தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: இரு அணிகள்... ஏராள சுயேச்சைகள் - களத்த...
குடிநீர் vs பல்லுயிர்: `மாமல்லன் நீர் தேக்கத்தின் இரு முகங்கள்'- உப்பங்கழியைப் பலி கொடுக்கிறதா அரசு?
செங்கல்பட்டு மாவட்டம், சென்னை அடுத்த நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் 342 கோடி ரூபாய் செலவில் புதிதாக மாமல்லன் நீர்த்தேக்கம் அமைகிறது. 4,375 ஏக்கர் பரப்பளவில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேமிக்கும் வகையில் அமைக்கப்படும் மாமல்லன் நீர்த்தேக்கம் சென்னையின் 6-வது நீர்த்தேக்கமாகும்.
இந்த நீர்தேக்கம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் என்றச் செய்தி வந்தவுடன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``நாளை முதல்வர் அடிக்கல் நாட்டப் போகும் “மாமல்லன் நீர்த்தேக்கம்” , பல சூழலியல் சிக்கல்களை ஏற்படுத்தப்போகிறது. இது குறித்து பல்வேறு அறிவியல் ஆய்வுகளை புறந்தள்ளி இந்த விழாவை நடத்தவேண்டிய அவசரம் ஏன்? மேலோட்டமாக பார்த்தால், ஒரு நீர்த்தேக்கம் தானே, நல்லதுதானே என்கிற எண்ணம் ஏற்படலாம்.

ஆனால் கழுவேலி மற்றும் உப்பங்கழி நிலப்பரப்பை முழுவதுமாக “நன்னீர் நிலமாக” மாற்றி, பல்லூரியத்தை சிதைத்து, பலரின் வாழ்வாதாரங்களை அழிக்கப்போகும் இந்த திட்டத்தை மறுபரீசலனை செய்வதுதான் சிறந்தது. முதல்கட்டமாக இந்த திட்டத்திற்காக நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவை ரத்து செய்ய வேண்டும். செய்வீர்களா முதல்வரே?" எனக் கேள்வி எழுப்பி, கோரிக்கை விடுத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து அ.ம.மு.க பொதுச்செயலர் டிடிவி தினகரன், ``செங்கல்பட்டு அருகே அமையவிருக்கும் புதிய நீர்த்தேக்கத்திற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு – புதிய நீர்த்தேக்கத்திற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் முன்பே அவசரகதியில் அடிக்கல் நாட்டுவது ஏன்?
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் அமைந்துள்ள கோவளம் உப வடிநிலப் பகுதியில் மாமல்லன் எனும் பெயரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னையின் புறநகர் பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே உவர்நிலமான உப்பங்கழி நீர்நிலையில் அமையவிருக்கும் இந்த புதிய நீர்த்தேக்கத்தால், தங்களின் மீன்பிடித் தொழிலோடு, ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் என அதனை சுற்றியுள்ள 10க்கும் அதிகமான மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதிய நீர்த்தேக்கத்திற்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளின் தன்மையை அறிந்து கொள்ள உதவும் நீரியல் ஆய்வுகள், நீண்டகால நிலைத்தன்மை, நிலத்தடி நீரின் போக்கு என எந்தவித ஆய்வுகளையும் முறையாக மேற்கொள்ளாமலும், அப்பகுதி மக்களின் கருத்துக்களை கேட்காமலும் அவசரகதியில் இத்திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நீரியல் வல்லுநர்களும் எழுப்பியுள்ளனர்.
எனவே, காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளிலிருந்து பாதுகாக்கும் உப்பங்கழிப் பகுதியின் தன்மையை முற்றிலுமாக மாற்றி புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதோடு, இதுபோன்ற திட்டங்கள் தொடங்கும் போது அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கோரிக்கைகள் ஒருபக்கம் என்றால், மற்றொருபக்கம் அரசு திட்டமிட்டபடி முதல்வர் ஸ்டாலின் மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.

அவர் உரையில், ``காற்றும் நீரும் இந்த பூமியில் இருப்பதால் தான் உயிரினங்கள் உருவாகி வாழ்கிறோம். நீரின்றி அமையாது உலகு என உலகப் பொதுமறையில் எடுத்துக்கூறினார் வள்ளுவர். இயற்கையோடு இணைந்தது தான் தமிழர் வாழ்வு. அதை ஒட்டியே திராவிட மாடல் அரசு நடைபெறுகிறது.
ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் தற்போது புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது. புதிய நீர்த்தேக்கம் மூலம் நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்க முடியும். 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இந்த நீர்த்தேக்கம் பயன்படும். 34 கி.மீ. நீள கரையுடன் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. சென்னையைச் சுற்றி செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகள் ஏற்கனவே உள்ளன.
