அமெரிக்காவின் கண்ணை உறுத்தும் இந்தியா - EU ஒப்பந்தம்; ஐரோப்பிய நாடுகளைக் கடுமையா...
Doctor Vikatan: தூக்கம், ஸ்ட்ரெஸ்ஸுக்கான மாத்திரைகள்... தொடர்ந்து எடுக்க வேண்டுமா?
Doctor Vikatan: தூக்க மாத்திரைகள் மற்றும் மனநலப் பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளைத் திடீரென நிறுத்தக்கூடாது, டோஸேஜைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துப் பிறகுதான் நிறுத்த வேண்டும் எனச் சிலரும், அந்த மாத்திரைகளை ஒருமுறை எடுக்க ஆரம்பித்தால், வாழ்நாள் முழுவதும் எடுத்தாக வேண்டும் எனச் சிலரும் சொல்கிறார்கள். இதில் எது உண்மை?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

மனநலம் என்பது ஒரு காலத்தில் மந்திரம், சாபம் போன்றவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டது. மனநோய் என்பதும் உடல் நோய்களைப் போலவே மாத்திரைகளால் குணப்படுத்தக்கூடியதுதான் எனப் புரியவைக்க, 1950-களில் மனநல மருத்துவர்களுக்குப் பயிற்சி தேவைப்பட்டது.
தற்போது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற நிலையில் உலகம் தவிக்கிறது. மனநோய்களுக்கான மாத்திரைகள் பெருமளவில் சந்தைப்படுத்தப்படுகின்றன
உடல் நோய்களுக்கான மாத்திரைகளைப் போலவே மனநல மாத்திரைகளும் அதிக அளவில் விற்பனையாகின்றன. ஏனென்றால், மன நோய்களுக்கான மாத்திரைகள் நோயாளிகளைவிட அவர்களைப் பராமரிப்பவர்களால் பெருமளவில் வாங்கப்படுகின்றன.
மனநோய்களைக் குணப்படுத்துவதாகச் சொல்லிக் கண்டுபிடிக்கப்படுகிற மாத்திரைகள் மாறுப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கின்றன. பெரிய மருந்து நிறுவனங்கள் தங்கள் காப்புரிமையைத் தக்கவைக்கப் புதிய தலைமுறை மருந்துகளை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றன.
மாத்திரையை நிறுத்தினால் நோய் மீண்டும் வரும் என்ற ஒரு வித பயம் நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களிடம் விதைக்கப்படுகிறது. எந்த நோய்க்காக அந்த மருந்துகளைச் சாப்பிட்டீர்களோ, அந்த நோய்கள் குணமாகிவிட்டாலும் மாத்திரைகளை நிறுத்த வேண்டாம் என்று பெரிய மருத்துவ கம்பெனிகளே அறிவுறுத்துகின்றன. இது ஒருவகையில் மக்களைப் பயமுறுத்தும் டெக்னிக்தான்.
தூக்கம் மற்றும் மனநலப் பிரச்னைகளுக்கான மாத்திரைகளின் நீண்டகால பயன்பாடு நிறைய சிக்கல்களை ஏற்படுத்தலாம். அதீத மன அழுத்தம் கொண்ட காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதில் சிலது நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்வது. சிலது, சமுதாயத்தில் மற்றவர்களால் ஏற்படுவது.

தூக்கத்திற்காகவும், பதற்றத்தைக் குறைப்பதற்காகவும் விற்கப்படும் சில மாத்திரைகள் (Sedatives/Anxiolytics) உடனடி பலன் தரும். ஆனால், அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினால் அதற்கு நாம் அடிமையாகும் வாய்ப்பு (Dependence) மிக அதிகம்.
அதேபோல், தீவிர மனநலப் பிரச்னைகளுக்காகத் தரப்படும் Anti-psychotics வகை மாத்திரைகளும் சிறிய அளவில் மனதை அமைதிப்படுத்தக்கூடியவையே.
மனநலனுக்கு உதவும் வைட்டமின் மற்றும் தாது உப்புகள் போன்றவை சேர்த்த சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, இந்த மாத்திரைகளை விட்டுவிடலாம். அதிகமான மாத்திரைகளைப் பல வருடங்களாக எடுத்துக்கொள்பவர்கள், அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து எடுத்துக்கொள்வது நல்லது. மற்றவர்கள் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது எடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















