`10 ரூபாய்க்கு பசி தீரும் அளவுக்கு சாப்பாடு!' - நெகிழ வைக்கும் சேலம் தம்பதியின் ...
Book Fair: "சாதி, நிலம், பொருளாதாரம் போன்றவற்றையும் பேசுவதுதான் தலித் பெண்ணியம்"- எழுத்தாளர் சிவகாமி
வாசகர்களின் அமோக வரவேற்பால் களைகட்டியுள்ள 49 ஆவது சென்னை புத்தகக் காட்சியில் புத்தகங்களின் விற்பனையும், எழுத்தாளர்களின் அறிவுச் செறிவு மிக்க பேச்சுக்களும், வாசகர்களின் புத்தக நுகர்வும் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதே நேரத்தில் பல எழுத்தாளர்களும் புத்தக அரங்குகளுக்கு வருகை தந்து புதிய புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் எழுத்தாளருமான சிவகாமியைச் சந்தித்து உரையாடினோம்.
''பெண்ணியம் என்பது பெண்கள் எப்படி காலம் காலமாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதோடு, அவர்கள் அதிலிருந்து மீளப் பயன்படும் சுயமரியாதையையும் பேசுவதுதான் பெண்ணியம். ஆணாதிக்கத்தை மையப்படுத்தித்தான் உலகம் இயங்குகிறது.

ஆணாதிக்கம் மற்றும் சாதிகளின் இருப்பே அகமண முறையில்தான் இருக்கிறது. இதற்காகத்தான் பெண்களை சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள் அல்லது வெளியுலகை அவர்களுக்குக் காண்பிக்காமல் வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கிறார்கள்.
சாதாரண பெண்ணியம் பேசுபவர்கள் ஆண்களின் அடக்குமுறையைப் பற்றித்தான் பேசுகிறார்களே தவிர, சாதிய ஒடுக்குமுறையால் பெண்கள் குறிப்பாக தலித் பெண்கள் ஒடுக்கப்படுவதை அவர்கள் பேசுவது இல்லை.
பெண்களின் ஒடுக்குமுறையே சாதியில்தான் அடங்கி இருக்கிறது. இதைப் பற்றி பேசுவதுதான் தலித் பெண்ணியம். தலித் பெண்ணியம் ஆணாதிக்கத்தை மட்டும் மையம் கொள்ளாமல், பெண்கள் பொருளாதாரத்தை கையில் எடுப்பது பற்றியும், மற்றொன்று நிலம், சொத்து ஆகியவற்றிலிருந்து பெண்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள் என்பது பற்றியும் பேசுபொருளாக்குகிறது.
அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கான தனி பட்ஜெட் பற்றிப் பேசுகிறது, சூழலியல் பற்றிப் பேசுகிறது, இயற்கை பேரிடர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வது பற்றிப் பேசுகிறது. இந்த உலகில் ஆண்கள் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கிறார்களோ அந்தப் பிரச்னைகள் யாவையும் பெண்களுக்கும் எதிர்கொள்கிறார்கள்.

ஆனால், அதைப் பற்றி பெண்கள் பேசும்போது, அது ஆண்கள் பேசட்டும் நாம் ஆணாதிக்கத்தை மட்டும் பேசுவோம் என்பது போன்று இருந்தது. ஆனால் தற்போது தலித் பெண்ணியம் வந்த பிறகு நிலம், கல்வி அவர்களுக்கான சலுகைகளைப் பற்றிப் பேசுகிறது.
ஒரு சாதி இந்து பெண்ணுக்குக் கிடைக்கும் சொத்துரிமை, நிலமற்ற தலித்களுக்கும், தலித் பெண்களுக்கும் கிடைப்பது அரிதான ஒன்றே.
பெண்ணிய எழுத்தாளர்களைப் பொருத்தவரை, கூட்டுக் குடும்பத்தில் எவ்வாறு பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள், சிறை வைக்கப்படுகிறார்கள், பெண்கள் சுதந்திரம் ஆடைகளில் ஆண்கள் எப்படித் தலையிடுகிறார்கள், பகடிவதை (ஈவ்டீசிங்) உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது பற்றிதான் எழுதுகிறார்கள்.
அவர்கள் சாதியைப் பற்றி எழுதுவது அரிதான ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக இந்தச் சமூகத்தில் அனைத்து சாதிய ஆதிக்கமும் கீழ்மட்டத்தில் இருக்கக்கூடிய தலித்களின் மீதுதான் விழுகின்றன. அதிலும் தலித் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. தலித் பெண்ணியம்தான் அவர்கள் பேசாததையும் பேசுகிறது.





















