உடல் எடையைக் குறைக்க பரிந்துரையின்றி நாட்டு மருந்து; 'யூடியூப்' வீடியோவால் மாணவி...
கேரளா: வீடியோ புகாரால் தற்கொலை செய்த நபர்; பெண் மீது வழக்கு; மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவு என்ன?
கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியில் வசிக்கும் ஷிம்ஜிதா முஸ்தபா(35) என்ற பெண் கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார்.
அதில், பஸ் பயணத்தின்போது ஒரு நபர் தவறான நோக்கத்துடன் தன்னைத் தொட்டதாகத் தெரிவித்திருந்தார். அந்த நபரின் வீடியோவையும் ஷிம்ஜிதா முஸ்தபா வெளியிட்டார். அந்த வீடியோவில் இருந்த நபர் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக்(42) எனத் தெரியவந்தது.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் தீபக் அந்த வீடியோவைப் பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த தீபக் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

இளம்பெண் வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக அந்தப் பதிவைப் போட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ராகுல் ஈஸ்வர் என்பவர் டி.ஜி.பி-க்குப் புகார் அனுப்பியிருந்தார்.
இந்த விவகாரம் விவாதமானதை அடுத்து தாமாக முன்வந்து சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது மனித உரிமைகள் ஆணையம். போலீஸார் விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், நார்த் ஷோன் டி.ஐ.ஜி இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், பிப்ரவரி 19-ம் தேதி கோழிக்கோடு அரசு விருந்தினர் மாளிகையில் நடக்கும் சிட்டிங்கில் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட தீபக்கின் தாய் கன்யகா அளித்த புகாரின் அடிப்படையில் ஷிம்ஜிதா முஸ்தபா மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தை டீ-ஆக்டிவேட் செய்து வைத்துள்ளார்.
தீபக்கின் குடும்பத்தினருக்கு வழக்கு சம்பந்தமான அனைத்து உதவிகளையும் செய்வதாக ஆல் கேரளா மென்ஸ் அசோசியேஷன் தலைவர் வட்டியூர்காவு அஜித் குமார் அறிவித்துள்ளார்.