நிதி மேலாண்மை போல் நீர் மேலாண்மையும் மிக மிக முக்கியம். தலைநகர் சென்னைக்காக தி.மு.க. அரசு எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறது. சென்னையின் முகமே மாறக்கூடிய வகையில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
'தமிழ்நாடு அரசின் சுமார் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமும், வெள்ள நீர் மேலாண்மையையும் காரணம்காட்டி அமைக்கப்படும் இந்த திட்டத்தால், என்னதான் சிக்கல்?' என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜனிடம் பேசினோம்.
அவர், ``மாமல்லன் நீர்தேக்கத் திட்டத்தின் முதல் கட்டத்தில் நெம்மேலி, கிருஷ்ணகாரனை, தண்டலம், பட்டிபுலம், திருப்போரூர், மாமல்லபுரம், சலுவான்குப்பம், பையனூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்குட்பட்ட, 4375 ஏக்கர் பரப்பளவில் வருவாய்த்துறை, நீர்வளத்துறைக்குச் சொந்தமான இடங்களில் நீர்த்தேக்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
1.655 TMC கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கம், மேற்கூறிய கிராம மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் எனவும், அருகாமை கிராமங்களின் வெள்ள பாதிப்பைக் குறைக்கும் எனவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
மேலோட்டமாக பார்த்தால் நீர்த்தேக்கம் நல்லதுதானே எனத் தோன்றும். ஆனால் நீர் தேக்கம் எங்கு அமைக்க வேண்டும் என்ற அறிவியல் வரைமுறை இருக்கிறது. சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக, ரூ.500 கோடி செலவில் கண்ணன்கோட்டை - தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது.
அதை நாம் எதிர்க்கவில்லை. காரணம், அந்த நீர்த்தேக்கம் சரியான இடத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் மாமல்லன் நீர்தேக்கப் பகுதி, உவர் நீரும், நன்னீரும் ஒன்று சேரக்கூடிய இடம்.
உவர் நீர் (Brackish water), சதுப்பு நிலம் (Marshland), ஈர நில / நீர் தேக்கம் (Wetland) ஆகிய மூன்றும் ஒன்றுபோலத் தெரிந்தாலும், அவற்றுக்கிடையே மிகப்பெரிய அறிவியல் வேறுபாடுகள் உள்ளன. தற்போது நீர்த்தேக்கம் அமைக்கவிருக்கும் நிலப்பகுதியில், நூற்றுக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
அவை அங்கு தொடர்ந்து வாழ்வதற்கு நன்னீரும் கடல் நீரும் சீராகக் கலக்க வேண்டியது அவசியம். இந்தச் சூழல் மண்டலத்தில், அணை கட்டி அந்த ஏரியை 'நன்னீர் ஏரியாக' (Freshwater Reservoir) மாற்றினால், அங்கிருக்கும் ஒட்டுமொத்த உயிர்சூழலும் தலைகீழாக மாறி, ஒட்டுமொத்தச் சூழல் மண்டலமே சிதைந்துவிடும்.
இதுதவிர, அந்தப் பகுதியில் இருக்கும் 16 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும், சதுப்பு நிலங்களில் கைகளால் இறால் பிடித்து வாழ்வாதாரம் நடத்துகின்றனர். எனவே, மாமல்லன் நீர் தேக்கம் அமைக்கும் அரசின் முடிவுக்கு எதிராக, ஏற்கெனவே நெய்தல் மக்கள் கட்சி மற்றும் சில மீனவப் பிரதிநிதிகள் தமிழ்நாடு மாநில கடலோர ஒழுங்குமுறை மண்டல (Coastal Regulation Zone Clearance - CRZ) ஆணையத்துக்குக் கடிதம் வாயிலாகக் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் இத்திட்டத்திற்கு அவசர அவசரமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் குறித்து ஐ.ஐ.டி. மெட்ராஸ், அண்ணா பல்கலை, அரசின் பிற துறைகள், பஞ்சாயத்து மற்றும் உள்ளூர் சமூகங்கள் ஆகியோருடன் கலந்தாலோசிப்பது அவசியம் எனத் தொழில்நுட்ப வல்லுனர் குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால், இப்படியொரு கலந்தாய்வுக் கூட்டமே நடத்தாமல் CRZ அனுமதி வழங்கியிருப்பது ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது.
அதே நேரம் ' இந்த நீர்த் தேக்கம் அமைத்தால் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கிறது' என்ற அரசு தரப்பின் வாதத்தையும் நாம் பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு அரசு வேறு வழிகளை சிந்திக்கலாம்.
