சன்னியாசி வாழ்க்கையைக் கைவிட்ட நடிகை மம்தா குல்கர்னி; டிவி-க்கு திரும்பியவருக்கு...
Dhurandhar The Revenge Review: ஆக்ஷன் த்ரில்லர் போர்வையில் 'மோடி' பிரசார சினிமா; திரையனுபவம் எப்படி?
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள லியாரி பகுதியிலிருந்து பாகிஸ்தானின் மொத்த அதிகார மையத்தையும் ஆட்டிப்படைக்கும் கேங்ஸ்டர் கும்பலுக்குள் ஊடுருவி, அதில் ஒவ்வொரு படிநிலையாக உயரும் இந்திய உளவாளியின் கதையைச் சொன்னது 'துரந்தர்' முதல் பாகம்.
லியாரியின் சிம்மாசனம் கிடைத்த பிறகு, இந்தியாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களுக்கும் அழிவுகளுக்கும் எப்படி அவர் பழிவாங்குகிறார் என்பதைச் சொல்கிறது அதன் அடுத்த பாகமான இந்த 'துரந்தர்: தி ரிவெஞ்ச்'.
முதல் பாகத்தை விட ரத்தம், வன்முறை, பிரசார நெடி என அனைத்துமே இப்போது இரட்டிப்பாகி உள்ளன. படத்தின் நீளமும் முந்தைய பாகத்தை விட 20 நிமிடங்கள் அதிகம்; கிட்டத்தட்ட 4 மணி நேரம். இந்த நான்கு மணிநேரமும் பார்வையாளனைக் கட்டிப்போடுகிறதா இந்த ஆக்க்ஷன் திரில்லர் சினிமா?
ஹம்சா அலி மசாரியாக லியாரியை ஊடுருவிய ஜஸ்கிரத் சிங் ஒரு தூக்குத் தண்டனை கைதி என்றும், தீவிரவாதத்தை ஒழிக்க இந்திய அரசு வகுத்திருக்கும் ரகசிய 'துரந்தர்' திட்டம் குறித்தும் கடந்த பாகத்தின் இறுதியில் சொல்லப்பட்டிருந்தது.
அவர் எப்படி தூக்குத் தண்டனைக்கு ஆளான கைதியானார், எப்படி இந்த மிஷனுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற பின்கதையில் தொடங்குகிறது இந்தப் படம். சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும் அந்த அத்தியாயத்திற்குப் பிறகு மீண்டும் லியாரி உலகத்தில் கதை தொடர்கிறது.
பாகிஸ்தான் அரசியல், லியாரி கேங் மோதல், பலூசிஸ்தான் கிளர்ச்சி, தீவிரவாதிகளை வளர்த்தெடுக்கும் ISI அதிகாரி எனக் கடந்த பாகத்தில் ஏற்கனவே நிறுவப்பட்ட உலகில் இப்போது ஹம்சா அதிகார மையத்தை நெருங்கிவிட்டதால், முதல் பாகத்தில் இருந்த சவால்கள் அவருக்கு இல்லை.
அதனால் வேகமாக அடுத்தடுத்த நிகழ்வுகளாக படம் நகர்கிறது. எதிர்பாராத அந்த இன்டர்வல் ட்விஸ்ட் நம்மை மீண்டும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. குறித்து வைத்த ஒவ்வொருவரையும் தேடி பழிவாங்கும் படலமாக இரண்டாம் பாதி தொடர்கிறது.
ஜஸ்கிரத் சிங்காக முற்றிலும் வேறொரு மனிதரை திரைக்குக் கொண்டுவருகிறார். ஹம்சாவாக மாற ஜஸ்கிரத் எவ்வளவு விஷயங்களைக் கடந்து வந்திருக்கிறார் என்பதை உடல்மொழியிலேயே கடத்துகிறார். குறிப்பாக, இன்டர்வலில் சில நிமிடங்களுக்கு மட்டும் ஜஸ்கிரத்தாக அவர் மாறும் காட்சி அவரது திறமைக்கான சிறந்த எடுத்துக்காட்டு.
கடந்த பாகத்தில் சில காட்சிகளில் மட்டும் தோன்றிய உளவுத்துறை தலைவராக வரும் அஜய் சன்யால் கதாபாத்திரம் இந்தப் படத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. அதில் சிறப்பாகப் பொருந்திப்போகிறார் மாதவன். நாயகி சாரா அர்ஜுனுக்கு இந்தப் பாகத்தில் இரண்டு காட்சிகள் தவிர்த்து பெரிய வேலை இல்லை.
