மும்பை: கணவன் துணையோடு காதலன் கொலை; டிரம்மில் அடைத்து சாக்கடையில் வீசிய பெண் சிக...
Doctor Vikatan: மணப்பெண்ணின் உயிரைப் பறித்த மஞ்சள்; மரணத்துக்குக் காரணமாகும் அளவுக்கு ஆபத்தானதா?
Doctor Vikatan: மத்தியப் பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் ஹல்தி கொண்டாட்டத்தில் மணமகளுக்கு மஞ்சள் பூசியபோது, அது அலர்ஜியாகி உயிரிழந்திருக்கிறார்.
மணமகன் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், உறவினர்கள் சிலரும் மஞ்சளால் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் பார்த்தேன்.
மஞ்சள் என்பது கிருமி நாசினி என்றுதான் இத்தனை காலமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் அது உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறும் என்பதே அதிர்ச்சியளிக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்
பழங்காலத்திலிருந்தே நாம் பின்பற்றி வரும் மஞ்சள் குளியல் என்பது உடலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத ஆரோக்கியமான நடைமுறையாகவே தொடர்கிறது.
இதற்கு முக்கியக் காரணம், அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மஞ்சள், எந்தவிதக் கலப்படமும் இல்லாத, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டு, நாமே அரைத்துப் பயன்படுத்தியதாக இருந்ததுதான்.
அத்தகைய அசல் மஞ்சள், கிருமி நாசினியாகவும் செயல்படும்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் சந்தையில் கிடைக்கும் மஞ்சளில் அதிக அளவில் கலப்படம் செய்யப்படுகிறது. மஞ்சள் அதிக நிறமாகத் தெரிய வேண்டும் என்பதற்காகப் பல செயற்கை நிறமிகள் மற்றும் வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.
இத்தகைய வேதிப்பொருள்கள் கலந்த மஞ்சளைப் பயன்படுத்தும்போது சருமத்தில் அரிப்பு மற்றும் கறுப்பு நிறத் திட்டுகள் போன்ற ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்படுகின்றன. கலப்பட மஞ்சளைப் பயன்படுத்தும்போது அது சுவாசக்குழாய் வழியாக உள்ளே சென்றால், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற சிக்கல்களையும் உண்டாக்கும்.
மஞ்சள் குளியல் என்பது உடலுக்கு நலம் பயக்கக்கூடியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அது அசல் மஞ்சளா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.

கடைகளில் விற்கும் தரமற்ற மஞ்சள்தூளைத் தவிர்த்து, தரமான மஞ்சள் கிழங்குகளை வாங்கி, தேவைக்கேற்ப நாமே அரைத்துப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. ஒவ்வொருவரின் சருமத்தின் தன்மைக்கேற்ப (Skin type), அசல் மஞ்சளைப் பயன்படுத்தி குளிப்பது எப்போதும் நன்மையே தரும்.
சமையல் பயன்பாட்டிலும் தரமான மஞ்சளைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டியது அவசியம்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தச் சம்பவத்தில் மஞ்சள் பூசிக்கொண்ட மணமகள் உயிரிழந்திருக்கிறார். தவிர, பலருக்கும் உடல்நலம் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. எனவே, அந்த மஞ்சளின் தரம் மற்றும் அதில் கலக்கப்பட்டுள்ள பொருள்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.
இதுபோன்ற செய்திகளைப் பார்த்ததும், மஞ்சள் உபயோகமே தவறு என்ற எண்ணத்தில் பலரும் அதைத் தவிர்க்க நினைப்பார்கள். மஞ்சளின் தரம் அறிந்து பயன்படுத்தும்போது அந்தப் பயம் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















