`காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு' ஆளுநர் வெளியேறியத...
Doctor Vikatan: ஹேர் டை உபயோகித்தால் கண்களில் அரிப்பு, நீர் வடிதல்... என்ன காரணம்?
Doctor Vikatan: நான் பல வருடங்களாக தலைக்கு டை அடித்து வருகிறேன். ஆனால், கடந்த சில வருடங்களாக டை அடிக்கும் நாள்களில் கண்களில் அரிப்பும் நீர் வடிதலும் இருக்கிறது. டை அலர்ஜிதான் காரணம் என்கிறார்கள் சிலர். ஹேர் டைக்கும், கண்களில் ஏற்படும் அலர்ஜிக்கும் தொடர்பு உண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

வயதாவதை நம்மால் தடுக்க முடியாது, வயது ஏற ஏற நம் தலைமுடியும் நரைப்பது இயல்புதான். இப்போதெல்லாம் சராசரிக்கும் முன்பே, இவ்வளவு ஏன், டீன் ஏஜிலேயே நரை முடி பிரச்னை பலருக்கும் ஆரம்பித்துவிடுகிறது. இள வயதிலேயே டை உபயோகிக்க ஆரம்பித்து விடுவதையும் பார்க்கிறோம். பொதுவாக, நீண்டகாலமாக ஹேர்டை (Hair dye) பயன்படுத்துபவர்களுக்கு இந்தப் பிரச்னை வருவதைப் பார்க்கலாம்.
டை பயன்படுத்துவதில் பொதுவாகக் காணப்படும் பக்கவிளைவுகளில், கண்களில் ஏற்படும் அலர்ஜி முக்கியமானது. இந்த டையில் பிபிடி என்று சொல்லப்படும் P-Phenylenediamine (பி-ஃபினைலீன்டையமின்) என்ற வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள்தான் டையினால் ஏற்படும் அலர்ஜிக்கு முக்கிய காரணம். இது சருமத்தில் தடிப்புகளை (Skin rash) ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கண்களில் எரிச்சல், அரிப்பு மற்றும் உறுத்தலையும் உண்டாக்கலாம். எனவே, டை போடும்போது அது கண்களுக்குள் சென்றுவிட்டால், உடனடியாக சாதாரண குழாய் நீரிலோ அல்லது அறை வெப்பநிலையில் உள்ள நீரிலோ கண்களை நன்றாகக் கழுவ வேண்டும்.

ஒருவேளை அந்த அலர்ஜி சரியாகாமல் நீடித்தால், உடனடியாக கண் மருத்துவரைச் சந்திக்க வேண்டும். அவர் அலர்ஜியை சரிசெய்யக்கூடிய மருந்துகளைப் (Anti-allergic drugs) பரிந்துரைப்பார். இன்று மார்க்கெட்டில் அம்மோனியா இல்லாத டைகள் (Ammonia-free dyes) மற்றும் அலர்ஜிகள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலான டைகள் பல கிடைக்கின்றன. டை அலர்ஜிக்கு உள்ளானவர், சரும மருத்துவரை அணுகினால், பாதுகாப்பான டை குறித்துச் சொல்லி, அதை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்றும் ஆலோசனை வழங்குவார்.
பொதுவாக டைகள் அலர்ஜியை ஏற்படுத்தும் என்றாலும், அவை கண்களுக்கு மிக தீவிரமான பாதிப்புகளை உண்டாக்காது. இருப்பினும், அலர்ஜி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைச் சந்திப்பது எப்போதும் நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



















