ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்'...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: இரு அணிகள்... ஏராள சுயேச்சைகள் - களத்தில் யார்... யார்?!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம், வருகிற ஏப்ரல் மாதத்தோடு நிறைவு பெறுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதனையொட்டி புது நிர்வாகிகளுக்கான (2026 - 2029ஆண்டிற்கான) தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 22ம் தேதி அன்று நடக்கிறது. இம்முறை இராம நாராயணன் அணி, நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. சங்கத்திற்கான தேர்தல் குறித்து இராம.நாராயணன் அணியின் சார்பில் போட்டியிடும் தயாரிப்பாளரும், மக்கள் தொடர்பாளருமான விஜயமுரளியிடம் பேசினோம்.

''எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது தான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான சங்கம் உதயமானது. அதற்கு முன்னர் சேம்பர் ஆகத்தான் இருந்தது. தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிலிருந்து இப்போது மு.க.ஸ்டாலின் வரை சங்கத்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள். முன்பெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் தலைவராக கோவை செழியன் இருந்தார். அதன் பிறகு தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., இப்ராஹிம் ராவுத்தர், கே.ஏ.முரளிதரன், டி.ஜி.தியாகராஜன், இராமநாராயணன் மூன்று முறை பதவி வகித்திருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி தாணு, விஷால், முரளி என்.ராமசாமி என பலரும் தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். இதில் முரளி என்.ராமசாமி மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். சங்கத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இப்போது ஓட்டுரிமை உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 1540 ஆகும். இந்த தேர்தலில் இராம.நாராயணன் அணியில் தலைவர் வேட்பாளராக முரளி என்.ராமசாமி, செயலாளராக டி.டி.ராஜா, சௌந்தரபாண்டியன், துணைத்தலைவர்களாக என்.விஜயமுரளி, மதியழகன் பொருளாளராக சி.வி.குமார், ஜாய், இணைச் செயலாளருக்கு தயா.பன்னீர் செல்வம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். செயற்குழு உறுப்பினர்களாக 26 பேர் போட்டியிடுகிறார்கள்.

மற்றொரு அணியான நலம் காக்கும் அணியின் தலைவர் வேட்பாளராக தமிழ்க்குமரன், செயலாளராக ராதாகிருஷ்ணன், கமீலா நாசர், துணை தலைவருக்கு கமலக்கண்ணன், ஆர்.கே.சுரேஷ், பொருளாளராக சுபாஷ் சந்திர போஸ், இணைச் செயலாளராக சுஜாதா விஜயகுமார் என போட்டியிடுகிறார்கள். இந்த அணியிலும் 26 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள்.
மேற்கண்ட இரண்டு அணிகள் தவிர, சுயேட்சை வேட்பாளராகவும் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள். தலைவர் பதவிக்கு டி.மன்னன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். கதிரேசன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், உதயா என பலரும் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். 26 செயற்குழு உறுப்பினர்களுக்கு 68 பேர் போட்டி போடுகின்றனர்.

இப்போது தலைவராக இருக்கும் முரளி என்.ராமசாமியின் சாதனைகளாக பல்வேறு சாதனைகள் இருக்கிறது. அதில் குறிப்பிடத்தகுந்த சாதனயாக , இராம நாராயணன் பதவியில் இருந்த காலத்தில் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களிடம் தயாரிப்பாளர்கள் வீடு கட்டிக்கொள்ள மகாபலிபுரம் அருகே பையனூரில் பத்தரை ஏக்கர் நிலம் பெற்று தந்தார். அடுத்தடுத்து வந்தவர்கள் அந்த நிலத்தை பதிவு செய்யாமல் இருந்தததை கவனித்து மாண்புமிகு முதல்வர் மற்றும் துணை முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்றோம். அவர்கள் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இருவரிடமும் பேசி துணை முதல்வரின் ஆணைக்கிணங்க புதுப்பித்து மீண்டும் பதிவு செய்துள்ளோம்.
கியூப் கட்டணம் வாரத்திற்கு ரூபாய் முன்பு ரூ.12,500 என்று இருந்ததை சிறு முதலீட்டு திரைப்படங்களுக்காக 50 திரையரங்குகள் வரை ரிலீஸுக்கு கியூப் கட்டணத்தை ரூ.3600 ஆக நிர்ணயிக்க வைத்தோம். இதனால் சிறுபட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் பயனடைந்து வருகிறார்கள். கடந்த 20 வருடங்களாக பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவுறாமல் வைக்கப்பட்டிருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை, முதல்வர், துணை முதல்வர் கவனத்திற்கும் கொண்டு சென்று, புதுப்பித்தோம். இது கடந்த 2022 ம் ஆண்டு வரை பதிவு செய்து வைத்திருக்கிறோம். இது போன்ற பல்வேறு சாதனைகளை எடுத்துரைக்கிறோம்.'' என்கிறார் விஜயமுரளி.
அனைத்து வேட்பாளர்களும் இப்போது மும்முரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.



















