பாசிட்டிவ் ரூட்டில் பங்குச் சந்தை... முதலீட்டுக்கு கவனிக்கவேண்டிய முக்கியத் துறைகள்!
இந்திய பங்குச் சந்தையின் நீண்டகால வளர்ச்சி உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒரு பக்கம் இந்தியப் பொருளாதாரத்தின் மீது இருக்கும் நம்பிக்கை. இன்னொரு பக்கம், உள்நாட்டுத் தேவை காரணமாக நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி அடையும் என்ற எதிர்பார்ப்பு. அது பங்குச் சந்தையில் பிரதிபலிக்க ஆரம்பித்துள்ளது.
பாசிட்டிவ் வளர்ச்சி!
முடிவடைந்த ஜூலை மாதத்தில் முக்கிய பங்குச் சந்தை குறியீடுகள் அனைத்தும் பாசிட்டிவ் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஜூலையில் சென்செக்ஸ் 1.52% உயர்ந்தது.
மிட்கேப் குறியீடு 2.09% உயர்ந்துள்ளது. ஸ்மால்கேப் குறியீடும் 0.20% அதிகரித்தது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு முதலீடும் ஜூலை மாதத்தில் பாசிட்டிவாகவே உள்ளன.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் கள் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் ஆகிய இரண்டிலும் நிகரமாக முதலீடு செய்தனர். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குகளில் முதலீட்டைத் தொடர்ந்து வைத்திருந்தாலும், கடன் பத்திரங்களைக் கணிசமாக விற்பனை செய்தனர்.
சந்தைக்கு ஆதரவு தரும் உள்நாட்டு முதலீடுகள்!
இந்திய பங்குச் சந்தையின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று உள்நாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான பங்கேற்பு.
பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் மாத முறையான முதலீட்டுத் திட்டங்கள் தொடர்ந்து நிலையான பண வரவுகளை உருவாக்குகின்றன.
உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர் கள், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனையை பெரும்பாலும் சமநிலைப்படுத்தி வருகின்றனர்.
வெளிநாட்டு முதலீட்டு வெளி யேற்றம் குறைந்துள்ளதால், சந்தை ஏற்ற இறக்கமும் ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது.

நிறுவனங்களின் லாப வளர்ச்சி மீண்டும் தொடங்கியுள்ளது!
கடந்த இரண்டு ஆண்டுகளாக மந்தமாக இருந்த நிறுவனங்களின் லாப வளர்ச்சி தற்போது மீட்சியடைந்து வருகிறது. இது இந்திய பங்குச் சந்தைக்கு முக்கிய பாசிட்டிவாகக் கருதப்படுகிறது.
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துறையைத் தவிர்த்து பார்த்தால், லாப வளர்ச்சி இன்னும் வலுவாக உள்ளது.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்கள் உள்நாட்டுத் தேவையின் ஆதரவால் வேகமான லாப வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன.
நிஃப்டி நிறுவனங்களின் லாபம் 2027 மற்றும் 2028 நிதியாண்டுகளில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிப்பீட்டு நிலை!
தற்போது நிஃப்டி மதிப்பீடுகள் (Valuations) வரலாற்றுச் சராசரி அளவு களுக்கு அருகில் உள்ளன. வளர்ந்து வரும் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய பங்குகளில் கூடுதல் மதிப்பீட்டு வித்தியாசமும் குறைந்துள்ளது.
லார்ஜ்கேப் பங்குகள் நியாயமான மதிப்பீட்டில் உள்ளதாகத் தோன்றி னாலும், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் இன்னும் உயர்ந்த மதிப்பீட்டில் வர்த்தகம் ஆவதாகவே கருதப்படுகின்றன. எனவே, இந்தப் பிரிவுகளில் தேர்ந்தெடுத்த முதலீடு மிகவும் முக்கியமானது.
ஆகஸ்ட் 2026: பங்குச் சந்தை பார்வை!
தற்போதைய சூழலில் குறுகிய கால ஏற்ற, இறக்கம் தொடரும் வாய்ப்பு உள்ளது. மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலருக்கு மேல் இருக்கும் கச்சா எண்ணெய் விலை சந்தையைக் குறுகிய காலத்தில் பாதிக்கக்கூடும். இருப்பினும், நடுத்தரக் காலத்தில் சந்தைக்கான பார்வை பாசிட்டிவாக உள்ளது.
முதல் காலாண்டு நிதிநிலை முடிவுகள் நிறுவனங்களின் லாப வளர்ச்சி பரவலாக மேம்பட்டு வருவதைக் காட்டுகின்றன.
இந்தியாவின் வெளிநாட்டு நிதி நிலையும் வலுவடைந்துள்ளது.
பெரிய நிறுவனப் பங்குகளுக்கு நடுநிலைப் பார்வை, மிட்கேப் பங்குகளுக்கு சற்று அதிக ஒதுக்கீடு, ஸ்மால்கேப் பங்குகளுக்கு அதிக மதிப்பீடு காரணமாக சற்று குறைந்த ஒதுக்கீடு பரிந்துரைக்கப்படுகிறது.
கவனிக்க வேண்டிய முக்கிய துறைகள்!
தற்போதைய சந்தைச் சூழலில், பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் அதிகரிப் பதன் காரணமாக சில துறைகள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
குறிப்பாக, வங்கி மற்றும் நிதி, தொழில்துறை, மூலதனப் பொருள்கள், மருத்துவமனை சார்ந்த சுகாதாரம், மூலதனச் சந்தை மற்றும் தேர்ந்தெடுக்கப் பட்ட உலோகத் துறை நிறுவனங்கள் சாதகமான வாய்ப்புகளை வழங்கக் கூடியவையாகக் கருதப் படுகின்றன.
வங்கி மற்றும் நிதித் துறையில் கடன் தேவை அதிகரிப்பதும், தொழில்துறை மற்றும் மூலதனப் பொருள்கள் துறையில் உள்கட்டமைப்பு மற்றும் தனியார் முதலீடுகள் அதிகரிப்பதும் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கலாம். அதேபோல், மருத்துவ சேவை களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தரமான மருத்துவமனை நிறுவனங்களுக்கும் நீண்டகால வாய்ப்புகள் இருக்கலாம்.
பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு களில் பொதுமக்களின் பங்கேற்பு அதிகரிப்பது மூலதனச் சந்தை சார்ந்த நிறுவனங்களுக்கு சாதகமாக அமையலாம். உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சி காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உலோக நிறுவனங்களுக்கும் வாய்ப்புகள் உருவாகலாம்.
எனினும், ஒரு துறை சாதகமாக இருப்பது மட்டும் முதலீட்டுக்கான காரணமாக இருக்கக்கூடாது. நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி, லாபம், கடன் நிலை, மதிப்பீடு மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்பு ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகே முதலீட்டு முடிவை எடுப்பது அவசியம்.



















