மோடியின் தமிழக வருகை; மேடையேறப் போகும் கட்சிகள் எவை? - என்.டி.ஏ கூட்டணிக்கு அழுத...
`715 கோடிக்கு சொத்து; சகோதரியான மனைவி'- பெண் இன்ஜினீயரை திருமணம் செய்வதாகக் கூறி ரூ.1.53 கோடி மோசடி!
பெங்களூரைச் சேர்ந்தவர் நவ்யா ஸ்ரீ (29). சாஃப்ட்வேர் இஞ்ஜினீயரான நவ்யா தனது திருமணத்திற்கு வரன் தேடி மேட்ரிமோனியல் தளத்தில் பதிவுசெய்து வைத்திருந்தார். விஜய் ராஜ் என்பவர் நவ்யாவின் குடும்பத்தை அணுகி நவ்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். அதோடு தான் தொழிலதிபர் என்றும், தனக்கு ரூ.715 கோடி அளவுக்குச் சொத்து இருப்பதாகவும், வி.ஜி.ஆர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என்றும், கிரஸ்ஸர், லாரி, நிலம், ஏராளமான வீடுகள் இருப்பதாகவும் நவ்யாவிடம் தெரிவித்தார்.
மேலும் ரூ.715 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவு கைது செய்ததையும், ஜாமீன் வழங்கியதற்கான ஆவணங்களையும் நவ்யா குடும்பத்திடம் காட்டினார். இதை நவ்யா குடும்பத்தினர் நம்பினர். கடந்த ஏப்ரல் மாதம் நவ்யாவிடம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கினார். அதனைத் தொடர்ந்து தொழிலை இரண்டு பேரும் சேர்ந்து செய்யலாம் என்று கூறி, நவ்யாவிடம் வங்கி மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கிக்கொடுக்கும்படி கூறினார். நவ்யாவும் அதே போன்று செய்தார்.

நவ்யாவை தனது ஊருக்கு அழைத்துச் சென்று தனது தந்தை கிருஷ்ணப்பா, தாயார் நேத்ராவதி, சகோதரி சுஷிதீபா ஆகியோரிடம் அறிமுகம் செய்தார். விஜயின் தந்தை கிருஷ்ணப்பா தான் ஓய்வு பெற்ற தாசில்தார் என்று தெரிவித்தார். விஜய்யின் கம்பெனியில் நவ்யாவின் நண்பர்கள் ரூ.66 மற்றும் 23 லட்சத்தை முதலீடு செய்ய வைத்தார். பணத்தை திரும்பக் கேட்டபோது கோர்ட் தனது வங்கிக் கணக்கை முடக்கி வைத்திருப்பதாக விஜய் தெரிவித்தார். அதோடு விஜய் கோர்ட் உத்தரவை நவ்யாவின் பெற்றோரிடம் காட்டி அவர்களது நம்பிக்கையைப் பெற்றார்.
மேலும் அவர்களிடமிருந்தும் ரூ.30 லட்சத்தை வாங்கிவிட்டார். விஜய் வாங்கிய பணத்தை திரும்பக் கொடுக்காததால் விஜய் வீட்டிற்கு நவ்யா சென்றபோது அங்கு விஜய் ஏற்கெனவே திருமணமானவர் என்று தெரிய வந்தது. விஜய்யின் சகோதரி என்று முன்னர் சொன்னவர், விஜய்யின் மனைவி என்று தெரியவந்தது. விஜய்யும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து நவ்யாவையும், அவரது தோழிகளையும், பெற்றோரையும் ஏமாற்றி இருந்தனர். பணத்தை திரும்பக் கொடுக்கும்படி கேட்டதற்கு, நவ்யாவையும், அவரது தோழிகளையும் மிரட்டினார் விஜய். மொத்தம் ரூ.1.75 கோடியை விஜய் வாங்கி இருந்தார். அதில் 22.50 லட்சத்தை மட்டும் திரும்பக் கொடுத்திருந்தார். நவ்யா கொடுத்த புகாரின் பேரில் விஜய் மற்றும் இரண்டு பேர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.




















