செய்திகள் :

Doctor Vikatan: நடிகை ஷகிலாவுக்கு ஏற்பட்ட பிரச்னை; உங்களுக்கும் வரலாம்; எச்சரிக்கும் மருத்துவர்

post image

Doctor Vikatan: அளவுக்கதிக மொபைல் பயன்பாட்டினால், கழுத்து நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அது அறுவை சிகிச்சைவரை கொண்டு போய் விட்டதாகவும், லட்சக்கணக்கில் செலவழித்ததாகவும் நடிகை ஷகிலா சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

மொபைல் பயன்பாடு தவிர்க்க முடியாத இந்நாளில், எல்லோருக்கும் இந்தப் பிரச்னை வர வாய்ப்பு உண்டா... எப்படித் தவிர்ப்பது?

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

நம்மில் பலரின் பொழுதுகளும் ரீல்ஸில் தொடங்கி ரீல்ஸில்தான் நிறைவுபெறுகின்றன. காலை விடிந்தது முதல் இரவு கண்ணயரும் வரை நம் கைகளோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள், இன்று நம் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன.

செல்போன் அடிக்ஷனுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் பலருக்கும், அந்த அடிக்ஷன் ஒவ்வொரு நிமிடமும், நம் உடலுக்குள் மிகப்பெரிய பேராபத்தை விதைத்துக் கொண்டிருப்பது தெரியவில்லை. பிரபல நடிகை ஷகீலாவுக்கு நேர்ந்த சம்பவம், எல்லோருக்கும் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.

"நான் கட்டிலில் ஒரு பக்கமாகப் படுத்துக்கொண்டு தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் வரை போனில் கேம் விளையாடுவேன். டீ அல்லது காபி குடிக்க மட்டுமே எழுவேன். மீண்டும் வந்து அதே கேமைத் தொடர்வேன். அதற்குப் பிறகு, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பதில் பல மணிநேரத்தைச் செலவிடுவேன்.

தவறான உடல் அமைப்பும் (improper posture) அதிகப்படியான போன் பயன்பாடும் என் கழுத்தில் உள்ள முக்கிய நரம்புகளை பாதித்து, இறுதியில் என்னை அறுவை சிகிச்சை வரை கொண்டு சேர்த்தது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே போனைப் பயன்படுத்துங்கள். 

மொபைல் போனுக்கு அடிமையான பிள்ளைகள்
மொபைல் போனுக்கு அடிமையான பிள்ளைகள் (சித்தரிப்புப் படம்)

என்னுடைய வீடியோக்கள் உட்பட  அவசியமில்லாத வீடியோக்களைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். பயனுள்ளவற்றை மட்டுமே பாருங்கள். இல்லையென்றால், நீங்களும் லட்சக்கணக்கில் பணத்தை இழப்பதோடு, தாங்க முடியாத வலியையும் அனுபவிக்க வேண்டி வரும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கழுத்தில் கட்டோடு, மருத்துவமனையில் இருப்பது போன்ற அவரது போட்டோவும் இந்தச் செய்தியும் வைரலான நிலையில், காலங்காலமாக அறிவுறுத்தப்படும் செல்போன் பயன்பாடு கட்டுப்பாடு குறித்து மீண்டும் பேச வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

மொபைல் பயன்படுத்தும் எல்லோருக்கும் இது போன்ற பாதிப்புகள் வருமா... சாதாரண கழுத்து வலி, போகப் போக  அறுவை சிகிச்சைவரை கொண்டு விடுமா...?

விரிவான விளக்கங்களை அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பி. விஜயசங்கர்.

நரம்பியல் மருத்துவர் பி. விஜயசங்கர்
நரம்பியல் மருத்துவர் பி. விஜயசங்கர்

''இரவில் தூங்குவதற்கு முன் 'வெறும் 10 நிமிடங்கள்' என்று தொடங்கும் சமூக வலைத்தளப் பயன்பாடு, அப்படியே 30 நிமிடங்கள், ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் என மணிக்கணக்கில் நீடிக்கக்கூடும்.