ISI ஏஜென்ட் மேஜர் இக்பாலாக அர்ஜுன் ராம்பால் வில்லனுக்கான போதிய மிரட்சியைத் தர தவறுகிறார். அரசியல்வாதி ஜமீல் ஜமாலியாக வரும் ராகேஷ் பேடி மிகவும் சீரியஸான படத்தில் காமெடிக்குக் கொஞ்சம் இடமளிக்கிறார். எஸ்.பி. சவுத்திரி அஸ்லாம் கதாபாத்திரத்தில் மிடுக்கான நடிப்பால் கவர்கிறார் சஞ்சய் தத்.
காட்சிகள் படமாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள், அதற்காகப் போடப்பட்ட செட்கள், அது படமாக்கப்பட்ட விதம் எனத் தொழில்நுட்ப ரீதியாகப் பல விஷயங்களில் புதிய மைல்கல்லைத் தொட்டிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் விகாஷ் நவுலகா மற்றும் கலை இயக்குநர் சைனி எஸ். ஜோஹ்ரா.
காட்சிகளாகக் கவர்ந்தாலும் கோர்வையாக 4 மணிநேரப் படத்தை வழங்குவதில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறது சிவ்குமார் வி. பானிக்கரின் எடிட்டிங். கடந்த பாகத்தின் முக்கிய பலமாக இருந்தது இசைதான். கவ்வாலி இசையில் வந்த பிரபல வின்டேஜ் பாடல்களை இசையமைப்பாளர் சாஸ்வத் சச்தேவ் பயன்படுத்திய விதம் பலரையும் கவர்ந்தது.
பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டானது. கடந்த பாகத்தின் அந்த மேஜிக் இந்தப் படத்தில் மிஸ்ஸிங். ஆடியோ லேபிள் மாறியதால் முந்தைய பாகத்தின் இசையை எதுவுமே பயன்படுத்தமால் இருந்ததும் ஒரு காரணம். ஆக்க்ஷன் காட்சிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், மிகவும் கோரமான அதீத வன்முறை ஒரு கட்டத்திற்கு மேல் திகட்டிவிடுகிறது.

இதனாலேயே, முதல் பாகத்தில் சுவாரஸ்யம் கூட்டிய கேங்ஸ்டர் விஷயங்கள் இல்லாமல் ஆக்ஷன் காட்சிகளின் தொகுப்பாக அமைகிறது இந்தப் பாகம்.
படத்தின் வேகமும் முன்னும் பின்னுமாகவே இருக்கிறது. பெரும் நேரம் எடுத்து ஜஸ்கிரத் சிங்கின் பின்கதை சொல்லப்பட, அதன்பின் 'கிங் ஆஃப் லியாரி'யாக ஹம்சா மாறும் காட்சிகள் எந்த அழுத்தமும் இல்லாமல் பாஸ்ட் பார்வேடில் நகர்கிறது. பின் நிதானமாகக் கொஞ்சம் நேரம் கதை சொல்கிறார்கள். மீண்டும் பழிவாங்கும் படலம் 2x ஸ்பீடில் நியூஸ் ரீல் போல ஓடுகிறது.
இறுதியில் கிளைமாக்ஸில் வந்து நிற்கிறது படம். ஆனால், கடந்த பாகத்தில் அக்ஷய் கண்ணா நடித்த ரஹ்மான் டகய்ட்டுக்கு இருந்த ஆழமும், கதாபாத்திர வரைவும் இப்பாகத்தின் முக்கிய வில்லனான மேஜர் இக்பாலின் கதாபாத்திரத்தில் இல்லை. ஒற்றைத்தன்மையுடைய வில்லன் கதாபாத்திரமாக இவர் இருப்பது இந்தப் பாகத்தின் முக்கிய மைனஸ்.
அதனால் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருந்தாலும் இறுதி சண்டைக் காட்சி அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. இப்படியான போதாமைகளை எல்லாம் சில மாஸ் தியேட்டர் மொமெண்ட்களையும், சில எதிர்பாராத ட்விஸ்ட்களையும் வைத்து அடைத்திருக்கிறார் இயக்குநர்.
'படத்தைப் படமாகப் பாருங்கள்' என அரசியலை மொத்தமாக ஒதுக்கிவைப்பவர்களுக்கான விமர்சனம் மேலே. ஆனால், அரசியலையும் கலையையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது. படம் எதைப் பேசுகிறது, எப்படி அதைப் பேசுகிறது என்பதும் அதன் பிரதான அம்சம்தான். அப்படிப் பார்க்கும்போது இந்தப் படத்தின் மற்ற குறைபாடுகளை விட முக்கிய பிரச்னையாக இருப்பது அது பேசும் அரசியல்தான்.

