்டியாளருக்கும் சார்புநிலை எடுக்காமல் மனச்சாட்சிக்கு உட்பட்டு நேர்மையாக எழுதியுள்ளேன். என்றாலும் எதிர்க்கருத்துக்கள் வருவதை தடுக்க முடியாது. அதுதான் ஜனநாயகம்.
முதல் சீசனில் இருந்து இந்த சீசன் வரைக்கும், இந்த ஷோ பற்றி எழுதுவற்கு தொடர் வாய்ப்பும் எவ்வித தலையீடும் அற்ற பரிபூர்ண சுதந்திரமும் அளித்துக் கொண்டிருக்கும் விகடன்.காமிற்கும் சார்ந்துள்ள நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
அடுத்த சீசனில் சந்திப்போம் நண்பர்களே.!





















