கர்நாடகா: "நானே முதல்வராகத் தொடர்வேன்" - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமார...
Doctor Vikatan: இதயநோய் பாதிப்புகளைத் தவிர்க்குமா சத்து மாத்திரைகள்?
Doctor Vikatan: என் உறவினர் ஒருவர் இதயநோய்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருப்பவர். இதயநோய் பாதிப்புக்கான மருந்து, மாத்திரைகளை எடுத்து வருகிறார். ஆனால், அவற்றைத் தாண்டி, கூடுதலாக சத்து மாத்திரைகள் (சப்ளிமென்ட்டுகள்) எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையா... எப்படிப்பட்ட சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

பொதுவாக, ஆரோக்கியமான உணவுப்பழக்கமும் முறையான வாழ்க்கைமுறையும் இருப்பவர்களுக்கு கூடுதல் சப்ளிமென்ட்டுகள் (Supplements) அவசியமில்லை. இருப்பினும், சிலருக்கு, சில மருத்துவ நிலைகளில் சப்ளிமென்ட்டுகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படலாம்.
அந்த வகையில், இதயநலனுக்குப் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் சப்ளிமென்ட்டுகள் மற்றும் அவற்றின் பலன்கள் குறித்துத் தெரிந்துகொள்வோம்.
இவற்றில் முதன்மையானது ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் (Omega-3 Fatty Acids). இது மீன் எண்ணெயில் (Fish Oil) அதிகம் உள்ளது. குறிப்பாக, சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் டூனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. மீன் சாப்பிட முடியாத சைவ உணவுக்காரர்கள், அதற்கு பதிலாக வால்நட்ஸ், சோயா பீன்ஸ், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் (Flax seeds) ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது, ரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு (Triglyceride) அளவைக் குறைத்து இதயத்திற்கு நன்மை செய்கிறது.

ரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் மருந்துகள் எடுப்பவர்களுக்கு உடலில் கோஎன்சைம் Q10 (CoQ10) அளவு குறையலாம். இதனால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை ஈடுகட்ட, பசலைக்கீரை, புரொக்கோலி, காலிஃபிளவர், ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, நிலக்கடலை, எள், முட்டை மற்றும் இறைச்சி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இதயத்துடிப்பு சீராக இருக்கவும், தசைவலியைத் தவிர்க்கவும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அவசியம். இந்தச் சத்துகள், வாழைப்பழம், திராட்சை, மாம்பழம், அவகாடோ, மாதுளை, சப்போட்டா, கொய்யா மற்றும்பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்றவற்றில் மிக அதிகம்.
இதயம், நரம்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி (Vitamin D) மிக முக்கியம். இது சூரிய ஒளியிலிருந்து தான் பிரதானமாகக் கிடைக்கும் என்பதால், காலை 6 மணி முதல் 8 மணி வரை வெயிலில் சிறிது நேரம் இருப்பது சிறந்தது. மேலும், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் காளான் ஆகியவற்றிலும் இது ஓரளவு உள்ளது. பிளான்ட் ஸ்டீரால் மற்றும் நார்ச்சத்து இரண்டும், எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகின்றன. இவை, ஓட்ஸ், கோதுமை, கைக்குத்தல் அரிசி, ஆப்பிள், அவகாடோ மற்றும் பட்டாணியில் இருப்பதால், இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் மருந்துகள் எடுப்பவர்கள் சப்ளிமென்ட்டுகளைத் தவிர்த்து உணவுமூலம் சத்துகளைப் பெறுவதே நல்லது. கூடுதல் சப்ளிமென்ட் தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம். இவை தவிர, வாழ்க்கைமுறை மாற்றங்களும் பின்பற்றப்பட வேண்டும். தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
உணவில் உப்பு, எண்ணெய் மற்றும் சர்க்கரையைக் குறைக்க வேண்டும். புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம்.
எனவே, எல்லோருக்கும் சப்ளிமென்ட்டுகள் அவசியமில்லை. சத்தான உணவுகளின் மூலம் இந்தச் சத்துகளை இயற்கையாகவே பெற முடியும். மற்றபடி, குறிப்பிட்ட நோயாளிகள் மட்டும் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



















