ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்'...
சென்னை கள்ளச்சாராய வழக்கில் பெண்ணை சிக்கவைக்க ஸ்பெஷல் டீம் போலீஸ் போட்ட மாஸ்டர் பிளான்; திடுக் தகவல்
சென்னை, மயிலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் தெருவில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அங்கு சோதனை நடத்தி குடிநீர் கேன்களுடன் பதுக்கி வைத்திருந்த 20 லிட்டர் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வனிதாவை (35) மயிலாப்பூர் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சென்னைக்கு எங்கிருந்து கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுகிறது என அடையாறு மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து அடையாறு மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட வனிதா, அவரின் கணவர் அப்துல்லா ஆகியோரின் பின்னணியை விசாரித்தோம். இவர்கள் மீது ஏற்கெனவே கள்ளச்சந்தையில் மது விற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் தற்போது வனிதாவை இந்த வழக்கில் வசமாக ஒரு டீம் சிக்க வைத்திருக்கும் ரகசிய தகவல் எங்களுக்குக் கிடைத்தது. உடனே சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர், கள்ளச்சாராயத்தை 20 லிட்டர் தண்ணீர் கேன்களுடன் வைத்துவிட்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து பார்த்திபனைப் பிடித்து விசாரித்தோம். அப்போது அவர், வனிதாவை சிக்கவைக்க கள்ளச்சாராய கேனை அங்கு வைத்ததாகக் கூறினார். அதோடு பாத்திபன், மயிலாப்பூர் துணை கமிஷனரின் ஸ்பெஷல் டீமைச் சேர்ந்த 3 காவலர்கள் கூறியதால்தான் அப்படிச் செய்தேன் எனவும் உளறினார். உடனே இந்தத் தகவலை மயிலாப்பூர் துணை கமிஷனர், உயரதிகாரிகளுக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம். கள்ளச்சாராயத்தைக் கடத்தி வந்த குற்றத்துக்காக பார்த்திபனைக் கைதுசெய்துள்ளோம்" என்றனர்.
இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸார் கூறுகையில், ``சட்ட விரோத மது விற்பனை வழக்கில் தொடர்புடைய வனிதா, சில மாதங்களாக தண்ணீர்கேன் பிசினஸ் செய்து வருகிறார். ஆனால் ஸ்பெஷல் டீமில் உள்ள 3 காவலர்கள் வனிதாவிடம் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. ஏற்கெனவே கள்ளச்சாராய வியாபாரி பார்த்திபனுக்கும் வனிதாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. வனிதா மாமூல் கொடுக்காத ஆத்திரலிருந்த ஸ்பெஷ் டீம் போலீஸார், கள்ளச்சாராய வியாபாரி பார்த்திபன் மூலம் மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார்கள். இதற்காக பார்த்திபனை ஆந்திராவிலிருந்து கள்ளச்சாராயத்தை 20 லிட்டர் தண்ணீர்கேனில் அடைத்து சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறார் பார்த்திபன். பின்னர் வனிதாவின் தண்ணீர்கேன்களோடு கள்ளச்சாராய கேனையும் பார்த்திபன் வைத்துவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார். அதன்பிறகு ஸ்பெஷல் டீம் போலீஸார், கள்ளச்சாராயம் விற்பதாகக் கூறி வனிதாவைப் பிடித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அதனால்தான் நாங்களும் வனிதா மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தோம். தறபோது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாரின் விசாரணையைத் தொடர்ந்து உயரதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்" என்றனர்.

காவலர்களைக் காட்டிக் கொடுத்த புது சிம் கார்டு
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் கொடுத்த ரிப்போர்ட்டை அடுத்து ஸ்பெஷல் டீமில் உள்ள போலீஸாரை ரகசியமாக கண்காணித்தோம். அப்போது அவர்கள் சமீபகாலமாக குறிப்பிட்ட ஒரு செல்போன் நம்பருக்கு அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது. அந்த சிம்கார்டு விவரங்களை சேகரித்தபோது அதை பார்த்திபன் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. பின்னர் வனிதா கைதானதும் பார்த்திபனிடமிருந்து அந்த புது சிம் கார்டை ஸ்பெஷல் டீம் போலீஸார் திரும்ப வாங்கியிருக்கிறார்கள். விசாரணை முடிவில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.



