நம்மில் பலருக்கு, இரவில் தூங்குவதற்கு முன் கடைசியாக மொபைல் பார்ப்பதும், காலையில் எழுந்தவுடன் முதலில் கையில் எடுப்பதுமாக மாறிவிட்டது. அளவுக்கு அதிகமான திரைப் பயன்பாடு (screen use) பொதுவாக கண் எரிச்சல் மற்றும் தூக்கமின்மைப் பிரச்னைகளோடு தொடர்புபடுத்திப் பேசப்பட்டாலும், மற்றொரு பிரச்னையும் அமைதியாக உருவெடுத்து வருகிறது. அதுதான் நடிகை ஷகிலா சம்பவத்தில் நடந்திருக்கிறது.

அதாவது மொபைல் போன்ற சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் கழுத்து மற்றும் தோள்பட்டை அசௌகர்யம்.

நீண்ட நேரம் திரையைப் பார்ப்பதால், குறிப்பாக, தலையை நீண்ட நேரம் முன்னோக்கி வளைத்து வைத்துக்கொள்வதால் ஏற்படும் கழுத்து மற்றும் தோள்பட்டை வலி, விறைப்புத் தன்மை (stiffness) அல்லது சோர்வைக் குறிக்க 'டெக் நெக்' (Tech Neck) என்ற சொல் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஒரே நிலையில் நீண்ட நேரம் இருப்பது கழுத்து மற்றும் மேல் முதுகில் உள்ள தசைகள் மற்றும் அமைப்புகளுக்குக் கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும்.

கழுத்து வலி
கழுத்து வலி (Representational Image)

இதில் பிரச்னை ஸ்மார்ட்போனில் இல்லை. அதை நாம் பயன்படுத்தும் தோரணை (posture) மற்றும் பயன்படுத்தும் நேர அளவில்தான் உள்ளன. போனைப் பார்ப்பதற்காக நாம் மீண்டும் மீண்டும் தலையை முன்னோக்கி வளைக்கும் போது, தலையைத் தாங்கி நிலைநிறுத்த கழுத்து தசைகள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

இதே நிலையில் நீண்ட நேரம் இருப்பது, கழுத்து, தோள்பட்டை மற்றும் மேல் முதுகில் தசைச் சோர்வு, தசைப் பிடிப்பு, இறுக்கம் மற்றும் வலியுடன் கூடிய தசைச் சுருக்கங்களை  ஏற்படுத்தக்கூடும்.

நீண்ட நேரம் ஸ்க்ரோல் செய்யும் போதோ, கேம் விளையாடும் போதோ அல்லது வீடியோக்களைப் பார்க்கும் போதோ, கழுத்தின் பக்கவாட்டுத் தசைகளும் (cervical paraspinal muscles) மேல் கழுத்து-தோள்பட்டை தசைகளும் தொடர்ந்து சுருங்கிய நிலையிலேயே இருக்கக்கூடும்.

இந்தத் தசை இயக்கமானது கழுத்து மற்றும் தோள்பட்டையைச் சுற்றி வலி, விறைப்புத் தன்மை மற்றும் ஒருவித கனமான உணர்வை ஏற்படுத்தலாம். மீண்டும் மீண்டும் ஏற்படும் தசைப்பிடிப்பு, பாதுகாப்பிற்கான தசைச் சுருக்கங்களைத் தூண்டி, வலி, விறைப்புத் தன்மை மற்றும் கழுத்து இயக்கக் குறைபாடு ஆகியவற்றை உருவாக்கும். 

ஒரே இடத்தில் தொடர்ந்து கொடுக்கப்படும் இந்த அழுத்தம்,  காலப்போக்கில், சிலருக்கு நிலையான கழுத்து வலிக்கும், இயக்கம் குறைவதற்கும் வழிவகுக்கும்.

Muscle Pain - தசை வலி
Muscle Pain - தசை வலி

ஏற்கெனவே செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ் (cervical spondylosis), தட்டுத் தேய்மானம் (disc degeneration) அல்லது பிற தண்டுவடப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, நீண்ட நேரம் சரியான தோரணை இல்லாமல் இருப்பதால், ஏற்கெனவே உள்ள அறிகுறிகள் மேலும் தீவிரமாகக்கூடும்.

வலியானது கைக்குப் பரவத் தொடங்கினாலோ அல்லது மரத்துப்போதல், ஊசி குத்துவது போன்ற உணர்வு அல்லது பலவீனம் ஆகியவையும் சேர்ந்துகொண்டாலோ, அது நரம்பு பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். இதை வெறும் 'டெக் நெக்' என்று அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற வேண்டும்.

யாருக்குப் பாதிப்பு அதிகம்?