உளவு, போர் படங்களில் மற்றொரு நாட்டை முழுமையாகத் தீமையின் உருவமாகச் சித்தரிப்பது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா அப்படி ரஷ்யாவைச் சித்தரித்து எடுத்த படங்கள் ஏராளம்; அதை உலகமே கொண்டாடி தீர்த்தும் இருக்கின்றன. இந்தியாவிலும் பாகிஸ்தான் அப்படிச் சித்தரிக்கப்பட்டு பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், இது வெறும் தேசப்பற்று சினிமாவாகவோ, உளவு சினிமாவாகவோ மட்டும் நின்றுவிடாமல் தற்போதைய ஆளும் அரசின் ஊதுகுழலாக மாறிவிடுவதுதான் அவலம்.
முந்தைய பாகத்தில் மாதவன் நடித்த அஜய் சன்யால் கதாபாத்திரத்தின் வழியாகப் பூடகமாகச் சொல்லிய விஷயங்களை இம்முறை வெளிப்படையாக எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பேசுகிறது படம்.
பணமதிப்பிழப்பு தொடங்கி ராமர் கோயில் தீர்ப்பு வரை தற்போதைய மோடி அரசு எதையெல்லாம் சாதனை எனத் தம்பட்டம் அடிக்க நினைக்கிறதோ, அனைத்தையும் எதோ ஒரு வகையில் கதையில் சேர்த்து அனைத்தையும் நியாயப்படுத்த முயற்சி செய்கிறது இந்தப் படம்.
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது 'புதிய இந்தியா' எனச் சிலாகித்த ஆதரவாளர்கள் கூட அதனால் ஏற்பட்ட இடர்களை உணர்ந்து தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொண்டார்கள்.
ஆனால், அதை மீண்டும் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' எனச் சாமான்யர்களின் மனத்தை மாற்றும் முயற்சியாக அதை பாகிஸ்தான் வரை இழுத்து முடிச்சு போட்டிருக்கிறார்கள். இதனாலேயே வாட்ஸ்அப் பார்வர்ட்களுக்கு திரைவடிவம் கொடுத்த உணர்வு நிறைய காட்சிகளில் ஏற்படுகிறது.
முதல் பாகத்தின் தொடக்கத்தில் "Based on True Incredible Events" என்று போட்டவர்கள், இந்தப் பாகத்திலோ அனைத்தும் புனைவு எனத் தொடக்கத்திலேயே பொறுப்புத் துறுப்பு போடுகிறார்கள். படத்தில் உலாவும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் உண்மையைத் தழுவியவைதான்.
நடுவில் உண்மையான வரலாற்று நிகழ்வுகளையும் செய்திகளையும் காட்டி அவற்றுடன் இவர்களுக்கு ஏற்ற, தேவையான விஷயங்களைக் கலந்துகட்டுகிறார்கள். இப்படி, உண்மை எது, புனைவு எது என்ற தெளிவில்லாமல் அனைத்தையும் உண்மை என நம்பவைக்கும் சித்து விளையாட்டைத் தொடர்ந்து மேற்கொள்கிறது படம்.
படத்தில் 'நாங்கள் உங்கள் நாட்டுக்கோ மதத்துக்கோ எதிரானவர்கள் அல்ல, தீவிரவாதத்திற்குத்தான் எதிரானவர்கள்' எனக் கடமைக்கு ஒரு வசனம் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், படம் முழுவதும் குறிப்பிட்ட மதத்தின் மீதான பொது புத்தியை ஆழ பதிய வைக்கும் முயற்சிகளைத் தீவிரமாகச் செய்கிறார்கள்.
இதை இரண்டு நாடுகளிடையேயான பிரச்னையாக மட்டும் சித்தரிக்காமல், சமூகத்தை இரு பிரிவுகளாகப் பிரித்து அவர்களிடையே கோள்மூட்டும் வேலையையும் சில காட்சிகளில் எந்தத் தயக்கமும் இன்றி செய்கிறார் இயக்குநர்.

அதனாலேயே திரையனுபவமாக அவ்வப்போது ஆச்சர்யப்படுத்தினாலும் இந்த 'புதிய இந்திய' பிரசார சினிமா ஒரு வித கவலையையே விட்டுச்செல்கிறது.


