முன்பு செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து விவசாய நிலத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவார்கள். இப்போது அப்படி இல்லை என்பதால், செம்பரம்பாக்கம் ஏரியை தூர்வாரி, அதன் கொள்ளளவை இரட்டிப்பாக்கினாலே போதும். அதேப்போல சென்னைக்கு நீர் கொடுக்கும் ஏரிகளைத் தூர்வாரி ஆழப்படுத்தினால், இந்த நீர்த்தேக்கத்தைவிட அதிக தண்ணீரை சேமிக்கலாம்.
மேலும், இந்தச் சூழலில் வெறும் 13 லட்சம் மக்களுக்கான தண்ணீர் என்பதை மட்டும் கவனத்தில் எடுக்க முடியாது. தற்போது நீர் தேக்கம் அமைக்கவிருக்கும் பகுதியில் 195 தனித்துவமான உயிரினங்கள் வாழ்கின்றன.

கழுவேலி பகுதியில் இதுவரை மொத்தம் 190 பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 65 இனங்கள் வலசை வரும் (Migratory) பறவைகளாகும். இப்பகுதியில் பறவைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருவது தரவுகளின் மூலம் தெரியவருகிறது.
குறிப்பாக நெம்மேலி உப்புப் பாத்திகள் (Nemmeli Salt Pans) இப்பகுதியின் மிக முக்கியமான பறவை நோக்கும் இடமாகும். 143 பறவை ஆர்வலர்கள் வழங்கிய 12,484 ஆய்வறிக்கை விவரங்கள்படியும், 381 பட்டியல்களின் அடிப்படையிலும் 1900 முதல் 2025 மே மாதம் வரையிலான காலப்பகுதியில், இங்கு வரும் 190 பறவை இனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நெம்மேலிப் பகுதி சென்னையின் புறநகர்ப்பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே உவர்நீர் ஈரநிலமாகும். மிக முக்கியத்துவம் வாய்ந்த உயிர்ப்பன்மயமிக்க அலையாத்திக் காடுகளைக்கொண்ட இப்பகுதி, கடலோடு முட்டுக்காடு வழியே பிணைக்கப்பட்டிருக்கிறது.
அதனால், கடலோடு நுண்ணூட்டச் சத்துக்களையும் உயிரினங்களையும் பரிமாறிக்கொள்ளும் ‘Bio corridor’ ஆகச் செயல்படுகிறது. பள்ளிக்கரணை போன்ற சிறப்புமிக்க நன்னீர் சதுப்புநிலங்களில் பார்க்க முடியாத ஏராளமான முதுகெலும்பற்ற உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன.

வடக்கிலிருந்து இமைய மலையைத் தாண்டிப் பயணிக்கும் பட்டைத் தலை வாத்து (Bar headed goose) முதலாகச் சிறிய ஆலா (Small Pratincole), Short toed snake eagle, திபத்திய மணல் புளோவர் (Tibetan Sand Plover), Chestnut winged cuckoo, Peregrine Falcon, கடல் ஆலா (White bellies sea eagle) போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பறவைகளையும் ஈர்க்கும் பகுதி இது. இதனை ஆழப்படுத்திக் கடலிலிலிருந்து துண்டித்து நீர்த்தேக்கமாக மாற்றுவது அப்பகுதியின் சூழலியல் தனித்தன்மையை சிதைத்து அதனை உயிரற்றதாக மாற்றிவிடும்.
திருநெல்வேலி, கன்னியாகுமரிப் பகுதியிலிருந்து அதிகமாக எடுத்துச் செல்லப்படுவது வெறும் ஜல்லி, மணல் அல்ல. அது ஒரு மாபெரும் மலையின் ஒரு பகுதி. இங்கு பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் அரசின் பிடிவாதம், பள்ளிக்கரணையில் கட்டுமானப் பணிக்கான அனுமதி வழங்கியது, இப்போது மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்க அடிக்கல் நாட்டியது என அரசின் செயல்பாடுகள் கவலையளிக்கிறது.
ஒட்டுமொத்தமாக அரசு சூழலியலுக்கு எதிராக செயல்படுகிறது எனக் குற்றம்சாட்டவில்லை. என்றாலும், அரசுக்கு தொலைநோக்குத் திட்டத்துடன், ஒருங்கிணைந்தப் பார்வை அவசியம் வேண்டும் என்பதை இந்தத் தொடர் சம்பவங்கள் உணர்த்துகிறது." என்றார்.


















