மும்பை: ஒரு கி.மீ. தூரத்தைக் குறைக்க குறுக்கு வழி; லாரி மீது கண்டெய்னர் மோதி 13 ...
Doctor Vikatan: காலையில் தூங்கி எழுந்திருக்கும்போது குதிகாலில் வலி... யூரிக் ஆசிட் பிரச்னையா?
Doctor Vikatan: என் வயது 50. கடந்த ஒரு வருடமாக காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது கணுக்காலில் (Heel pain) ஊசி குத்துவது போல் வலிக்கிறது.
கொஞ்சம் தூரம் நடந்த பிறகு வலி குறைந்துவிடுகிறது. இது யூரிக் ஆசிட் பிரச்னையா அல்லது எலும்புத் தேய்மானமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

கணுக்கால் அல்லது குதிங்கால் பகுதியில் ஏற்படும் வலிக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கலாம். உள்ளங்காலில் உள்ள தசைநாரில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சியின் காரணமாக ஏற்படுவது குதிகால் தசைநார் அழற்சி (Plantar Fasciitis).
குதிகாலில் உள்ள எலும்பானது தேய்மானம் அடைந்து, அதன் ஓரம் லேசாகக் கூர்மையாக வளரக்கூடும். இது ஒரு கொக்கி (Hook) போன்ற வடிவத்தில் இருக்கும். இதன் நுனிப்பகுதி (Tip) மிகவும் கூர்மையாக இருப்பதால், காலடி எடுத்து வைக்கும்போதோ அல்லது அந்தப் பகுதியில் அழுத்தம் ஏற்படும் போதோ கடுமையான வலி உண்டாக வாய்ப்புள்ளது. இதை குதிகால் எலும்பு வளர்ச்சி (Calcaneal Spur) என்கிறோம்.
கோயில் போன்ற இடங்களில் காலணி இல்லாமல் நடக்கும்போது அல்லது ஏதேனும் ஒரு பொருளின் கூர்மையான விளிம்பில் (Edge) காலை வைக்கும்போது குதிகால் வலி ஏற்படுகிறது. நம்முடைய பாதத்தில் எலும்புக்கும் தரைக்கும் நடுவே தோல், அதற்கு கீழே மெத்தை போன்ற தசைப்பகுதி மற்றும் தசைநார்கள் (Ligaments) உள்ளன.
பாதத்தின் அடியில் 'பிளான்டார் ஃபாசியா' (Plantar fascia) எனப்படும் பெரிய தசைநார் உள்ளது. கூர்மையான பொருள்களின் மீது கால் வைக்கும் போது, இந்தத் தசைநார் கிழிந்து போவதற்கோ அல்லது நசுங்கிப் போவதற்கோ வாய்ப்புகள் அதிகம்.

படிக்கட்டுகளில் இறங்கும் போதோ அல்லது பேருந்துகளில் ஏறி இறங்கும் போதோ, அவசரத்தில் குதிகாலை மட்டும் வேகமாக ஊன்றி இறங்குவதால், அந்த விளிம்புகளில் ஏற்படும் அழுத்தத்தினால் 'பிளான்டார் ஃபாசைடிஸ்' (Plantar fasciitis) எனப்படும் தசைநார் கிழிவு அல்லது வீக்கம் ஏற்படுகிறது.
இந்தப் பாதிப்பு ஏற்பட்ட பிறகும் நாம் அதைக் கவனிக்காமல் தொடர்ந்து அதன் மேலேயே மிதித்து நடந்துகொண்டிருந்தால், இந்த வலியானது 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை நீடிப்பதற்கு வாய்ப்புள்ளது.
வீட்டிற்குள்ளும் வெளியிலும் நடக்கும் போது மைக்ரோனைஸ்டு பாலிமர் (Micronized Polymer Chappal) மெட்டீரியலால் செய்த மிகவும் மென்மையான செருப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
சமையலறை போன்ற இடங்களில் நீண்ட நேரம் நின்று வேலை செய்பவர்கள், அடுப்பின் அருகிலோ, பாத்திரம் கழுவும் சிங்க் (Sink) அருகிலோ அல்லது காய்கறிகள் நறுக்கும் இடங்களிலோ நான்கைந்து மிதியடிகளை ஒன்றாகச் சேர்த்து குஷன் போல அதன் மீது நின்று வேலை செய்யலாம்.
நடக்கும் போது குதிகால் பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்காமல் நடக்கப் பழக வேண்டும்.

இந்த வலி எதனால் ஏற்படுகிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய எக்ஸ்ரே (X-ray) எடுத்துப் பார்த்து, அதற்கேற்ப மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை உட்கொள்ளலாம்.
சிலருக்கு காலையில் எழுந்தவுடன் முதல் அடி எடுத்து வைக்கும் போது கடுமையான வலி இருக்கும். உங்களுக்கு அப்படி இருந்தால், அது சர்க்கரை நோய் (Diabetes) அல்லது உடலில் யூரிக் அமிலம் (Uric Acid) அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்னையாகவும் இருக்கலாம். எனவே, ரத்தப் பரிசோதனை செய்து இதையும் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



