பல மணி நேரம் ஸ்க்ரோல் செய்வதிலும், மெசேஜ் அனுப்புவதிலும், இணையத்தைப் பயன்படுத்துவதிலும் நேரத்தைச் செலவிடும் தீவிர ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள்.
நீண்ட நேரம் ஒரே தோரணையில் அமர்ந்து விளையாடுபவர்கள்.
மொபைலில்  நீண்ட நேரம் படிக்கும் அல்லது ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள்.

லேப்டாப்பில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள்.
அடிக்கடி வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ் பார்ப்பவர்கள்.
நீண்ட நேரம் மொபைல் திரையைப் பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர். ஏற்கெனவே கழுத்து அல்லது தண்டுவடப் பிரச்னைகள் உள்ளவர்கள்.

லேப்டாப்

அலட்சியப்படுத்தக் கூடாத அறிகுறிகள்

கழுத்து விறைப்பு அல்லது வலி, தோள்பட்டை அல்லது மேல் முதுகு அசௌகர்யம், கழுத்தை முழுமையாகத் திருப்ப முடியாமை, தலைவலி, தசைச் சோர்வு மற்றும் அடிக்கடி ஏற்படும் தசைச் சுருக்கம் ஆகியவை பொதுவான எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

கைக்கு பரவும் வலி, கையிலோ அல்லது விரல்களிலோ ஏற்படும் ஊசி குத்துவது போன்ற உணர்வு, மரத்துப்போதல் அல்லது பலவீனம் ஆகியவற்றை வெறும் 'டெக் நெக்' என்று அலட்சியம் செய்யக்கூடாது. ஏனெனில் இந்த அறிகுறிகள் நரம்பு பாதிப்பைக் குறிக்கலாம் என்பதால் மருத்துவப் பரிசோதனை அவசியமாகும்.

தொடர்ச்சியான உடல் சமநிலை இழப்பு (balance difficulty), கைகள் அல்லது கால்களில் பலவீனம், விரல்களால் நுட்பமான வேலைகளைச் செய்வதில் சிரமம் அல்லது நடப்பதில் மாற்றம் ஏற்பட்டால், அவை தண்டுவட பாதிப்பாக இருக்கக்கூடும் என்பதால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

வருமுன் காப்பதே சரி!

நீண்ட கால சிகிச்சையை விட முன்னெச்சரிக்கையே சிறந்தது. தோரணை தொடர்பான பெரும்பாலான கழுத்து அசௌகர்யங்களை ஆரம்பத்திலேயே எளிய மாற்றங்கள் மூலம் சரிசெய்து விடலாம் என்பது  நல்ல செய்தி.

எப்போதும் தலையைக் குனிந்து பார்க்காமல், போனை உங்களின் கண் மட்டத்திற்கு அருகில் வைத்துப் பயன்படுத்துங்கள்.

உட்காரும் தோரணையை அடிக்கடி மாற்றுங்கள், வழக்கமாக சிறு இடைவெளிகளை எடுத்துக்கொண்டு, நடப்பது சிறந்தது.

கழுத்து மற்றும் தோள்பட்டைகளை மெதுவாக நீட்டி (stretch) பயிற்சி செய்யுங்கள். படுக்கையில் படுத்துக்கொண்டு நீண்ட நேரம் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

வழக்கமான உடற்பயிற்சிகளும், தசைகளை வலுவூட்டும் பயிற்சிகளும் கழுத்து மற்றும் மேல் முதுகின் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவும்.

மொபைல் திரையைப் பார்க்கும் போது சிறிய இடைவெளிகளை எடுப்பது கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளுக்கு ஓய்வு அளிக்கும். இது சோர்வு, பிடிப்பு மற்றும் தசைச் சுருக்கத்திற்கு காரணமான தொடர் தசை இறுக்கத்தைத் தடுக்க உதவும்.

கழுத்து தொடர்பான எல்லாப் பிரச்னைகளுக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு மட்டுமே காரணம் அல்ல என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

பிசியோதெரபி

அறுவை சிகிச்சைதான் தீர்வா?


மொபைல் திரைப் பயன்பாட்டினால் ஏற்படும் அனைத்துக் கழுத்து வலிகளுக்கும் பெரிய சிகிச்சையோ அல்லது அறுவை சிகிச்சையோ தேவைப்படுவதில்லை. பெரும்பாலான நேரங்களில், தோரணை மற்றும் பணிச்சூழல்களை (ergonomics) மேம்படுத்துதல், ஒரே இடத்தில் நிலையாக அமர்ந்திருப்பதைத் தவிர்த்தல், தவறாமல் இடைவெளி எடுத்தல், முறையான பிசியோதெரபி (physiotherapy) மற்றும் தசை வலுவூட்டும் பயிற்சிகள் மூலம்  நிவாரணம் பெறலாம்.

பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து, பிசியோதெரபி, மருந்துகள், ஊசிகள் அல்லது  அறுவை சிகிச்சை வரை சிகிச்சைகள் வேறுபடலாம். பொதுவாக,  கடுமையான நரம்பு, தண்டுவட அழுத்தம் இருக்கும் போது, அதுவும் பிற சிகிச்சைகள் பலனளிக்காதபோதும் அல்லது நரம்பியல் அறிகுறிகள் அதிகரிக்கும்போதும் மட்டுமே அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. செல்போன் பயன்பாட்டுக்கு சுய கட்டுப்பாடு வைத்துக்கொள்வதுதான் இதில் அடிப்படை தீர்வு'' என்கிறார் டாக்டர் விஜயசங்கர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

டாக்டர் விஜயசங்கர்:

சென்னை, வானகரம் அப்போலோ மருத்துவமனையில் பணிபுரிபவர். நரம்பியல் மருத்துவத்தில் 11 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

Doctor Vikatan: பஸ் பயணத்தின்போது தலைச்சுற்றல், வாந்தியா... மீள்வது ரொம்ப சிம்பிள்!

Doctor Vikatan: எப்போது பஸ், கார், வேன் போன்றவற்றில் பயணம் செய்தாலும் எனக்கு சில நிமிடங்களிலேயே தலைச்சுற்றலும் வாந்தியும் வருவதை உணர்கிறேன். இதனாலேயே பெரும்பாலும் பயணங்களைத் தவிர்க்கிறேன். தவிர்க்க மு... மேலும் பார்க்க

Doctor Vikatan: திருமணத்துக்கு முன்பு கருக்கலைப்பு, 8 வருடங்களாக குழந்தை இல்லை; இதுவே நிரந்தரமா?

Doctor Vikatan: எனக்கு இப்போது 30 வயதாகிறது. கல்லூரியில் படித்தபோது, காதல் வயப்பட்டு, கர்ப்பம் தரித்தேன். அந்தச் சமயத்தில் என் காதலர் வீட்டில் பெரிய பிரச்னை நடந்து, திருமணத்துக்கு சம்மதிக்காததால், பயத... மேலும் பார்க்க

Doctor Vikatan: உணவு உண்ணும்போது தொண்டையை அடைக்கும் உணர்வு... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 40. எனக்கு கடந்த சில மாதங்களாக உணவு உண்ணும்போது தொண்டையில் உணவு அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தொண்டையிலிருந்து உணவு இறங்க சில நிமிடங்கள் ஆகின்றன. அதன் பிறகே இயல்... மேலும் பார்க்க

Doctor Vikatan: அக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில் கருமை... சர்க்கரைநோயின் அறிகுறியா?

Doctor Vikatan: எனக்குஅக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள சருமம் கறுப்பாக மாறியிருக்கிறது. இது சருமப் பிரச்னை என நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படி இருந்தால் சர்க்கரை நோய் இருக்கலாம் என்கிறார்கள் ச... மேலும் பார்க்க

ஈரோடு: ஒரே நாளில் 153 தாய்மார்கள் தாய்ப்பால் தானம் கொடுத்து சாதனை!

‘வரம் – தாய்ப்பால் வங்கி’, Rotary Club of Erode Nexus மற்றும் Lotus Hospital ஆகியவை இணைந்து இந்த மாபெரும் தாய்ப்பால் தான முகாமை ஏற்பாடு செய்து, Asia Book of Records சாதனையைப் படைத்துள்ளனர்.தாய்ப்பால் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பல் மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கருவிகளால் ஹெச்ஐவி தொற்று பரவுமா?

Doctor Vikatan:பல் மருத்துவ சிகிச்சையின்போது ஒரே கருவி பலருக்கும் பயன்படுத்தப்படுவதால், ஹெச்ஐவி (HIV) அல்லது பிற நோய்த்தொற்றுகள் பரவ வாய்ப்பிருக்கிறதா.... இது குறித்து எனக்குத் தெளிவுபடுத்த முடியுமா?ப... மேலும் பார்க்க